ஞாயிறு, 30 ஜூன், 2019

இ.எம்.ஜோசஃப் எனும் இனிப்பான எரிமலையே.





இ.எம்.ஜோசஃப் எனும் இனிப்பான எரிமலையே.
=======================================================ருத்ரா.

அன்பான தோழரே!
எப்படி உங்கள் இதயத்தை
உங்களுக்கு எதிராக துடிக்கவைத்தீர்?
உங்கள் சொற்பொழிவுகளில்
இதயம் இல்லாத இரும்புகள் கூட‌
மனித நேயம் பற்றி சிந்தித்து
உருகத்தொடங்கிவிடுமே!
எப்படி நிகழ்ந்தது இது?
ஏன் நிகழ்ந்தது இது?
என்று நாங்கள் மனம் துடித்து
கேள்விகள் நீட்டினாலும்
சிரித்துக்கொண்டே விடையளிப்பவர்
அல்லவா நீங்கள்?
மார்க்ஸின் டயலக்டிகல் மெடீரியலிஸம்
எப்படி வேண்டுமானாலும் நிகழும்
என்பீர்களே.
பிறப்பு இறப்பு என்ற
முரண்பாடுகளின் விளைவுதானே இது
என்பீர்கள்.
ஆம்
பிறப்பு இறப்பு எனும் சமன்பாடுகளை
உடைத்து விட்டீர்கள்.
உங்கள் தொண்டும் உழைப்பும்
உழைக்கும் வர்க்கத்தின்
வேர்வைத்துளிகளில்...
அதிலிருந்து பிறக்கப்போகும்
ஒரு யுக சந்திப்பில்...
சுடர்ந்து கொண்டே இருக்கிறது.
கண்ணீரைக்கொண்டு
அந்த எரிமலையை
எப்படி அவித்துக்கொள்ள முடியும்?
புன்முறுவலுடன்
இனிக்கும் எரிமலையை
எப்போதும் எங்கள் முன்
நிழலாட விட்டு
வெறுமே ஓய்வு எடுக்கவா
நீங்கள் மறைந்திருக்கிறீர்கள்?
இல்லை..
உங்கள் பேச்சுகள் எல்லாம்
மூளி வானத்தில்
விடியல்களை செதுக்க வைக்கும்
வல்லமை பெற்றதல்லவா!
விடியல்களின்
விளிம்பு விழுதுகளை
எங்களோடு விட்டுச்சென்றிருக்கிறீர்கள்.
விடியட்டும்.
நாங்களும் உங்களோடு விழிப்போமாக!

========================================================



வெள்ளி, 28 ஜூன், 2019

ஆகாசப்பந்தலிலே...


ஆகாசப்பந்தலிலே...
========================================ருத்ரா


...பொன்னூஞ்சல் ஆடுதம்மா!

சபாநாயகர் மீது
நம்பிக்கை இல்லா தீர்மானம்.

எதிர்க்கட்சிகள்
துருப்புச்சீட்டை இறக்கவேண்டும்.
ஏனோ தெரியவில்லை.
மாயக்கைகளின் மாயவிரல்களில்
சூத்திரக்கயிறு மூலம்
ஆடும் பொம்மலாட்டம் இது.
சட்டப்படி நியாயப்படி
நடப்பதாக எத்தனைபோக்கு காட்டினார்கள்?
சிறு பிள்ளைகளுக்கும் தெரியும்
அங்கு இருப்பது
சிறுபான்மை தான் என்று.
ஜனநாயகத்தின் எந்திரங்கள் எல்லாம்
செயலிழந்த வேளையில்
சகுனிகளின்
பகடை உருட்டலில் மட்டுமே
அரங்கேறும் பாரதம் இது.
சும்மா
தர்ம யுத்தம் தர்ம யுத்தம் என்ற‌
பாஞ்ச ஜன்ய முழக்கங்களால்
நம் சண்ணுக்குத் தெரியாத‌
அந்த அதர்மத் திரைகள்
அகன்று விடும் என்ற
நம் நம்பிக்கை எனும்
பொய்க்கால் குதிரை
ஆட்டங்களைக் கண்டு
விசில் அடித்துக்கொண்டு
இருப்பதை தவிர‌
வேறு வழி ஒன்றும்
இருப்பதாய் தெரியவில்லை.
கூட்டணிக்கயிறு கொண்டு இந்த‌
நெல்லிக்காய் மூட்டையை
எத்தனை நாள் அடைகாப்பது?

நெஞ்சு பொறுக்குதில்லையே..
நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்த நிலைகெட்ட மனிதர்களை
நினைந்து விட்டால்...

======================================================




வியாழன், 27 ஜூன், 2019

பூகோள புத்தகம்


பூகோள புத்தகம் 
=====================================ருத்ரா



உலகத்தின் முக்கால் பங்கு
தண்ணீர் என்று
பூகோள புத்தகம் சொன்னது.
கடைசியில் இருந்தது
பிழை திருத்தம்.
அது தண்ணிர் அல்ல
 "கண்ணீர்" என்று.

======================================


புதன், 26 ஜூன், 2019

"ஊமைப்படம்"

Friday, May 23, 2014

"ஊமைப்படம்"





"ஊமைப்படம்" 
===============================ருத்ரா இ.பரமசிவன் 

அவள் இரைந்து கத்தினாள். 
பற்கள் கடித்தாள். 
மார்பில் கைகளை அடித்துக்கொண்டாள். 
ஆக்ரோஷம் ஆக்ரோஷம். 
டிஃபன் தட்டை ணங்கென்று 
வைத்த போதும் 
காஃபிக்கு நுரை மகுடம் சூட்டி 
சூடாகவே தந்தபோதும் 
அவள் உடம்பு நடு நடுங்க 
குரல் எழுப்பினாள். 
கண் விழிகள் 
கரும் கடுவாயின் 
வெள்ளை விழிகளையும் 
துப்பாக்கி குண்டுகளைப்போல‌ 
க‌ருங்க‌ன‌ல் துண்டுக‌ளையும் 
ப‌ட‌ம் காட்டின‌. 
புள்ளி போட்ட‌ மார்பிள் ஷிஃபான் கூண்டுக்குள் 
இருந்துகொண்டு 
கொசுவ‌த்தை சொடக்கு போட்டு 
பேசிக்கொண்டே போனாள். 

நான் "ம்யூட்டிங்கில்" 
இருந்தேன். 
"முப்பது"க‌ளின் ஒரு ஊமைப்பட‌ம் 
ஓடிக்கொண்டிருந்தாலும் 
அவ‌ள் முக‌ ந‌ர‌ம்புக‌ள் 
எரிம‌லையின் வ‌யிற்றைத் 
திருகி திருகி ஃபிடில் 
வாசித்த‌து. 
வ‌ந்த‌தும் வ‌ராத‌துமாய் 
அவ‌ள் மீது 
என்ன‌ சொல்லை வீசியிருப்பேன்? 
இந்த‌ எதிர்வினைக‌ளின் க‌ன‌ல்ப‌ரிமாண‌த்தை 
வைத்து 
நியூட்ட‌னை த‌லைகீழாக‌ நிறுத்தி வைத்துக்கொண்டு 
கேட்டேன். 
அந்த நேரான‌ சொல் தான் என்ன‌?. 
சொன்னவன் எனக்குத் தெரியாதா? 
இருந்தாலும் கேட்டேன். 
முக‌ம் க‌ழுவிக்கொண்டு 
அமைதியாக‌ நான் அறைக்குள் போய்விட்டேன். 

