ஞாயிறு, 27 டிசம்பர், 2015

வால் மட்டும்......




வால் மட்டும்......
=======================================ருத்ரா.


"எல்லாம் ஏசுவே
எனக்கு எல்லாம் ஏசுவே"
அம்பதுகளில்
ஒலித்த அந்த இனிய பாடலின்
ஒரு மொழிபெயர்ப்பாக‌
அந்த "நீல வண்ணன்" போல்
உயர உயரக் கட்டிடமாய்
நெடிதுயர்ந்து நிற்கிறது ஆலயம்.
அந்த "புனித மாட்டுக்கொட்டிலை"
திருப்பாற்கடலின்
பாம்புப்படுக்கையிலும்
நான் படம் பிடித்துக்கொண்டேன்.
ஓங்கி ஒலிக்கும்
எல்லாப்புகழையும் இறைவடிவமாக்கும்
தன்மை கசிந்த மனிதத்தையும்
மனத்தில் அச்சிட்டுக்கொண்டேன்.
வீரமும் தியாகமும்
வடிவெடுத்த‌
அந்த "கிரந்த சாகேப்புக்கு"
கவரி வீசி
கண்களில்
பனிக்கச்செய்தேன் மனத்தை.
"மெஸ்ஸையா" இன்னும்
வரவில்லை
அவர்களோடு
அந்த யூத பஸ் ஸ்டாப்பில்
இன்னும் காத்துக்கொண்டிருக்கிறேன்.
அரச மரத்து இலைகளோடு
அன்பை
இன்னும் கிசு கிசுத்துக்கொண்டிருக்கும்
அந்த அரச முனிவனின்
கச்சாமியின்
காலடியில் வீழ்த்தக்கிடக்கின்றேன்.
எல்லாவற்றையும்
களைந்த நிர்வாணத்தில்
பிரபஞ்ச பேரொளியின் பிரளயத்தில்
ஜைனனாய் கல்லில்
இறுகத்தொடங்கி விட்டேன்.
கன்பியூஸியஸ் சொன்ன‌
சமுதாய ஆன்மாவுக்கு
கண் மூக்கு முகம் அமைத்து
பிரபஞ்ச மண் பிசைந்து உருவம் செய்து
அகத்துள் நுழைந்து பார்த்தேன்.
மாசே துங்..லெனின் என்றாலும்
மார்க்ஸ் என்றாலும்
மானிடம் நோக்கி
கடவுளை உமிழ்ந்து எறியும்
ஒரு கடவுளின் கடவுளைக்கண்ட
கருத்துகளிலும் வியர்த்து வியந்தேன்.
நியூயார்க்கில் கடற்கரையில்
மனித விடுதலை உணர்ச்சியின்
கரு தாங்கிய ஒளியின்
அந்த தேவதையின்
மாணிக்க கிரீட சாளரங்களில்
நின்று கொண்டு
ஒரு பிரம்மாண்ட தரிசனம் செய்தேன்.
விஞ்ஞானம்
அங்கே ஊர்த்துவ தாண்டவம் செய்தது.
அதன் விரிகூந்தலில்
கோடி கோடி...கோடி
பால் வெளியின் ஒளி மண்டலங்கள்.
டார்க் எனர்ஜி ..டார்க் மேட்டர் எனும்
இருட்டுப் பிண்டமாய் இருட்டு ஆற்றலின்
இதய துடிப்புகளாய்
சிவம் ஆனதை சிலிர்க்க சிலிர்க்க நின்று
பார்த்து
பேரொன்றியம் ஆனேன்.
(கிராண்ட் யூனிஃபிகேஷன்)
ஹிக்ஸ் போஸானும் நியூட்ரினோவும்
அலங்காரத்தேரில் பவனி வர‌
"செர்ன்" அணு உலைக்குள்
நானும் கரைந்து போனேன்.
.........
..........
"என்ன எல்லாம் கருத்தில் நுழைந்ததா?"
"எல்லாம் நுழைந்தது
வால் மட்டும் நுழையவில்லை!"
கலைவாணர்
காதுகளில் ரீங்கரித்துக்கொண்டே இருக்கிறார்.

=========================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக