ஞாயிறு, 23 பிப்ரவரி, 2020

அண்ணே..அண்ணே

அண்ணே..அண்ணே
=========================================ருத்ரா
(நகைச்சுவைக்காக)



"அண்ணே அந்த மண்டலத்துக்குப்போகணும்னா
"இஸ்ரோ" வழியாத்தான் போகணும்மா அண்ணே?"

"என்னடா மண்டலம் கிண்டலம்னு சொல்றே.
எதைச்சொல்றடா நீ?"

"அதாண்ணே..அந்த "வேளாண் மண்டலம் வேளாண் மண்டலம்னு
சொல்றாங்களே.அதத்தாண்ணே சொல்றேன்.
சந்திர மண்டலத்துக்கு அடுத்தால தானே அது இருக்கு?"

"ஏய்..ஏய்ய்..அடேய்.."டெல்டா மண்டையா" உன்னே...."
(அடிக்க கை ஓங்குகிறார் இவர்.அவர் தப்பி விடுகிறார்)


===================================================================

தாமிரபரணி.





தாமிரபரணி.
======================================================ருத்ரா

பளிங்கு நீரை
எங்கள் உயிராக்கி பயிராக்கி
மண்ணின்
பரிணாமத்தை
மலர்த்திக்காட்டி
ஓடுகின்ற பொன்னின் பொருநையே
வாழி நீ வாழி!

கல்லிடைக்குறிச்சி
கள்ளிக்காடாயிருக்கும்
நீ
வரவில்லை என்றால்!

அம்பாசமுத்திரம்
வம்பாய் வறண்டு தான் கிடக்கும்
நீ
வரவில்லை என்றால்!

சேரன் மாதேவி
சோறு கண்டிருப்பாளா
நீ
வரவில்லை என்றால்!

நெல்லைச்சீமை
இல்லை சீமை ஆயிருக்கும்
நீ
வரவில்லை என்றால்!

சிந்து பூந்துறையும்
சீரிழந்து நிற்கும்
நீ
வரவில்லை என்றால்!

திருவைகுண்டம்
வெறும் வைகுண்டம் ஆகியிருக்கும்
நீ வரவில்லை என்றால்!

ஆறுமுகன் ஏரி
மாறு முகம் கொண்டு பாழ் பட்டிருக்கும்
நீ
வரவில்லை என்றால்!

காயல் பட்டினமும்
காய்ந்தே கிடந்திருக்கும்
நீ
வரவில்லை என்றால்!

வங்காள விரிகுடாவும்
அலை விரியாக்  கடலாகும்.
நீ
வரவில்லை என்றால்!

"திருச்சீர் அலைவாய்" இல்லாத
திருமுருகாற்றுப்படைதான்
நமக்கும் கிடைத்திருக்கும்
நீ
வரவில்லை என்றால்!

செலவாய் செலவாய்  எங்களுக்கு
இழப்புகள் எத்தனை வந்தாலும்
வருவாய் வருவாய் எங்களுக்கு
வருவாய் அருள்வாய் பல கோடி!

எங்கள்
உயிரினும் மேலான பொருநையே
ஊழிகள் பலவாக ஓடிவிடினும்
வாழி நீ !வாழி நீ!!
எங்கள்
நீடு வளர் பொருநையே !

=====================================================






சாய்வு நாற்காலி........

சாய்வு நாற்காலி........ 
===========================ருத்ரா இ பரமசிவன்


"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" 
என்று 
நாலாங்கிளாஸில் சத்தம் போட்டு படித்தோம். 

ஒன்றும் புரியவில்லை. 

"அன்னையும் தந்தையும் தானே"... 
அப்போதும் எம்.கே.டி.பாகவதரின் 
கணீர்க்குரலில் வடிந்த தேனை 
நக்கியவர்களாக மட்டுமே நாம். 

அங்கு அம்மா வெறும் சும்மா. 

"அன்னையின் ஆணை" படம் பார்த்த போதும் 
நடிகர் திலகத்தையும் நடிகையர் திலகத்தையும் 
ரசித்து போற்றினோம் 

அன்னை அங்கு வரவில்லை 

"தாயில்லாமல் நானில்லை" என்று 
வாத்தியார் வாயசைத்து நடித்தபோதும் 
நாம் வாயில் ஈ நுழைந்தது தெரியாமல் 
படம் பார்த்தோம். 

தாயின் பக்கம் நாம் போகவே இல்லை 

"சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு" என்று 
அன்று 
அவள் நம்மை தன் இதயத்தில் 
சாய்த்திருந்தது எல்லாம் 
இன்று 
இந்த‌ "சாய்வு"நாற்காலியில் ம‌ட்டுமே 
நினைவுக்கு வ‌ந்த‌து!

எனது அந்திவானம் 
என்னை மறைக்க 
வந்து விட்ட வேளையில்
இன்னும் ஒரு விடியலாய்
அம்மாவின் தோளில் நான்
சாய்ந்தாடும் 
இன்னும் ஒரு குழந்தையாய் நான்.
அம்மா பற்றிய 
பழைய சினிமா பாட்டுகள்
என் சுகமான தொட்டில்.



==============================================

வியாழன், 20 பிப்ரவரி, 2020

விஜய்

விஜய்
================================================ருத்ரா

திரைப்படங்களின்
நிழல்களுக்குள்
மக்களின் ரத்த ஓட்டங்கள்
சூடேறுவது
ஒரு சமுதாய ஆபாசம் என்றே
சிந்தனையாளர் சிந்திக்கிறார்கள்.
மக்கள்
ஒரு கூட்டமாக இல்லாமல்
தனி மனித மலர்ச்சிகளின்
தொகுப்பாக உருவாகுவதே
பரிணாம இயலின் சிகரம் எனலாம்.
மேலை நாடுகள்
அந்த மலையின் உச்சியை நோக்கி
சென்று கொண்டிருக்கின்றனவா
இல்லையா
என்பதும் கேள்வி நிலையில் தான்
உள்ளது.
எம் ஜி ஆர் தொடங்கி
ஜெயலலிதா உள்ளிட்டு
இந்த அரிதார அலப்பறைகள்
மக்களை
மந்தைகளாகத்தான்
மிச்சப்ப்டுத்தி இருக்கின்றன.
நம் நாட்டில்
சாதிகளும் மதங்களும்
இந்த மக்களை
மானுடம் என்பதன் ஒட்டுதலே
இல்லாத‌
வறட்டு அச்சுகளில் தான்
ஊற்றி வார்க்கின்றன‌
என்பதே
நம் நீண்ட வரலாறு.
அந்த மலைப்பாம்பின் விழுங்கலில்
மனிதத்தன்மையின்
எலும்புகள் எல்லாம்
நொறுங்கித்தான் கிடக்கின்றன.
இந்த லேசர் லைட்
சாக்கடை மழையில்
ரஜனி என்ன?
விஜய் என்ன?
எல்லாருமே
மக்களுக்கு வேடிக்கை காட்ட வந்தவர்களாய்
மக்களை வேதனைகளின் வாடிக்கைகளில்
வாட்டி வதக்கி
உப்புக்கண்டம் போடுபவர்களாகத்தான்
இருக்கிறார்கள்.
இந்த இருட்டு
எப்போது ஒளியால்
கீறப்படப்போகிறது?
விடியல் வெகு தூரம் இல்லை என்று
நம்புவோமாக!

___________________________________________________________________



காதலுக்கு கண்ணில்லை.

காதலுக்கு கண்ணில்லை.
‍‍‍‍_________________________
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

கண்ணில்லை தான்.
அதனால்
விழியாவும் முகம் ஆச்சு.
முகம் யாவும் விழி ஆச்சு.



உன்னைக்காணாத கண்ணும்..
____________________________‍‍‍‍_____________

அவளைக்"கண்டதில்லை."
விரல்கள் ப்ரெய்லி ஆயின.
தடவு மொழியில்
தடவு இன்பம்.
கண்டேன் கண்டேன்
அந்த எழுத்துக்கள்
அவள் "பெயர்".
அதுவும் நானாக வைத்த
பெயர்.

______________________________________________



பொன்சிறகு
_____________

மனதைக் கண்கள் ஆக்கி
தரிசித்துக்கொண்டோம் அந்த‌
காதல் பொன் சிறகை!


காதலுக்கும் ஒரு கண்ணாடி.
____________________________

கிட்டப்பார்வையில்
அவள் நகவளைவுக்குள்
ஆயிரம் நிலாப்பிறைகள்.
தூரப்பார்வையில் அவள்
நட்சத்திரங்களின் பூ மழை!


________________________________________________

திங்கள், 17 பிப்ரவரி, 2020

அழல் நெய் கலிங்கம்....பொழிப்புரை

அழல் நெய் கலிங்கம்.
=============================================

குரவமும் மரவமும் கொழுநிழல் தூஉய்
வேங்கை வரிய சூர்நனி இருட்சுரம்
கடாஅத்த அகலம் மள்ளல் பொருதாங்கு
நிலம் அதிர் பொறி கழல் ஒலித்த செய்தியில்
குறி இடம் விரைய மெல் இறை நெகிழ
அவிழ் விழி அம்பில் காதல் தைப்ப‌
கழைபடு அடுக்கத்து நாடன் நந்தும்
ஆரிடை ஏகினள் அவிர்தரு மாமை
அழல் நெய் கலிங்கம் உரிஉடுத்தன்ன‌
நோன்ற நோக்கில் காடு பெயர்ந்தாள்.
"வேலாண்டான்" அவள் வேல்விழி தாண்டான் 
ஆழ் விழி ஆழம் தோற்றான் வென்றான்.

========================================ருத்ரா

பொழிப்புரை 
------------------------------------------------------------------------

அழல் நெய் கலிங்கம்.

=====================================ருத்ரா.

குரவம் மற்றும் மரவ மரங்கள் தூவிய‌ அடர்நிழல் செறிந்த காட்டில் வேங்கை மரமும் தன் வரிகளால் அச்சமூட்ட‌ விளங்கும் இருளான காட்டுவழியை  அகன்ற வீரம் செறிந்த மார்பனான தலைவன் போர்க்களம் புகுவது போல் கடந்து முன்னேறுகிறான். அப்போது அவன் காலில் உள்ள வேலைப்பாடுகள் நிறைந்த அவன் கழல் நிலம் அதிர ஒரு செய்தியை நுண்மையாக தலைவிக்கு ஒலிபரப்புகிறது. அவன் தன் காதலியை சந்திக்கும் இடத்தின் குறிப்பை அல்லது குறியை விரைவாக தெரிவிக்கிறது.அப்பொழுதே காதலியின் அழகிய மெல்லிய் முன் கை மெலிந்து வாடி வளைகளை நெகிழ்த்துகிறது.நுண்மையான அந்த பசலை நோய் (அதாவது காதலனைப் பிரிந்த  துன்பம்) அவளை வதைக்கிறது. ஆனால் அவள் விழிகளோ கூரிய அம்பாக அவிழ்ந்து தலைவனை காதலால்
தாக்குகின்றன.அவளும் அந்த மூங்கில் காட்டு மலை அடுக்குகள் நிறைந்த நாட்டவனான தலைவனை நோக்கி அந்த நெடிய வழியில் நடந்தாள். அந்த பிரிவு நோய் எரிக்கும் துன்பமாய் 
அவளை போர்த்தியிருக்கிறது.நெருப்பு இழையில் நெய்த ஆடையை உடுத்தியிருப்பது போன்ற துன்பத்தில் அவள் அந்த காடு நோக்கி நடந்தாள்.
போரில் பல வேல்களை வெற்றியுடன் கையாண்ட அவன் அவளது ஆழம் மிக்க விழிகளை வெல்ல முடியவில்லை.அதில் அவன் தோற்றுபோகிறான்.
ஆனால் அவள் காதலை  அவன் வென்று விடுகிறான்.

==============================================












வேலன்டைன் ‍..3



துடியன்ன இமைகள் காட்டுதி
=====================================
ருத்ரா இ பரமசிவன்



ஈயல் மூசு அடர்கான் அறையிடை
ஆறு உய்த்தன்ன ஏகுவன் ஆகி
ஆளித் தடம் ஒற்றி ஆர்சிலை சிலம்ப‌
பொருள்வயின் பிரிந்தான் கண்ணுள் அடைந்து
தும்பி இனங்கள் அலமரல் வெளியிலும்
துடியன்ன இமைகள் காட்டுதி நீயோ?
மென்மயிர் இறையின் நெகிழ்வளை காட்டி
இறைஞ்சும் அவிர் ஒலி பரப்புதி என்னை?
ஓங்கல் இடையும் நெறித்தே நோக்கி
விடியல் காட்டி விரையும் மன் அறிதி.
பசலை நோன்றனை பூவின் மஞ்சம்
அல்ல இஃது கடுவாய் முள்ளின் குடுமியென‌
கணந்தொறும் கணந்தொறும் கரைதல் ஆற்றாய்.
தீர்க நின் படரே. கொம்பொலி கேட்கும்
அவன் கால் சுவட்டின் இன்னொலி இழைத்து.

================================================