அவ‌ள் 
இன்னும் அம்புப்ப‌டுக்கை த‌யார்செய்து 
அதில் 
ர‌த்த‌மாக‌த்தான் ச‌த்த‌ம்போட்டாள். 
நான் என்ன‌ அப்ப‌டி கேட்டுவிட்டேன். 
மீண்டும் அமைதியாய் 
முக‌ம் துடைத்துக்கொள்ள‌ 
க‌ண்ணாடி பார்த்தேன். 
ட‌ப்பென்று க‌ண்ணாடி சித‌ற‌த‌ல்க‌ள். 
கீழே விழுந்த‌ சில்லுக‌ள் எல்லாம் 
துண்டு துண்டாக‌ தெரிந்த‌து. 
குரூர‌க்கோரைப்ப‌ல் தெரிந்த‌து. 
ர‌த்த‌ம் சொட்டிய‌ ச‌வுக்கு 
என் க‌ழுத்தில் வ‌ல்லாட்டுபோல் 
தெரிந்த‌து. 
நாகரிகத்தில் 
முடி சூட்டிக்கொண்ட‌ 
என் அகலமான‌ 
ஸ்மார்ட் ஃபோன் 
கீழே விழுந்து கிட‌ந்த‌து. 
அத‌ன் "அண்ட்ராய்டு"க்குள் 
வ‌ரை 
அந்த‌ அசிங்க‌த்தின் கோர‌ம் 
வ‌ர்ண‌மாய்த் தெரிந்த‌து. 


================================ருத்ரா இ.பரமசிவன்

13 ஜூன் 2013

ஒரு தமிழ்த்தாத்தா

ஒரு தமிழ்த்தாத்தா
=======================================================ருத்ரா


"தமிழா! தமிழா!

இக்குரல் உனக்கு கேட்கிறதா?

கல்லும் மண்ணும்

அந்த நெருப்புக்குழம்பிலிருந்து

உருவானபோது உயிர்த்த‌

அந்த உயிர்த்தொகுதியிலிருந்து தான்

உன் எட்டுத்தொகையும்

பத்துப்பாட்டும்

உயிர்த்ததென்று

ஒரு பழம்பெருமை பேசும்

நோயில் நாம் கிடக்கின்றோம்.

இது தமிழ் குமிழியிட்ட போதே

தோன்றிய "பேலியோ சின்ட்ரோம்"நோய்.

"நோய் நாடி நோய் முதல் நாடி

வாய்நாடி வாய்ப்பச் செயல்."

அந்த "நோய் முதல் நாடிய"போது

பல லட்சம் ஒளியாண்டு தூரத்தில்

உள்ள

ஏதோ "ஒரு நாவலந்தீவாய்"

ஒரு தலைகீழ் புவி ஈர்ப்பு விசை உள்ள‌

அந்த தொங்கு மண்டலத்தில்

ஆங்கிலப்படம் "அவதாரில்"

காண்பது போல் உள்ள‌

ஒரு மண்ணில் இருந்து

அந்த "தமிழ் ஏலியன்"

தன் ஒளி எனும்

தன் அறிவு எனும்

தன் உயிர் எனும்

மகரந்தங்களை இந்த‌

தமிழ் நாட்டில் தூவியிருக்குமோ

என்று தோன்றுகிறது."


என்னை முற்றிலுமாய் சோதித்த‌

மூளை நரம்பியல் நிபுணர்

என் உறவினர்களிடம் கூறுகிறார்.

மூளையில் உள்ள‌

பர்க்கிஞ்சே செல்களில்

"ப்ரேன் காஸ்மாலஜி"

எனும் ஆயிரக்கணக்கான‌

பரிமாணங்களை சுருட்டி மடக்கிய‌

(கர்ல்டு அப் டைமன்ஷன்கள்)

ஒரு நரம்பியல் வெளி

(நியூரல்  ஸ்பேஸ்) இருக்கிறது.

அதன் நியூரான் கதிர்வீச்சின் காரணமாய்த்தான்

இவர் இப்படியெல்லாம் கூறுகிறார்.

இவர் கூறுவது

விஞ்ஞான அடிப்படை.

தர்க்கவியல் எனும்

சிந்தனை ஆற்றுப்படையின்

கசிவுகள் தான்.

இருப்பினும் இவர் சங்கிலியால்

பிணைக்கப்பட தேவையில்லை.

"நோ..நோ..நான்

ஏதோ ஒலிக்குறிப்பில்

புரிய முடியாத வகையில்

(நான் டீ சைஃபரபிள்)

ஏதேதோ ஒலி தருகிறேன்.

எனக்குத்தெரிகிறது

அதில் ஒரு "மறை மாத்திரை" இருக்கிறது.

அதன் ஒலிப்பிசிறுகளில்

நேனோ அதிர்வுகள் உள்ளன.

அது காஸ்மிக் தமிழாலஜி

நான் ஏதேதோ ஒலிக்கின்றேன்."


அந்த டாக்டர் சொல்கிறார்.

இவரை தனியறையில்

ஆனால் மிகவும் சக்திவாய்ந்த‌

ஆர்டிஃபிசியல் இன்டெல்லிஜென்ஸ் மூலம்

இயங்கும் கணினிகளின் அறையில்

அடைத்து வையுங்கள்.

...............

..................

"முடியாது..முடியாது

நான் தமிழர்களின் ஒலிவெள்ளத்துள் தான்

இருப்பேன்"

.....

நான் வீறிட்டு அலறியது கண்ட‌

என் கொள்ளுப்பேரன்

தாத்தா படுத்திருங்கள்.

உங்களுக்கு ஒன்றுமில்லை

என்கிறான்.

============================================================

திங்கள், 24 ஜூன், 2019

வாழ்க்கை ஒரு தாகம்

வாழ்க்கை ஒரு தாகம்

வா ழ்க்கை ஒரு தாகம் 



வாழ்க்கை ஒரு தாகம் 
=======================================================
ருத்ரா இ பரமசிவன் 





கவலை... கண்ணீர் 
இவை உனக்கு உன்மீது வந்து 
எப்போது 
கையெழுத்து போட்டன? 
பிறந்த உடனேயே 
அழுது ஒலிபெருக்கியிருப்பாய் 
அது உன் வரவின் அடையாளம். 
கண்ணீரும் கசிந்திருக்கும் 
அது சின்னப்பூவின் பளிங்குத்துளி 
கண்ணீர் அல்ல. 
உன் விடலைப்பருவம் முதல் 
கவலையின் ரேகைகள் உன் மீது 
ஜியாமெட்ரி போடவில்லை. 
அன்று உன் பூச்சிமயிர்களில் 
ஒரு மெல்லிய பிக்காஸோ ஓவியத்தின் 
தூரிகை இழைகள் சுகமாய் வருடின. 
ஆம் 
அப்போது உன் முன்னே 
ஒரு பிஞ்சுப்பெண் நிழல் காட்டினாள். 
காதல் ஒரு பொய் மெய் இன்பமாய் 
அவள் புன்னகைக்கீற்றில் 
புல்லரிக்கிறது. 
அந்த நிழலைப்பிடித்து 
நிஜமாக்கும் வேட்டையில் தான் 
உனக்கு 
வாழ்க்கையின் கசிவு வலிகள் 
வருடிச்செல்கின்றன. 
வயது முறுக்கு அவிழ்ந்த போது 
வாழ்க்கையின் முறுக்கு 
உன்னைப்பற்றிக்கொள்கிறது. 
கவலையும் கண்ணீரும் 
அதன்பாதையை 
வெளிச்சம் போட்டு காட்டுகிறது. 
ஒவ்வொரு மைல்கல்லாய் 
கடந்து வரும்போது 
அந்த காக்கையைபோல 
நீயும் 
ஒவ்வொரு கல்லாய் போட்டு 
தாகம் தணித்துக்கொள்கிறாயே! 
உன்னால் இது எப்படி முடிந்தது? 
ஆம் 
வாழ்க்கை ஒரு தாகம். 

====================================
07.10.2016

யோகாவும் மோப்பம் பிடிக்கும் நாயும்

யோகாவும் மோப்பம் பிடிக்கும் நாயும்

===================================================ருத்ரா



உலக மகா யோகா தினத்தில்

அந்த "மோப்பம் பிடிக்கும்"

ஜாதி நாய்கள்  கூட‌

யோகா செய்து அசத்தியதாமே.



அது சரி.

அதுக ரொம்ப கூர்மையா

மோப்பம் புடிக்கும்னு சொல்றாங்களே.

எங்கேயோ கொண்டுபோய்

குப்பை மாதிரி குவிச்சு வச்சிருக்கிற‌

அந்த "வாக்கு எந்திரங்கள்" பக்கம்

அதை

போக விட்ராதீங்க.

அப்றம் எல்லாமே குப்ற கவுந்து

யோகா பண்ண ஆரம்பிச்சிர

வேண்டியது தான்.



=====================================================
22.06.2019