திங்கள், 30 அக்டோபர், 2023

நம்பிக்கை.

நம்பிக்கை.

-----------------------------------


புல்லின் மீது 

ஒரு சிறிய புழு ஊர்ந்து கொண்டிருந்தது.

புல் கேட்டது 

எங்கே இப்படி அவசரமாய் பயணம்?

அந்த மொட்டை மாடியில்

காயப்போட்டிருந்த என் ஆடையை

எடுத்து வரப்போகிறேன்.

என்றது புழு.

அது ஆடை என்று சொன்னது

"வானவில்"

------------------------------------------------------

சொற்கீரன்





ஞாயிறு, 29 அக்டோபர், 2023

மருதமரங்களே!




மருத மரங்களே!

ஆற்றின் நீர்க்கண்ணாடியில் 

முகம் பார்த்து 

ஒப்பனை செய்து கொண்டிருக்கும் 

உங்கள் மவுன  தருணங்களில் 

அந்த தாமிரபரணி

கிசு கிசுத்தது என்ன? 

பாபநாசத்து படித்துறைகளில்

கால் நனைத்தபோது

முண்டக்கண்ணின் பருத்த மீன்கள்

உயரத்து மருத மரத்தின்

மினுமினுத்த இலைக்கொளுந்துகளுக்கு

முத்தமிட ஏங்கினவே.

இயற்கை எழிலின் ஹோலோகிராஃபியில்

பரிமாணங்கள் களவு போயின.

--------------------------------------------------------------
சொற்கீரன்.




சனி, 28 அக்டோபர், 2023

நானா சொன்னேன்?


இருக்கேன்னு நானா சொன்னேன்?

கண்டாக்க சொல்லுன்னு தானே 

சொன்னேன்.

இதையே லட்சம் சுலோக மாக்கி 

என் மேலேயே துப்புறியே.

இந்த பிரம்ம ஹத்தி யை 

எப்படி தீட்டுக்கழிக்கப்போறே?

-------------------------------------------------

ருத்ரா. 



செவ்வாய், 24 அக்டோபர், 2023

நான் யார்?



நான் யார்?

உண்மையா? பொய்மையா?

என் கையில் இது தான் உளி.

நானே தான் அந்த கல்.

ஆயிரம் ஆயிரம்

 ஆண்டுகளாக 

இன்னும் உருவம் 

பிண்டம் பிடிக்கப் படவில்லை.

"ஆயிரம் தலையில் 

ஆயிரம் கண்ணில் "எ‌ன்று 

குழ‌ந்தை கிறுக்கியது.

"சஹஸ்ர சீர்ஷம்

சஹஸ்ராக்ஷம்"

தூய பிரம்மம் என்று 

சமஸ்கிருதம் சொன்னது 

எப்படி வர்ணம் என்று அதை 

சாதி சாக்கடைக்குள்

தள்ளியது?

மனித நிறம் மந்திரம் ஆனது.

ஆதிக்க வெறியில் 

"ஆதித்ய இருதயமும்"

இருளில் வீழ்ந்தது.

அப்புறம் 

இருண்ட சாஸ்திரம் ம‌ட்டுமே 

எஞ்சி நின்றது.

-----------------------------------------

ருத்ரா.











திங்கள், 23 அக்டோபர், 2023

ரணம்

இந்த துப்பாக்கி சத்தங்கள் 

என்னத்தை க் கூவுகின்றன ?

கடவுள்கள்  வேண்டும் என்றா?

வாழ்விடங்கள் வேண்டும் என்றா?

லட்சம் லட்சமாக 

பிணங்கள் குவிந்து விட்டனவே.

இன்னுமா 

பெட்ரோல் ரத்தங்களில் 

பூமியின் அடிவயிறு 

மரணங்களை 

பீய்ச்சிக் கொண்டிருக்க வேண்டும்?

யூதமா? வேதமா? பூதமா?

சைத்தான்களின் நஞ்சா

கடவுள்களின் ரத்தம்? 

மானுடத்தின் உள்ளத்து உள்விசை 

அணு உலை ஆகட்டும் 

அன்பின்"அகச்சிவப்புக்கிரணங்கள்"

இந்த யுத்த ரணங்களை 

து டைத்தழிக்கட்டும்.

-----------------------------------------------

ருத்ரா 




வெள்ளி, 20 அக்டோபர், 2023

ஓ! மனிதா!

ஓ! மனிதா!

இந்த பிரமாண்ட குப்பைத்தொட்டியா 

உன் கோவில்?

இதற்குள்

குப்பையாக நீ   கொட்டுவது 

வெறி தீட்டிய கனவுகளை....

கசாப்பு செய்த மனிதத்தை...

துப்பாக்கிகளை நீ பத்திரமாக 

வைத்துக்கொண்டு 

அவை துப்பிய உயிர் அமுதங்களை ...

இன்னமும் வரவில்லை 

உன் கடவுள்கள் என்று 

எண்ணிக் கொண்டிருக்கிறாய்.

என் கடவுள் த‌விர 

வேறு கடவுள் எதுவுமில்லை.

அப்படி சொல்லும் அசிங்கங்களை 

துப்பாக்கியால் துடைத்து 

இனத்தூய்மை செய்து 

பிணக் குவியல்களால் 

வரலாறு நிரப்பப்படவா 

இத்தனை போர்?

பயங்கரமான 

காட்டுமிராண்டித் தனத்தையா

உன் கம்பியூட்டர்கள் 

இத்தனை நாளும் 

கருத்தரித்துக் கொண்டிருந்தன?

----------------------------------------------

ருத்ரா.









வியாழன், 19 அக்டோபர், 2023

கொலு.

 கொலு 

----------------------------------------------

நீயும் பொம்மை நானும் பொம்மை .

சினிமாப் பாட்டு 

தத்துவம் சொன்னது. 

மண் எடுத்தது 

கோடி மைல் தாண்டி

பெண்ணு என்ற

ஒரு விண்கல்லிலிருந்து 

என்றான் விஞ்ஞானி.

வில்லும் அம்புமாய் நின்ற 

அந்த சாமி பொம்மைக்கு 

வந்ததே கோபம்.

அந்த பாவப் பிண்டத்திலா 

எனது ஜன்மம்?

அந்த விஞ்ஞான அரக்கனை 

வதம் செய்யக்கிளம்பியதில் 

எல்லா பொம்மைகளும் 

தூள் தூள்...தூள்!

-------------------------------------------

ருத்ரா. 

..






திங்கள், 16 அக்டோபர், 2023

எங்கோ ஒளிந்து கொண்டார்..

ஒரு கடவுள் 

எங்கோ ஒளிந்து கொண்டார். 

வந்த கடவுளிடம் 

நீ தான் அவரா என்று 

கேட்டார்கள்.

அவரும் " இறை சான்றிதழ் "

நீட்டினார்.

இப்படியே 

சான்றிதழ்களை காட்டி காட்டி 

கடவுள்களும் வந்தார்கள். 

எல்லாம் சந்தை  இரைச்சல் ஆனது.

நான் தான் கடவுளின் 

கபாலம் வழியே வந்தவன் 

மற்றவர்கள் எல்லாம்

என் காலடி கீழ்

என்றான் ஒருவன். 

சாதிகள் ஆயிரம் பிரித்து 

அடிமை விலங்குகள் பூட்டி 

இரைச்சல் மந்திரங்கள் முழங்கினான் .

மனிதம் நசுக்கப்படும் 

கண்ணீரும் அவலமும் 

கானல் நீர் சொர்க்கம் நோக்கி 

மூழ்கிக்கிடந்தன.

கடவுள்கள் கடவுள்கள் 

எங்கு பார்த்தாலும் கடவுள்கள் .

மனிதர்களை காணவில்லை 

துப்பாக்கிகள் துப்பிய  மரணங்களில் 

இன்னும் இன்னும் 

கடவுள்கள் தான் 

முளை விட்டுக் கொண்டிருக்கின்றனர் .

---------------------------------------------------------

செங்கீரன்.













செவ்வாய், 10 அக்டோபர், 2023

சூத்திரம்.

 பிரம்ம சூத்திரம் 
----‐--------------------------- ருத்ரா 


பிரம்ம சூத்திரம்  சொன்னது 
ஆத்மா என்றால் பிரம்மம் 
பிரம்மம் என்றால் ஆத்மா 
இதை 
எப்படி பு‌ரி‌ந்து கொள்வது?
இறந்து பார் எ‌ன்றது.
இது என்ன "சதி?"
சதியா?
ஆம்.
"என்னை உன்னோடும் 
உன்னை என்னோடும் 
சேர்த்து எரித்தால் 
அது  சதிதானே."
சூத்திரத்தின் சூத்திரம் 
புரிந்து விட்டது. 
இப்போது 
அந்த மந்திரங்கள் எல்லாம் 
மலட்டு "சப்தங்கள்"
ஆகிப் போயின. 

-----------------------------------------------------



.