மனிதன் என்றால்
ஊக்கம் என்று தான் பொருள்.
ஒரு கூழாங்கல் இமயமாகவும்
இமயமே ஒரு கூழாங்கல்லாகவும்
அவனுக்கு தோன்றுவது
முறையே
ஊக்கம் இல்லாததும்
ஊக்கம் இருப்பதும் ஆன
வெளிப்பாடு தான் அது.
____________________________ருத்ரா
சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே! வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்
மனிதன் என்றால்
ஊக்கம் என்று தான் பொருள்.
ஒரு கூழாங்கல் இமயமாகவும்
இமயமே ஒரு கூழாங்கல்லாகவும்
அவனுக்கு தோன்றுவது
முறையே
ஊக்கம் இல்லாததும்
ஊக்கம் இருப்பதும் ஆன
வெளிப்பாடு தான் அது.
____________________________ருத்ரா
நீ என்பதென்ன?....
_______________________________ருத்ரா
அன்று ஒரு சிரிப்பு நல்கினாய்!
அதன் பிறகு
இந்த விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்
எத்தனையோ ஆயிரம் ஒளியாண்டுகள்
நகர்ந்தன என்று.
இது எப்படி?
இது என்ன?
இது எவ்வாறு?
என்று
நான் அறிவின் ஆவியில் கரைந்த போது
"க்ளுக்" என்று கேட்கிறது
மீண்டும் உன் சிரிப்பு
என் மீது
ஊடுருவிக்கொண்டு!
_____________________________
ஒரு மீள்பதிவு.
_____________________________
https://oosiyilaikkaadukal.blogspot.com/2011/11/blog-post.html
செவ்வாய், 1 நவம்பர், 2011
நுழைமுகம்
ருத்ரா இ.பரமசிவன்
வாருங்கள்
இது ஒரு வித்தியாசமான
கவிதைக்காடு.
பூக்கள் கூட
இங்கே தலைகீழாகவே இருக்கும்.
முதலில் முள் காட்டி
அப்புறம் மலர் காட்டும்
ரோஜாக்களே இங்கு அதிகம்.
சமுதாய தனிமனித அவலங்களைக்கூட
வாசலில் கூட்டிப்பெருக்கி
தண்ணீர் தெளித்து
ரங்கோலிகளாக போட
பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
புல்லாங்குழல் புலம்புகின்றது.
வீணை அழுகின்றது.
அலை ஓசைகள் அரற்றுகின்றன.
தென்றல் சுடுகின்றது.
நிலவு எரிக்கின்றது.
இப்படி எதிர்மறையாய்
பேனாவை கூர்தீட்டி
குவியும் எழுத்துக்காடுகள் இவை.
நேர்மறையாய் நம்பிக்கைக்கட்டுரைகள்
மசாலா சேர்த்த தின்பண்டங்களாய்
பேராசையின் ஈ மொய்க்கும்
வாக்கியப்பிண்டங்களாய்
வலம் வரும் இக்கால கட்டத்தில்
எதிர்நீச்சல் போல்
வரி காட்டி அதில்
வழி காட்டி
பயணம் தொடர
எதிர்ப்படுவதே
இந்த ஊசியிலைக்காடுகள்.
பணங்காட்டு நரிகளின் சலசலப்புக்கு
இங்கு இடமில்லை.
ஊசிப்போன உள்ளங்களுக்கு
ஊசி போட்டு உரமேற்றும்
எழுத்து மருத்துவம் இங்கு உண்டு.
இந்த ஊசியிலைகள் சர சரப்பில்
நீலவானங்களும் உராய்ந்து கொள்ளும்.
அந்த தீப்பொறிகள் மட்டுமே
இங்கு
இலை உதிர்க்கும்.
பூ உதிர்க்கும்.
பணக்காரர்கள் எப்படி
பணக்காரர்கள் ஆனார்கள் என்று
படுதா விரித்து
பத்திகள் நிறைக்கும்
பக்கம் அல்ல இது.
முரண்பாடுகளே இங்கு
வழிபாடுகள்.
கண்ணை மூடி பக்தியாக இருப்பதை விட
கண்ணைத்திறந்து சக்தியாய் சிலிர்ப்பதே மேல்.
வாருங்கள் வாருங்கள்
வலம் வருவோம்.
வர்ணாசிரமங்கள் இல்லாத
ஆரண்ய காண்டம் இந்த
ஊசியிலைக்காடுகள்.
அன்புடன்
பகிர்தல் செய்வோம்.
ருத்ரா இ பரமசிவன்
பொங்கலோ பொங்கல்
____________________________________ருத்ரா
இஞ்சி மஞ்சள் கரும்பு என
மூன்றும் தமிழின் இன்சுவை கூட்ட
கிழக்கைக் கிழித்து இருளைப்பிளந்து
விடியல் கீற்று வெளிச்சம் காட்டும்.
தமிழின் இதயம் கசக்கி
கனவுகள் நசுக்கி
மூழ்கடித்த வெறியர்களின் வாய்க்கால் அல்ல
அந்த முள்ளிவாய்க்கால்.
எரிதழல் தளும்பும்
செங்கடல் விரிப்பே
அஃதெனக் கொள்வம்
பொங்கலோ பொங்கல்!
அறம் பிறழ்ந்த
புல்லர்கள் காட்டிய
பொய் வரலாற்றை
அறிவின் எரிமலை
உமிழ்ந்து ஆங்கே
செவ்வொளி காட்டுவம்!
முழங்கிடு இன்று
பொங்கலோ பொங்கல்!
தமிழ்ப்புத்தாண்டு மலர்ந்தது இன்று!
அமிழ்தென முழங்குவம்
நம்
அகர முதல!..அம்
மகர விழியில்...புது
உலகம் காண்போம்.
வாழ்க தமிழ்!
வெல்க தமிழ்!
________________________________
____________________________________ருத்ரா
மணல் மேடிட்டு விட்டது.
வயதுகள் நிகழ்வுகள்
புதையுண்டன.
இந்த மணற்கடலில்
இன்னும் கேட்கிறேன்.
அவள் கொலுசு சத்தங்களை.
அந்த பரல்கள் உரசுவதில்
என் இதயத்துப் பூகம்பங்கள்
ரிக்டர் ஸ்கேல்களையெல்லாம்
அடித்து நொறுக்கி விட்டது.
கால் வேறு கை வேறு போல்
காங்கிரீட் சதைகள் முறுக்கிவிழுந்த
கட்டிட சிதலங்கள் போல்
கனவுகளின் வண்ணக்கண்ணாடி
நொறுங்கல்கள் போல்
இன்றும்
என் சோடாபுட்டிக்கண்ணாடி வழியே
அந்த் கலை டோஸ் சித்திரங்கள்
சுழற்றி சுழற்றி
அவள் உதட்டுச்சுழிப்புகளில்
என்னைக் கிறங்கடிக்கின்றன.
என் கடைசி அத்தியாயங்களின் மேல்
அந்த கொள்ளி வறட்டிகளைக்கொண்டு
மூடுமுன்
நீலவானத்தின் பிதுங்கல் வழியே
என் கவிதையின் கடைசி வரியை
எழுதுகின்றேன்..
முற்றுப்புள்ளி வைக்காமல்..
முடிக்க மனமில்லாமல்..
தீ உமிழ்ந்த புகைச்சுருளில்
இன்னும்
அந்த மணல் பிழம்புகளின்
அலைகளாய்..பரவுகின்றேன்.
_______________________________________
சிறகுகள்
_______________________________ருத்ரா
இது நான் 1996ல்
அமெரிக்காவில் ஒக்லஹோமா வின்
"ப்ரையார்"எனும் ஊரில்
என் மகனுடன் தங்கியிருந்த போது
கம்ப்யூட்டரில் வரைந்த ஓவியம்.
சிறகு விரித்து பறப்போமா?
விண்ணில் உயர எழுந்திடுவோமா?
என்னும் துடிப்பை
தேக்கி யிருக்கிறது அந்த வாத்து.
இதுவே நம் உலகத்தமிழனின் நிலை.
தமிழன் சிறகு விரித்தால்
அந்த சூரியனையே அடைகாத்து
குஞ்சு பொரித்து விடும்
ஆற்றல் உடையவன்.
பிரபஞ்சத்தின் "ஹிக்ஸ் போஸான்"
உட்கருவுக்குள்ளும்
நுழைந்து பார்த்து உண்மையின்
அறிவை அளந்துவிடும்
அந்த குவாண்டதமிழன்
ஒரு என்டாங்கில் மூலம்
பிரபஞ்சத்தின்
எல்லா தூசு துரும்புகளையும்
தூரிகையாக்கி
ஓவியம் காட்டும் வல்லமை உடையவன்.
உலக மானிடத்துவமே
அவன் கையில் வைத்திருக்கும்
ஒரு சிலேட்டுப்பலகை ஆகும்.
அதில் உள்ள வரிகளைப்பாருங்கள்.
படியுங்கள்.
ஆம் ..அது
"யாதும் ஊரே!யாவரும் கேளிர்!"
ஆம் அதை யாவரும் கேளீர்.
_____________________________________________
கடவுளின் கவலை
==============================ருத்ரா
கவலையுள்ள மனிதனைப்
படைத்தது ஒரு
கவலையில்லா மனிதன் எனும்
கடவுள் தான்.
ஏன்
இப்படியும் யோசித்துப்பார்க்கலாம்
ஒரு
கவலையில்லாத மனிதன்
விளையாட்டுக்காக
கடவுளை
கற்பனை செய்தான்.
அதற்கு அப்புறம்
அவனால்
கவலையில்லாத மனிதனாக
இருக்க முடியவே இல்லை.
ஏனெனில்
அவன் கடவுளை வைத்து
விளையாடிக் கொண்டிருக்க முடியவில்லை.
இயற்கைச் சீற்றம் விதைத்த
அச்சம் எனும் விதையில் தான்
கடவுளை அவன் கற்பனை செய்தான்
என்பதை அறிந்த போது
மனிதன்
கவலைகளின் கிட்டங்கி ஆகினான்.
கடவுளைப்பற்றி கவலைப்பட்டு
மனிதன் என்ற நிலையையே
மறந்து போனான்.
இப்போது கவலைப்படுவது
கடவுளும் தான்.
குடியிருக்கும் இடமே
மனிதன் தான்.
மனிதன் எனும் நிலை
மறைந்து போனதால்
எனக்கும் எங்கும் இடமில்லை.
======================================
15.12.2019 மீள்பதிவு.
மேயும் வெளி
____________________________________
ருத்ரா
நீலவயிற்றின் கன்னிக்குடம் கிழித்து
விடியலின் பிரசவம்.
காலத்தின் கண்ணாடிச்சன்னல்.
வரலாற்று மேகங்கள் கவிந்திருக்கும்
திரைச்சீலைக்குள்
ஆடி ஆடி
பிம்பங்கள் காட்டியதில்
நிகழ்வுகளின் நிர்வாணம்
தெரியவே இல்லை.
காட்சிகளின் மங்கல் சித்திரங்கள்
நம் மனவெளியில்
மேய்கின்றன.
ஓயும் முன்
நாமும் மேயும் வரை மேயலாம்.
____________________________________________
எல் உமிழ் இரும்பொறை அம்பொறி கனல
_________________________________________________ருத்ரா
எல் உமிழ் இரும்பொறை அம்பொறி கனல
கடுங்கண் காட்டும் முள்படர் இலவம்
அவிழ் இலை செறிந்த அழற்பெருங்கானம்
எரியூர் தோற்றியும் ஓவா நடையின்
மீமிசை ஊக்கி செல்வம் நசைஇ
ஆறு படுத்த நெடும்பணைத்தோள!
இவண் ஓர் இறைநெகிழ்ந்த வளையள் ஆங்கு
கொல் அலரி படுத்த கொடுநோய் வீழ்ந்த
நிலைகண்டு அன்னை எவன் ஆங்கு
"ஊதை ஈட்டிய உயர்மணல் அடைகரை"
ஓரை ஆடி ஒள் மணல் தெள்ளினை
எனவாங்கு
பொய்ச்சொல் பெண்டிர் முருகு வெறியாடல்
நின் நோய் ஆற்றும் கண்டிசின் தெளினே
என்று ஊக்கிய அன்னைக்கு சொல்லும்:
அவன் மின்னல் அகலம் யான் தோயும் காலை
முருகன் என்னை அவன் அய்யன் என்னை
நத்தம் இல்லா அத்தமும் ஏகுவன்
அவனை ஓர்ந்து யான் சேரும் மாட்டே.
__________________________________________ருத்ரா
தலைவன் பொருள் தேடி கொடிய பாலையின்
காட்டுவழியில் செல்ல தலைவியோ பிரிவுத்துயரில்
மிகவும் வாடுகிறாள்.இதைக்கண்ட அன்னை அவளுக்கு
முருகன் வெறியாடல் என்னும் "சாமியாட்டம்" ஏற்பாடு
செய்ய தலைவியோ முருகன் வந்தாலும் சரி அவன் அப்பனே
வந்தாலும் சரி நான் என் தலைவன் வழி தான் ஏகுவேன்
என்று சொல்லிக்கொண்டிருக்கிறாள்.இதை தோழி தலைவனுக்கு
சொல்வது போல் அமைந்துள்ளது இப்பாடல்.
அகநானூற்று பாடல் (எண் 60) குடவாயிற்கீரத்தனார்
எனும் புகழ்மிக்க புலவரால் பாடப்பட்டது.
"ஊதை ஈட்டிய உயர்மணல் அடைகரை" என்ற வரியை
அப்பாடலில் எழுதியுள்ளார்.ஆழம் செறிந்த சொல்லழகு மிக்கது
இவ்வரி.கடற்கரையை அடுத்த நீர்ப்பரப்பில் எழும் வாடைக்காற்று
வேகமாக வீசி கரையில் மணல் மேடுகளை உருவாக்குகிறது
என்று இங்கே பொருள்படும்.இதில் ஓரை என்பது கடற்கரை மணலில்
கூட்டம் கூட்டமாய் பெண்கள் வண்டல் மண்ணில் பாவை செய்து
விளையாடுவதைக்குறிக்கும்.தலைவி இப்படியெல்லம் விளையாடியதால்
தான் இந்த நோய் வந்ததோ என்று அந்த வெறியாடலுக்கு ஏற்பாடு
செய்கிறாள் அன்னை .தலைவியோ காதலனின் முன் எந்தக்கடவுளும்
பொருட்டு இல்லை என்பதாய் காதல் பற்றி உறுதியாக இருக்கிறாள்.
இந்த சங்கத்தமிழ்க்காட்சியையே நான் சங்கத்தமிழ் நடைச்செய்யுட் கவிதை
ஆக்கி இங்கு எழுதியுள்ளேன்.
_____________________________________________________ருத்ரா