திங்கள், 3 ஜூலை, 2023

டேட்டாக்களின் ஆரண்யகாண்டம்.

 

டேட்டாக்களின் ஆரண்யகாண்டம்.

____________________________________________

சேயோன்.



சாதி எனும் தீ பிடிப்பதற்கு

காரணம் 

மதங்களும் அந்த புராணங்களும்

கடவுள் நம்பிக்கைகளும் தானே.

சாதி அடுக்குகள் 

இடைவெளியில் தங்களை தாங்களே

மிதித்து கூழாக்கிக்கொண்டு

இந்த மக்கள் 

எந்த மனிதத்தை மலர வைக்கமுடியும்?

சிந்தனையின் கூர் தீடிய அம்புகள்

அந்தப்பக்கம் குறிவைக்கப்படுவதே இல்லை.

ஏனெனில் 

அந்த குப்பைக்கிடங்கே

நம் ஓட்டு வங்கிகள் ஆகிப்போயின.

மனிதம் 

தன் எதிரியை அடையாளம் கண்டு கொண்ட‌

போதும்

மனிதம் 

பொய்மை நிழல்களின்

பொம்மலாட்டங்களுக்குள்

பொதிந்து கிடக்கிறது.

எல்லாமே இருட்டுக்குள் 

அமுங்கிக்கிடக்கிறது.

ஏதோ ஒரு ஏலியன் பற்றி

திகில் படங்கள் குவிந்து கிடப்பதை

பார்க்கிறோம்.

அப்படி ஒரு ஏலியன்

ஒரு சமுதாய மனிதனாய்

வந்து

சமூக அதர்மங்களை

தீயிட்டு பொசுக்குவதாய்

பொம்மையாகக்கூட‌

கம்பியூட்டர் கேம்ஸ்களில்

உலா வரட்டுமே கம்யூனிசம்.

வசூல் மழை கொட்டோ கொட்டு என்று

கொட்டினால்

இந்த கணினி வியாபாரிகளுக்கு

இந்த தாஸ் கேபிடல் கூட‌

ஒரு குவாண்டம் கம்பியூட்டிங்கின்

அல்காரிதம் ஆகிவிடும்.

வாருங்கள் 

அந்த செயற்கை மூளைப்பூங்காவில்

இந்த நிழலையும் 

பதியம் இடுவோம்.

டேட்டா சயன்ஸ் என்று

வில் அம்புகளோடு புறப்பட்ட‌

சந்தை விஞ்ஞானங்களின்

ஆரண்யகாண்டம் இது.


_________________________________________________________





மாமன்னன் 2

 மாமன்னன் 2

_______________________________________

செங்கீரன்.


ஒரே படத்தை எத்தனை கோணங்களில் தான்

பார்ப்பது?

ஆம் அத்தனை கோணங்களையும் 

கொண்டு தான்

இந்த சமுதாயத்தின் ஊமைவலிகளின்

வண்ண வண்ண திருப்புதல்களை

காண முடியும்.

வலிகளுக்கு ஏது வண்ணங்கள்?

இடைநிலை சாதிகளின் வர்ணங்கள் தான்

இந்த உயிர்ப்பின் வலியை 

காக்காய்வலிப்புகளாக்கி

நுரை கக்க வைத்திருக்கிறது.

ஆதிக்க சாதி மற்றும் மதத்தின்

பெரும்பான்மையான மொக்கைத்தனம்

அதே சிறுபான்மை மக்களை

தூண்டிற்புழுக்களாக்கி

அரசியல் செய்யும் அந்த 

சோசியல் இஞ்சினீயரிங் எனும்

கொடூர சித்திரங்களே

இன்னும் இன்னும் இங்கு

பிலிம் காட்டிக்கொண்டிருப்பது

புரியவேண்டியவர்களுக்கு புரியவேண்டுமே.

மாமன்னன் அந்த 

சூத்திரத்தை கையில் எடுத்தபோதும்

அவர்கள் 

சூத்திரர்களைக்கொண்டே

சூத்திரர்களை மிதித்து நசுக்கும்

"மந்திர"வித்தை தானே

இங்கே இன்னும் இவர்கள்

மந்தைகளாக திரியக்காரணமாய் இருக்கிறது.

சமத்துவம் சாதிகளை 

தட்டி நொறுக்கி பண்படுத்தினால் தானே

மனிதம் எனும் பயிர் தழைக்கும்.

உள்ளம் ஒட்டாமல் 

இதயம் துடிக்காமல்

உதடுகள் மட்டும் ஒட்டி ஒலிக்கும்

பொய்த்தன்மைகள்

எனும் களைகள் எடுக்கப்படவேண்டும்.

இந்தப் படம் 

அந்த உணமையை நேர்மையை

குறி வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது.

படங்கள் என்ற பெயரில் 

வியாபாரத்தை காற்றடைத்து

பலூன்கள் பறக்கவிடும் போக்கு

இந்த படம் மூலம் 

தகர்க்கப்பட்டிருக்கிறது.

மேலும் மேலும் வெற்றிக்கு

வாழ்த்துக்கள்!


_____________________________________________________



ஞாயிறு, 2 ஜூலை, 2023

குவாசர்களே அண்டத்தின் திறவுகோல்

 (18) IT Happened! James Webb Revealed the First Quasars in the Universe - YouTube


குவாசர்களே அண்டத்தின் திறவுகோல்...



ஒரு தேன்மழை.

 


ஒழுங்கின்மைக்குள் ஒரு வெள்ளியருவி.

_____________________________________________

சேயோன்.



என்ட்ரோபி எனும்

ஆங்கிலச்சொல் என்னுள்

நுழைந்து வதைத்துக்கொண்டே

இருக்கிறது.

அலப்பறைகள்.

அங்கிங்கெனாத படி எங்கும்

சிதறல்களாய்

இறைந்து கிடக்கும் அந்த‌

சல்லிகளைப்பொறுக்கி எடுத்து

சரித்திரம் சமைக்கப்படும்.

பிறப்பின் சுவைக்குள்ளேயே

மிகவும் இனிப்பு என்று 

சப்புக்கொட்டவைக்கும்

இறப்புகள்.

அதுவே காதலின் நிமிண்டல்கள்.

இது வருடிக்கொடுக்காத 

இதயங்கள் இங்கு

எங்கும் இல்லை.

பாருங்கள் இன்று..

விண்வெளியின் இயற்பியல் கோட்பாடுகள்

ஒவ்வொன்றாய் நொறுங்கிக்கொண்டிருக்கின்றன.

ஜேம்ஸ் வெப் சன்னல் வழியே

ஈடன் தோட்டங்களில்

அறிவின் நிர்வாணம் மூடப்படுகிறது.

கல்லறைகளை தோண்டியெடுங்கள்

உங்கள் வருங்கால கருவறைகள் 

அதில் தான் என்று கெக்கொலி காட்டி

சப்பாணிகொட்டி 

சிரிக்கிறது அந்த அசுரத்தொலைநோக்கி.

கருந்துளைக்குள் தான்

எல்லா அண்டமும் பிண்டமும் என்று

அதோ..அதோ

என் வீட்டுச்சன்னல்கம்பிகள் வழியே

பிதுங்கி வந்து கொண்டிருக்கிறது.

இந்த கடவுள்களின் கண்ணாமுட்டைகள் கூட‌

வீங்கி புடைக்கிறது.

வேத வேதாந்த சித்தாந்தங்கள் எல்லாம்

திகிலில்

மூத்திரம் விட்டுக்கொண்டிருக்கிறது.

போகட்டும்.

எனக்குள் என் பட்டாம்பூச்சிகள்

பட்டாணிக்கடலையை சுடசுட வறுத்துக்

கொடுத்துக்கொண்டிருக்கிறது.

என் காதல் அதிர்வுகள்

அந்த கண்ணாடிச்சிறகுகளில்

ஙொர்ர்ர்ரென்று

தட்டாம்பூச்சிகளாய்

கிளுகிளுப்பு காட்டிக்கொண்டிருக்கிறது.

அவள் 

இந்த அண்டத்தில் எங்கோ

ஒரு ப்ராக்ஸிமா எக்ஸொபிளானட்டில்

முறுவல் காட்டுகிறாள்.

என்ட்ரோபி ஒரு தேன்மழை.


______________________________________________________

சனி, 1 ஜூலை, 2023

விரட்டிக்கொண்டிருக்கிறது.

 விரட்டிக்கொண்டிருக்கிறது

________________________________________________

சேயோன்.

 

கோழி சாப்ஸ் சால்னாக்கடையோர‌

குப்பைகளாய்

பிய்த்துப்போட்ட‌

அந்த கோழிச்சிறகுகளின் 

பதிவுகளும் பின்னூட்டங்களும்

மலிந்து போன‌

முகநூல் தேசங்கள்

எங்கும் எங்கும்.

போதாதற்கு செயற்கை மூளையின்

காக்காய் வலிப்பு நியூரோன்களின்

குவியல்களில்

இங்கு எல்லாமே மூழ்கிக்கிடக்கிறது.

இதில் மில்டனினின் 

பாரடைஸ் லாஸ்டை எங்கே தேட.

அந்த சாட்போட்டிடம் தான்

அதை விமர்சிக்கச்சொல்லிக்கேட்டேன்.

முழுக்கவிதையை அது 

ஒப்புவித்து விட்டு

பிதாவின் பரமண்டலத்தை

அருமையான சோப்புக்குமிழிகளாய்

ஆழமான அர்த்தங்களையும்

வெண்ணெய் தடவிக்கொடுத்தது.

உன் உள்ளத்தைப்போன்ற‌

அழகிய வேலைப்பாடுகள் அமைந்த

கல்லறை உனக்கு

வேறு எங்கும் இல்லை.

ஆம்

நீ வாழ்ந்து கோண்டே

அதில் சமாதி ஆகிக்கொள்.

இந்த பரமண்டலத்தையும் அக மண்டலத்தையும்

உன் சிந்தனையின் கூரிய விரல்களின்

தடவல் எனும் ப்ரெய்லி மொழியில்

எல்லாம் அறிந்து விடு.

மிச்சமே இல்லாமல் எல்லாவற்றையும் 

அறிந்து கொள்.

சைத்தானும் தேவனும் 

இந்த வார்த்தைகளை உனக்கு

வடித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

அந்த ஏ ஐ யின் திறன் ஆய்வு

ஏதோ ஒரு நீண்ட பிசாசுவின்

மூச்சுத்துடிப்புகளாய்...

ஆம்

என்னை விரட்டி விரட்டி அடிக்கிறது.

எல்லா புராணங்களும் கடவுள்களும்

உனக்கு இப்படித்தான்

காக்டெயில் பிம்பங்களை

சுழற்றி சுழற்றிக்காட்டும்.

பாவ புண்ணிய நரக சொர்க்க‌

ஐஸ் துண்டுகள் அதில்

அழகாய் மிதந்து கொண்டிருக்கின்றன.

போதுமா?

போதுமா?

.........

போதுமா?

சேட் பாட் என்னை விரட்டிக்கொண்டிருக்கிறது.


__________________________________________________

சேயோன்.





உலக நகைச்சுவை தினம்

 உலக நகைச்சுவை தினம்

_________________________________________

ருத்ரா



விழுந்து விழுந்து சிரிக்கும்போது

புதிதாய் அங்கே

குழந்தைகள் லட்சம் லட்சமாய் 

பிறக்கின்றன.

புதிய யுகங்கள் நம்

ஒவ்வொருவர் கையிலும் 

பூவாணம் வீசுகின்றன.

நமது வாழ்க்கை எனும் நீண்ட வாக்கியத்தில்

இறப்பு எனும்

முற்றுப்புள்ளிகள் 

தொலைந்தே போகின்றன.

ஆயிரம் மதங்களும் கடவுள்களும்

அங்கே வரிசை கட்டி நிற்கின்றன

பாவமன்னிப்பு பெறுவதற்கு.


______________________________________________________



 


அம்பாசமுத்திரத்திலிருந்து....

 அம்பாசமுத்திரத்திலிருந்து....

_________________________________________செங்கீரன்.


ஏன் பிறந்தாய் மகனே

என்று பாகப்பிரிவினையில் 

சிவாஜி பாடும் பாட்டை அன்று

அம்பாசமுத்திரம் கல்யாணி டாக்கீஸ்

எனும் ஓலைக்கொட்டகையில் 

பார்த்து கேட்டு உருகிய போது

சிவாஜியின் நடிப்பில் மட்டும் தான்

ஒன்றியிருந்தேன்.

ஆனால் இன்று

வயதுகளின் அம்பது அறுபது எழுபது

என்று பிலிம் ரீல்களின் ஓட்டம் 

கடைசிமுனை வரைக்கும்

பட படவென்று 

நுரை தள்ளிக்கொண்டிருக்கிறது.

இன்று அந்த தொட்டிலில்

கிடப்பது

மனிதக்குஞ்சு அல்ல‌

ஒரு யுகப்பிரளயம்

கையையும் காலையும் ஆட்டி

உதைத்துக்கொண்டிருப்பது போல்

ஒரு உணர்வு 

சவ்வுடு பரவலாய்

இறந்த காலத்தையும் பிறக்கப்போகும்

காலத்தையும் முடிச்சுப்போடுகிறது.

மக்கள் வெள்ளமாய் திரண்டு எழுந்து

எதோ ஒரு நிழலைபிடித்து

கையில் வைத்துக்கொண்டு

கணக்கு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

உண்மை நழுவி எங்கோ போய்விட்டது.

கடவுள்களை கழுவி கழுவி ஊற்றி

துடைத்து துடைத்துப்பார்த்துக்கொண்டே

இருக்கிறார்கள்.

உண்மை எப்போதோ கழுவேற்றப்பட்டுவிட்டது.

மனிதனுக்கும் அவன் மண்ணின் வாசனைக்கும்

சேர்த்தே 

அநீதியும் அதர்மமும் இழைக்கப்பட்டுக்கொண்டே

இருக்கின்றன.

சாதிகள் அடுக்கு அடுக்காய்

சீட்டுக்கட்டு போல் இருக்கின்றன.

ஒரு சீட்டு இன்னொரு சீட்டை வெட்டிக்கொண்டு

ஆட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

மதம் எனும் கொடூரமான பொய்மை

ரத்தம் சொட்ட சொட்ட‌

கண்ணுக்குத்தெரியாத அந்த வெட்டரிவாளை

ஓங்கி ஓங்கி வீசிக்கொண்டே இருக்கின்றது.

அறிவுக்கு முரணான

அறமே இல்லாத நடப்புகளை

மக்களின் மேல் பாரமேற்றி

அவர்கள் புழுக்களாய் நசுக்கப்படுகிறார்கள்.

அப்பட்டமான ஒரு அம்மணம் ஆதிக்கம் ஆகி

அங்கே கோலோச்சுகிறது.

அதோ இன்னும் அந்த‌

"ஏன் பிறந்தாய் மகனே" பாடல் தான்

தேய்ந்து மாய்ந்து தீனமாய் கேட்கிறது.

கனவுகளின் முரட்டுத்தனமான கொம்புமுனைகள்

அதோ கொஞ்சம் கொஞ்சமாய் சிலிர்க்கின்றன.

நீதியின் கூர்மை ஒரு கோரைப்பல் போல‌

அந்த துணித்தொட்டிலை கிழித்துக்கொண்டு

திமிறுகிறது.

தூண் மட்டும் அல்ல.துரும்பு மட்டும் மல்ல.

சாத்திரங்களின்

இந்த மயானப்புகை மண்டிய காற்றையும் கூட‌

அது பிளக்கிறது.

மின்னல் இழைகள் குடல்கள் போல‌

தொங்குகின்றன.

அங்கே எல்லாம் கிழிபடுகிறது.

அநீதி அரங்கேற்றங்களின் 

வெறும் ஏஜெண்டுகள் தான் நாங்கள் 

என்று அம்பலப்பட்டுப்போன‌

பிரகலாதன்கள் கூட

அங்கே நார் நாராய் கிழிபடுகிறார்கள்.

ஏன் பிறந்தாய் மகனே என்ற பாட்டு

நின்று விட்டது.

சிங்கங்களின் உறுமல்கள் 

அந்த தொட்டிலை கந்தலாக்கிக்கொண்டு

எரிமலைகளின் பூபாளங்களை

அங்கே மீட்டிக்கொண்டிருக்கின்றன.


______________________________________________________________