வியாழன், 27 ஜனவரி, 2022

ஓங்கி உலகளந்த......

ஓங்கி உலகளந்த. . . . . . .

.

____________________________________ருத்ரா


தமிழா! தமிழா!

உன் வரலாற்றுத்தடம் அழிக்க

நம் அலங்கார ஊர்திகளை

அலங்கோலமாய் ஆக்கும்

அவர்கள் சூழ்ச்சிகளைப் புரிந்துகொள்

தமிழா!தமிழா!


வெறும் அட்டைக் கட்டு மானங்கள் 

அல்ல இவை.

அழல் வீசம்  நம் சுதந்திர மூச்சின்

அடையாளங்கள் இவை.


வெள்ளையன் ஆட்சியை

வேரோடு பிடுங்க 

தம் உயிர்களின் வேர்த்தூவிகளில் 

வீரம் பாய்ச்சி

கிளர்ந்து நின்றவர்கள் அல்லவா

தமிழர்கள்.


மருது இருவர்கள்

உருவிய வாட்களில்

கதிர் தெறிக்கும்

சினம் கொப்புளிக்கும்.

வெள்ளையர்கள் ஆதிக்கம் 

வீழ்ந்து போக‌

கடுமை போர் புரிந்து

வெள்ளைத்தூக்குகயிறுகளுக்கு

அவர்கள்

இரையாகிப்போன‌ அன்று தான்

நம் சுதந்திர ஒளி இமை உயர்த்தியது.


அந்த சூரியப்பெண் வீரமங்கை

வேலுநாச்சியார்

செங்கோல் ஏந்திய கையில்

வீர வாளும் தெறித்துச் சுழன்றதால்

வெள்ளை நரிகள் வெலவெலத்துப்போயின.


வ உ சி என்னும் சுதந்திரத்தின் 

பெருநெருப்பு

வெள்ளைக்கப்பல்களையே

வெறும் காகிதக்கப்பல்கள் ஆக்கி

கடல்கள் கூட‌

நம் சுதந்திர சுவாசத்தை

அலைவிரிக்கச்செய்த 

சரித்திரம் மறக்க இயலாதது அல்லவா.

அந்த கப்பலோட்டிய தமிழனின்

தமிழ் மீது அவ்வளவு வெறுப்பு

இந்த தமிழ்ப்பகையாளிகளுக்கு.

சுதந்திர வெப்பமூச்சின்

எரிமலைக்கவிஞன் பாரதி கூட‌

இவர்களுக்கு எதிரியானது எப்படி?

அவர் "அக்கிரகாரத்துக்கழுதையின்

கனப்புக்குரல் வேத சுருதிகளை"

அவமதிப்பு செய்து விட்டதோ?

ஓ! தமிழா!

நீ என்ன நிறத்தில் இருந்தாலும் சரி

இந்த சாக்கடையுடன் சங்கமம்

ஆகிவிடாதே!

வெள்ளைக்காரன் ஆண்டாலே போதும்.

இந்த சாதிகளின் சாத்தான்களான‌

சனாதன சாஸ்திரத்தை

பாதுகாத்து 

பத்திரமாக்கி கொடுத்தவன் 

என்று தானே

அவனை எதிர்த்துப்போரிட்ட‌

இந்த சுதிந்திரப்போராளிகள் மீது

இத்தனை வெறுப்பு.

வெள்ளையன் மீது அவர்கள் காட்டும் 

எதிர்ப்பெல்லாம் இது ஒன்று தான்.

ஆங்கிலக்கல்வி வழியாய்

அந்த வேதங்களின் புருஷசூக்தம் மூலம்

மானிட நீதிக்கு எதிரான வர்ண தத்துவங்கள்

எல்லாம் அம்பலமானதே என்று.

தேசத்துரோகத்தை 

தேசபக்தி வர்ணம் பூசித்தானே

நான்கு வர்ண தேசம் எழுப்ப‌

இத்தனை தந்திரத்தை

அவர்கள் கையாள்கிறார்கள்.

அந்த டெல்லி வீதிகளில்

அந்த சக்கரங்கள் 

நம் ஜனநாயகத்தையும்  சுதந்திரத்தையும்

நசுக்கிக்கொண்டு

நம் தேசிய ஒருமைப்பாட்டை

கந்தல் கந்தலாய் ஆக்கிக்கொண்டு

நகர்கின்ற காட்சிகளில்

திகில் கொண்டு உறைந்து போய்

நின்று பயனில்லை தமிழா!

விழித்தெழு தமிழா!

ஓர்மை கொள்!கூர்மை கொள்!

ஓங்கி உலகளந்தது உங்கள்

தமிழே ! தமிழே!

_____________________________________


















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக