சனி, 27 பிப்ரவரி, 2016

எங்கே அது?




எங்கே அது?
==================================ருத்ரா இ.பரமசிவன்


அச்சு எந்திரம் பெற்றுப்போட்டதில்
காப்பி தான் வந்தது!
மூலப்பிரதி இன்னும் வரவில்லை.
அதை "ஆத்மா" என்றார்கள்!
மன சாட்சி என்றார்கள்.
ப்ரம்மம் என்றார்கள்.
இதயமும் கல்லீரலும் நுரையீரலுமாய்
ஏதோ தேங்காய் நாரும் பஞ்சும் அடைத்த‌
மரப்பாச்சிகளாய்
உலா வருகின்றேன்.
எங்கே அது?
என்ன அது?
எதற்கு அது?
புரியவில்லை!
இருப்பினும் அந்த‌
மூலப்பிரதி இன்னும் வரவில்லை.
பெரிய பெரிய பெரிய‌
மனிதர்கள் அது பற்றிய‌
தேடுதல் வேட்டையில்
ஞானத்தை கூர் தீட்டுகிறார்கள்.
பாவம் என்கிறது அது!
மூளையை கசக்குவது இருக்கட்டும்.
மூளை நரம்பின் ந்யூரான் ஜங்ஷன்களில்
பொன்னம்பலங்களிலும்
வெள்ளியம்பலங்களிலும்
உள்ள‌
ஊர்த்துவ தாண்டவங்களில்
புல்லரிப்பதை விட்டு கொஞ்சம்
அறிவியற்புரிதலில் மூழ்கிப்பாருங்கள்
என்கிறதோ அந்த ஞானம்!
இந்த உயிரின் "நுரைச்சங்கிலி"யின்
ஒரு முனை இங்கே
இன்னொரு முனை எங்கே?
"அதான்யா இது"...
வாழைப்பழ ஜோக்காய்
வேதாந்தங்கள் சிரிக்க வைக்கின்றன.
"சார் என்ன பண்ணுகிறீர்கள்?
ஒரே சிந்தனைமயம் தானா?
அஹ் ஹா ஹா ஹா..."
அட்டகாசமாய் சிரித்துக்கொண்டே வந்து
உட்கார்ந்தார் எதிர்வீட்டு நண்பர்.

அவர் சிரிப்பில் அந்த "அச்சு எந்திரத்தின்"
கட கடப்பு இல்லை.
மூலப்பிரதியை எல்லாம் கசக்கிப்போட்டு
வீசி எறிந்து கொண்டிருந்தது
அவர் சிரிப்பு.
அந்த மனிதர் சிரித்துக்கொண்டிருப்பதை
நாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
நம் மனக்குகையுள் தொங்கிக்கிடக்கும்
வௌவ்வால்கள் எல்லாம்
சட சடத்து வெளியேறிவிடும்.
ஆனாலும் அந்த மனிதர்
சிரித்துக்கொண்டே இருப்பார்.
"விட்டுத்தள்ளுங்கள் சவத்தை" என்று
கட கட வென்று சிரிப்பார்.
அவர் மனைவிக்கு கேன்சர்.
அவர் மூளையில் கட்டியாம்.
பிள்ளைகள் எல்லாம்
கல்யாணம் ஆகியும்
மணமுறிவு வியாதியில்
மூலைக்கொரு பக்கமாய்
சிதறிக்கிடக்கின்றனர்.
"மாங்கல்யம் தந்துநானே
மம ஜீவன ஹேதுநாம்"களெல்லாம்
கோர்ட் படிகளில் நைந்து கிடக்கின்றன.
இதற்கெல்லாம் அவர் பயந்து போய்
எள் முடிச்சு தீபம் நவகிரகச்சுற்றல்கள்
அர்ச்சனை சீட்டுகள் ஹோமங்கள் என்று
சுருண்டு கிடக்கவில்லை.
ஆனால் இந்த சிரிப்பை மட்டும்
அவர் எல்லோரிடமும்
ஊடுருவ விடுகிறார் ஒரு
"நியூட்ரினோவைப்போல!".
அவரால் எப்படி
வெள்ளையாய் கள்ளமின்றி
பளிச்சென்று இப்படி சிரிக்க முடிகிறது?

அவரோடு நானும்
"அஹ்ஹா ஹா ஹா ஹா..."
என்றேன்.
எனக்கு புரியாதது
அவருக்கு புரிந்திருக்கிறது.
மூலப்பிரதி
எங்கோ அன்னத்தூவியிலும் அன்னத்தூவியாய்
அதோ "அடி முடி" காட்டாமல்
பறந்து போய்க்கொண்டிருக்கிறது.

============================================================










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக