செவ்வாய், 29 டிசம்பர், 2015

வெள்ளமோ வெள்ளம் (4)





வெள்ளமோ வெள்ளம் (4)



செம்பரம்பாக்கம்.
=============================================ருத்ரா


ஒரு அடர்மழை இரவில்
அலையடித்துக்கொண்டிருந்தது
இந்த அலாவுதீன் விளக்கு பூதம்.
இதை யார் தேய்த்து வரவழைத்தது?
இந்த கெட்ட பூதம்
அடுக்கு மாடி கட்டிடங்களின்
அடி வயிற்றுள் குடியமர்ந்ததால்
அவை எல்லாம்
அழிவின் "கிட்டங்கி" ஆகிப்போனது.
ஒரு பருக்கைச் சோறும்
லட்சாதிபதிகளின் வாய்க்கு எட்டவில்லை.
அழுகின்ற கோடீஸ்வர சிசுக்களுக்கும்
ஒரு சொட்டு பால் இல்லை.
சாக்கடைகளால்
தண்ணீர் முழுவதும்
கற்பழிக்கப்பட்டு விட்டது.
அட்டைப்பணங்களில்
அடைகாத்துக் கிடந்தும்
கிடைப்பிணங்களாய் கிடந்தனர்.
நேனோ செகண்டுகளில் கூட‌
இரைந்து கிடக்கும் செல்ஃபோன்கள்
இறந்து கிடந்தன.
சாதி மதம் ஏழ்மை செல்வம்
எல்லாம் ஒரே மாதிரியாய்
தோலுரிந்து நிர்வாணம் ஆகின.
அப்பட்டமான மௌன அழுகைகளை
மறைக்கும் ஆடைகள் அங்கே இல்லை.
ஆயினும்
அற்புதம் கண்டோம்.
மானிடம் அழுகிடவில்லை.
அது வரை "அண்ட்ராய்ட்டின்"
அந்துப்பூச்சிகளாய் இருந்த‌
இளைஞர் கூட்டம்
எப்படி ஒரு புதுயுகப்பறவையாய்
கிளர்ந்து எழுந்தது?
அந்த
மனிதம் முன்னே
மதங்கள் எல்லாம் மண்டி போட்டன.
தங்கள் அர்த்தங்களை கனமான அகராதிகளில்
புரட்டிக்கொண்டிருந்த‌
கடவுள்கள் எல்லாம்
இந்த மழை ஈசல்களுக்கு
இறகுகள் தந்த "மனிதத்தின் முன்னே" தான்
தங்களின் அர்த்தங்களின்
தடம் அறிந்தன.
இடம் அறிந்தன.
அது போகட்டும்.
எந்த இயற்கையாலும்
விளங்கிக்கொள்ள முடியாத‌
எந்த செயற்"கை"
அந்த தண்ணீர்ப்பூதத்தை
விடுதலை செய்து
இந்த மக்களை கண்ணீர்ச்சிறைக்குள்
தள்ளியது?

==================================================






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக