ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

கோர(க்)ப்பூர்

கோர(க்)ப்பூர்
============================================ருத்ரா

இது என்ன கோரம்?
சில லட்சங்கள் பாக்கி
என்பதற்கா
இந்த மனிதப்பிஞ்சுகளின்
குரல் வளைகள்
திருகப்படவேண்டும்?
மார்க்ஸ் சொன்னார்
லாபம் ..லாபத்திற்கு மேல் லாபம்
(சூப்பர் ப்ராஃபிட்) தான்
இந்த அசுர முதலாளித்துவத்தின்
ரத்தம்.
அதற்கு
மனித  ரத்தம் குடிப்பதே
தாராளமய பொருளாதாரம்.
மனிதர்கள் என்ன‌
சமுதாயங்கள் என்ன‌
எல்லாவற்றையும்
உறிஞ்சிவிடும் இந்த மிருகம்.
உலகத்து நகரங்களின்
பளபளப்பான கட்டிடங்கள்
கூட‌
அழகிய படமெடுத்த‌
பிரம்மாண்டமான
இந்த நாகப்பாம்புகள் தான்.
முதலாளித்துவம்
எவ்வளவுக்கு எவ்வளவு
அழகாயிருக்கிறதோ
அவ்வளவுக்கு அவ்வளவு அது
மானிட ஜனநாயகத்தின் நஞ்சு.
மனிதர்களே
உங்கள் மதங்கள் எல்லாம்
இந்த நச்சுப்பைகளைத்தான்
கர்ப்பப்பைக்குள் வைத்திருக்கின்றன.
காவி மதங்களும்
அதில் தள்ளுபடியில்லை.
இந்தியாவின் பெரிய மாநிலத்தில்
நிகழ்ந்த
எவ்வளவு பெரிய கேவலம் இது?
கொத்து கொத்தாய்
ஏழு எட்டு பத்து என்று எழுபதுக்கும் மேல்
பிஞ்சு உயிர்கள் பலியாகினவே!
இந்த எழுபத்திஒண்ணாவது
சுதந்திர தினத்தைக்கொண்டாட‌
இப்படி ஒரு குரூரமான‌
நிகழ்வு தான் நடக்க வேண்டுமா?
(இப்போது  நூற்றுக்கும் மேல்  பலி )
தினந்தோறும்
எமனின் பாசக்கயிறு
அந்த ஆக்சிஜன் சிலிண்டர்களின்
கழுத்துக்களிலா வீசப்படவேண்டும்?
அந்த டாக்டர் கஃபீல் அகமது
தனி முயற்சி எடுத்து
எத்தனை உயிர்களை காப்பாற்றியிருக்கிறார்!
காழ்ப்புணர்ச்சியில்
அவருக்கும் கூட எத்தனை தொந்தரவுகள்?
அவர் முன்
உங்கள் பாரத ரத்னாக்கள் எல்லாம்
வெறும் கண்ணாடிக்கற்கள்.
மாய பிம்பம் பார்த்து
ஓட்டுகளை
மெட்ரோ நகரத்து "கம்போஸ்ட் குப்பை" போல‌
குவிக்கும்
இந்திய குடிமகன்களே!
மத சாராயத்தைக் குடித்து
நீங்கள் மதி மயங்கியது போதும்.

=============================================================

"மின்சாரக்கம்பியிலும் மைனாக்கள் கூடு கட்டும்.."

"மின்சாரக்கம்பியிலும்
மைனாக்கள் கூடு கட்டும்.."
==================================================ருத்ரா


"மின்சாரக்கம்பியிலும்
மைனாக்கள் கூடு கட்டும்.."

நுண்மைக்கவிஞர்
திரு மனுஷ்ய புத்ரன் அவர்கள்
மென்மைக்கவிஞன்
அமரர் ந.முத்துக்குமார் அவர்களின்
மேலே கண்ட வரிகளை
தொலைக்காட்சியில்
அருமையாக விளக்கினார்.

தொலைந்து போகாத‌
அந்தக்கவிஞன் வரிகள்
தொலைக்காட்சியில்
பத்திரமாக இருந்து
மின்னல்
அடித்துக்கொண்டிருக்கின்றன.

அந்தக்காதலை
மைனாக்கள் கூடுகளில்
மாணிக்கக்கற்களாய்
வைத்து
ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறார்.

துருவங்கள்
தொட்டுவிட்டால் போதும்
மின்சாரக்கம்பிகளில்
எல்லாமே கருகிவிடும்.

அபாயத்தை அருகில் வைத்து
இலை போட்டு
விருந்துண்ணும் உள்ளங்கள் அல்லவா
காதல் உள்ளங்கள்.

மரணங்களை தொட்டும்
புதிய புதிய பரிமாணங்களை
தேடும்
இன்றைய அதிரடிக்காதலின்
அழகிய வானவில்லின்
ரெக்கைப்பிஞ்சுகளை
தூவி விட்டுக்கொண்டு
பஞ்சணை போடும்
பருவத்தின் புதிய தலைமுறை
நன்கு குமிழியிடுகிறது
இந்த வரிகளில்.

இசைக்கருவிகளும்
திரைப்படக் கதையின்
திரட்சியான மூலைகளும்
முத்துக்குமார் எழுத்துக்களில்
குழைந்து
எப்போதும்
ஒரு அமுதக்குழம்பின்
லாவாவை
பீச்சியடிக்கிறது.

ஆணவக்கொலையின்
வெட்டரிவாள் காடுகளிலும்
இந்த காதல் பீலிகள்
தூரிகையாகி
இந்த பிரபஞ்சத்திலேயே
காதல் முகங்களையும்
கடல் போன்ற அந்த‌
மென்மை உள்ளங்களையும்
வரைந்து காட்டுகின்றன.

இரத்தச்சகதியில்
இவர்கள் சமுதாயம் புதைந்தபோதிலும்
புதிய விடியலின் கர்ப்பம்
கன்னிக்குடம் உடைப்பதை
எந்த ஆதிக்கமும்
தடுக்க முடியாது தான்..
என்று
அந்த மின்சாரக்கம்பி வரிகள்
ஒரு
அக்கினியாழை மீட்டுகின்றன.

இறவாத கவிஞனே
இந்நேரம் அந்த‌
கொடுங்கோலன் எமன் கூட‌
உன் கவிதைக்கு
இசையமைக்க்கும்
ஒரு ஆர்வத்தில்
மயங்கி
அல்லது மரணித்துக்கிடப்பான்.

உன் வரிகளுக்கு
ஏது கொள்ளியும் சிதையும்?
உன் எழுத்தின் ஏக்கங்களுக்கு
ஏது தகனமும் சடங்குகளும்?

உன் கவிதைகள்
இந்த
விரிந்து பரந்த‌
ஆகாயமாகிப்போனது.

===========================================










சனி, 12 ஆகஸ்ட், 2017

நூலேணி

நூலேணி
---------------

வெற்றுக்கனவுகள்
எனும்
நூல் கொண்டு கட்டிய
ஏணியிலா
வானம் தொடப்போகிறாய் ?
அறிஞர்கள் தந்த
நூல் வழியாய்
நீ
ஆயிரம் பிரபஞ்சங்களை
கைப்பற்றலாம்.

=====================================ருத்ரா 

பாதை



பாதை
=====================================


நான் தான் மிதிபடுகிறேன்
நீ நகர்ச்சி பெற.
நீ ஏன் மிதிபடுகிறாய்
அடிமையாக?

பாதை கேட்டது
மனிதனிடம்!

=============================ருத்ரா

வியாழன், 10 ஆகஸ்ட், 2017

குறும்பாக்கள்

குறும்பாக்கள்
=======================================ருத்ரா


சுதந்திரதினம்


"வந்தேமாதர"த்தில்
புன்னகை பூத்த தாய்..இன்று
வெட்டரிவாளோடு நாக்குத்துருத்திய காளி!


அமித்ஷா

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து
அடுத்த மோடி பொம்மைக்குள்
புகுந்து விளையாட தயார்.


சோனியா

இவர் காட்டில் மீசை முளைத்த‌
சிங்கங்களுக்கு பஞ்சம் வந்ததால்
சிறுநரிகளின் ஊளைகளே இங்கு தேசியகீதம்.


நீயும் பொம்மை நானும் பொம்மை.


ஜனாதிபதி மற்றும்
துணை ஜனாதிபதி தேர்தல்கள்
வெற்றி கரமாய் முடிந்தன.


ராமராஜ்யம்


இன்னும் நம் நாட்டில்
"ஆயா ராம் கயா ராம்கள்" தான்
ஆட்சி செய்கின்றனர்.


தமிழ்நாடு


சேரன் அம்பு சோழன் தொண்டையில்
சோழன் வாள்  பாண்டியன் முதுகில்.
தமிழகம் நசுங்கிப்போன  பெருங்காய டப்பா!


கனகவிசயர்கள்


இவர்கள்  ரோடு ரோலரில்
மூவேந்தர்கள்
கூழ் !கூழ்! கூழ்!


=====================================================

புதன், 9 ஆகஸ்ட், 2017

தேடிச்சோறு நிதம் தின்று....

தேடிச்சோறு நிதம் தின்று....

==========================================ருத்ரா இ பரமசிவன்





தினமும் செய்திகள் செய்திகள்

துணுக்குகள்

கவிதை மொக்கைகள்

பின் நவீனத்துவ‌

முன் நவீனத்துவ‌

மாயாவாதக் கனவுவாத‌

வார்த்தை ஆலாபனைகள்.



யாரோ ஒரு நடிகை

அங்கம் எல்லாம்

துண்டு துண்டாய் வெட்டப்பட்ட விவரிப்பும்

காவல் நாய்கள்

அந்த மாமிசத்தை மோப்பம் பிடிக்கும்

இராட்சத காமிரா காட்சியும்..

மயிர்குத்திட்டு நிற்கவைக்கும் எழுத்துகளும்...



ஒரு புது மாதிரி

தாடியோ

குல்லாவோ

வைத்துக்கொண்ட‌

சாமியாரின்

ஆன்மீகக்குடல் உருவிய‌

ஸ்லோக சங்கிலித்தொடர்

வாக்கியங்களும்.....



பங்கு மூலதனத்தில்

கரடியும் காளையும்

கட்டிப்புரண்டு

புழுதிகிளப்பியதில்

கருப்புப்பணங்கள் கூட‌

கை கட்டி வாய்பொத்தி

கும்பாபிஷேகம் பண்ணி

சம்ப்ரோக்ஷணம் செய்து

பொருளாதாரத்தை புள்ளி விவர‌

ஆணி அடித்து ஆணி அடித்து

ஆலவட்டம் போடும்

பத்தி பத்தியான கட்டுரைகளும்....



தேடிச்சோறு நிதம் நின்று

பல சின்னஞ்சிறு கதைகள் பேசி

சிந்தனைக்குள்

சிதறுகின்ற பாரதியின் எரிமலைகளையே கூட

அவித்துப் போடும்

அரட்டைக்கூளங்களும்....



எம்.எல் ஏ சீட்டு.

இல்லாவிட்டால்

எம்.பி சீட்டு

இல்லாவிட்டால்

ராஜ்ய சபா சீட்டு

இன்னும்

மெடிகல் சீட்டு

இஞ்சீனியரிங்க் சீட்டு

என்று

அரசியலின் சாயப்பட்டறைகள்

கழுவி கழுவி ஊற்றிய‌

வாய்க்கால் வரப்பு செய்திகளும்....



மணல் அள்ளிச்செல்லும்

கொள்ளைகளும்

ரோடுகளில் மக்கள்

மறியல் செய்து மறியல் செய்து

டிவிக்களில்

முகங்கள் மொய்த்த செய்திகளும்....


அன்பே சிவம் என்பது போய்

அடுத்த மதத்தை

கசாப்பு செய்வதே நமது மதம்

எனும் வெறி வளர்க்கும்

தீக்காடுகளால் நிரம்பிப்போன‌

தேர்தல் சாணக்கியங்களும்...



அணு உலை வேண்டாம் என்று

அடுக்கு அடுக்காய்

ஜனங்கள் குவித்து

தொட்டில்கட்டி குழந்தைகளுடன்

சுருண்டு கிடந்தும்

அணுவின் எலக்ட்ரானுக்குள்ளும்

பிளக்கமுடியாத‌

இனவாத மயிரிழை அரசியலும்

அது சார்ந்த‌

விஞ்ஞான அஞ்ஞான எடுத்துக்காட்டுகள்

குவிந்த செய்திகளும்.....



காவிரியும் முல்லையாறும்

இனி சங்கத்தமிழ் ஒலிக்காது

என்னும்

ஒப்பாரி முழக்கங்களும்

ஒரு சொட்டு கூட தர மாட்டோம்

எனும்

தேர்தல் பருவகால‌

நரம்பு புடைக்கும்

நாக்கு தெறிக்கும்

பேச்சுகளின் ஒளிபரப்பு செய்திகளும்...


சட்டமன்றங்களில்

பாராளுமன்றத்தில்

ஜனநாயகத்தின் மொழி என்பது

வெறும் கூச்சல் மொழி மட்டும் தானா?

என்ற ஆதங்கங்களும் ...


உள்ளுக்குள்ளே

உயிரற்ற மைக்குகளுக்கு

கை கொடுக்கும்

மேசை தட்டல் மழையோசைகளும்...



இன்னும்

இன்னும்

பூனைமயிரில்

புதுக்கவிதைகள் செய்து

காதலின் ரத்த அணுக்களின்

சத்த மியூசிக்குகளில்

சரித்திரம் படைக்க கிளம்பிய‌

லேசர் அரங்க பட்டைகிளப்பும்

சினிமா கலைநிகழ்ச்சி செய்திகளும்..



மூச்சு முட்டுகிறது.

செய்திகள் தின்று தின்று..

பாவம்.

கொண்டுவாருங்கள்

யாராவது

ஆக்சிஜன் சிலிண்டரை

நம் ஜனநாயகத்துக்கு..



======================================================

4 ஆகஸ்டு 2013 ல் எழுதியது

கார்ட்டூன் (1)

கார்ட்டூன் (1)
======================================ருத்ரா