திங்கள், 1 பிப்ரவரி, 2016

டிஜிட்டல் ரத்தம்






டிஜிட்டல் ரத்தம்
=================================================ருத்ரா


கல்வாரி பயணம் துவங்கியது.
மரத்துக்கே
சிலுவை பூட்டியது போல்
மரத்துப்போனதுகளுக்கே
மரப்பு ஊசிகள்
எத்தனை? எத்தனை?
பதினெட்டின் மின்னல் அரும்பு
மேல் உதட்டில் பரவியதும்
கைபேசிக்குள்
தலை கவிழ்த்து
கண்கள் இழக்கும்.
கருத்தும் சிந்தனையும்
பட்டன் பொறி தட்டும்
அட்வெஞ்ச்சரிஸம் மட்டுமே.
சினிமா பிதுக்கிய உணர்ச்சி ஜெல்லி
இருட்டையும் அள்ளி திங்க வைக்கும்.
விரலில் போட்டு வைக்கும்போது
அவனுக்கு
அவள் நிலவுப்பொட்டு
அமாவாசையாய் தெரிந்ததில்
கரும்பு வில் பூட்டி நிற்கும்.
அவளுக்கு அந்த
விரல் புள்ளி
மச்சமுள்ள மச்சானுக்கு
என்று ஏதோ சினிமா பாட்டில்
கிறங்கி நிற்கும்.
ஒரு "குவார்ட்டர் கட்டிங்கில்"
ஒன்பது பூத்துகள் "வெட்டப்படும்".
குத்துப்பாட்டுகளில்
தேசிய கீதங்களின்
"ப்ராய்லர்" கோழிக் கடைகள்.

இளைஞர்
முதிர் இளைஞர்
நடுவயது
நடுநடுங்கு வயது
என்று
தரம் தரமாய்
ஆண்கள் பெண்கள்
எல்லோருக்கும்
பெய்யும் மழை
வானம் கிழிந்து
மேகம் பிளந்து
பெய்யுமோர் பெரிய்ய்ய்ய்ய
பேய் மழை!
இலவசம் இலவசம் ....
மின்னணுப்பொறி  வடிவம்
திருவோடு  ஆகிவிடும்.
வாக்குகள் மார்பில்
ஆணி அறையப்பட்டு
முட்கிரீடம் அடித்த தலையுடன்
அந்த கட்டை வண்டியில்
ஜனாயகத்தின்
கல்வாரி யாத்திரை
டிஜிட்டல் ரத்தம் சிந்த..
துவங்கி விட்டது.

==========================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக