ஆகஸ்டுகள் எனும் ஆடுகள் மேய்த்து...
====================================ருத்ரா
இதுவரை
நம் மேய்ச்சல் நிலத்துக்கு
அவன் கொடுத்த ஆடுகளை யெல்லாம்
எண்ணிப்பார்த்து
ஆடுவோமே பள்ளு பாடுவோமே
என்று பாடிக்கொண்டே இருக்கிறோம்.
69 ஆடுகளாமே!
அலங்கார வண்டிகள்...
வானத்தில் புகையெழுத்துக்களால்
இன்னும்
விமானத்தைக்கொண்டு உழும்
அதே மூவர்ண வரிகள்..
வானொளிகளின் வழியாக
நம் வீட்டுக்குள் வந்து
ராணுவ முரசுகள் செய்யும் அதிர்வுகள்...
எல்லாம்
வழக்கம்போல
காது விடைத்துக்கொண்டு
தீனிக்கு அலையும்
ஆடுகளின்
வர்ண வர்ண சுதந்திரக்காட்சிகள்..
மின்னணுப்பொறியை
தட்டும் வரை வளர்ந்துவிட்டாலும்
ஆடு..புல்லுக்கட்டு..புலி
விடுகதை தீரவில்லை.
பஞ்சம்..பட்டினி..பிணி என்பதை
திருப்பி திருப்பி மொழி பெயர்த்தாலும்
லஞ்சம்..லாவண்யம்..அறியாமை என்று தான்
எதிரொலித்துக்கோண்டிருக்கிறது.
ஆட்கள் என்றால் என்ன?
ஆடுகள் என்றால் என்ன?
அம்பத்தொண்ணு விழுக்காடுகளில் தான்
இங்கே ஜனநாயகக் கூச்சல் காடுகள்.
ஆகஸ்டு என்றால்
சுதந்திரம் என்ற வெளிச்சம்
நம் காலண்டர்களில் பிரசவித்த
மாதம் ஆயிற்றே!
ஆனால் இவைகளுக்கு தெரிந்த மாதம்
மே...மே...மே..தானே!
பாவம் போகட்டும் விடுங்கள்
அந்த ஆடுகளை!
தங்கள் வெளிச்சத்தையெல்லாம்
விழுங்கித்தீர்க்கும்
இருட்டின் குத்தாட்டங்களைத்தான்
அவை மேய வேண்டுமாம்.
=====================================
வியாழன் 27 ஆகஸ்டு 2015
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக