பட்டொளி வீசி. . . . . .
_____________________________________________
ருத்ரா
"பட்டொளி வீசி பறந்தது பாரீர்!"
பாரதி கொஞ்சம் விழித்துப்பார்
உன் கனவு நிறைவேறிவிட்டதே.
அந்த மூவர்ணக்கனவு
இமை நிமிர்த்திக்கொண்டபோது
அதனுள் ஒரு மிருகம்
உறுமுகின்றதே
நான்கு வர்ணம் காட்டி.
அது உனக்கு கேட்கின்றதா?
தமிழ்ச்சாதி
அந்த சாக்கடை மிருகங்களுக்கு
தாழ்ந்த சாதி ஆகிப்போனதின்
கொடுமை உனக்கு புரிந்ததா பாரதி?
ஆடுவோமே பள்ளு பாடுவோமே
என்றாயே.
மதவெறித்தீயில் ஆரத்தி காட்டி
இவர்கள் தட்டுகின்ற சப்பளாக்கட்டைகளில்
ஜனநாயகமும் சுதந்திரமும்
நசுங்கிப்போகின்றதே.
கங்கைநதிப்புரத்து கோதுமைப்பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
என்று மீசை முறுக்கிப்பாடினாயே.
இவர்கள்
நம் செந்தமிழ் நாட்டை
கசாப்பு செய்ய கையில்
கத்தியோடு அல்லவா அலைகிறார்கள்.
குடியரசு எனும் சுந்திரச்சுடர்
நம் தமிழ் உள்ளங்களின்
எரிமலைக்குழம்பில் பூத்த
எழில் மிகு ரோஜா அல்லவா!
வீரமங்கை வேலுநாச்சியார்...
விடுதலையின் வீரம்
கொப்புளித்த நம்
மருது சகோதரர்கள்....
மற்றும்
நம் தமிழ் மண் விரித்த
வீரச்செங்கதிர்கள் எல்லாம்
அந்த வெள்ளை விலங்குகளை
உடைத்து நொறுக்க
எழுந்தவை அல்லவா!
வ உ சி எனும் பிரளயம் தந்த
மூச்சு தானே
மூண்டு எரியும் இந்த
மூவர்ணம்!
ஓ!பாரதி!
இந்த சீட்டுக்கட்டு ராஜாக்கள்
சாதி மத சாமரங்களில்
பள்ளிகொண்டு படுத்துக்கொண்டே
மக்களையெல்லாம்
புழுக்களாக்கி நசுக்கி
வேடிக்கை பார்ப்பதற்கா
வந்தது இந்த சுதந்திரம்?
நம் சுதந்திர அணிவகுப்பு வண்டிகளின்
ஜனநாயக அச்சு முறிந்த
சத்தம் கேட்கிறதா ஓ பாரதி!
சர்வாதிகார எச்சில் நாறும்
அந்த வெறியின் கூச்சலைக்கேட்டு
"நெஞ்சு வெடிக்கின்றதே.."
என்று தானே நீ பாடுவாய்.
"தாயின் மணிக்கொடி பாரீர்"
என்ற உன் மணிக்குரலோடு
சுருதி சேர்ந்த
நம் தமிழ்க்கொடியின்
கனற்குரல்
இன்னொரு சுதந்திர வேட்கையாய்
கிளர்ந்து முழங்கட்டும்.
அந்த அணிவகுப்புக்கு
வெறும் அடையாளங்களின்
பொம்மைகளையா
நம் அலங்கார ஊர்திகள்
ஏந்திக்கொண்டிருக்கின்றன?
நம் மண்ணின்
சுதந்திர ஊற்றுக்கண்கள் அவை.
மதநீர் ஒழுகி கண்ணை மறைக்கும்
பழமை வாதத்தின் பிடிவாதம்
வேண்டுமென்றே
அந்த டெல்லி வீதியில்
இந்த சுதந்திர செம்புயலுக்கு
பூட்டுகள் போடலாம்.
நம் செந்தமிழ் மூச்சின் வீச்சுக்கு முன்னே
அவை தூசிகள்.துரும்புகள்.
என்றும் தணியாத நம் சுதிந்திர தாகம்
என்றும் சுடரட்டும்.
வென்று சுடரட்டும்.
எங்கும் பரவட்டும்.
வாழ்க தமிழ்!
வெல்க தமிழ்!
________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக