திங்கள், 7 மார்ச், 2016

உன் மின்னல் யுகம்!




உன் மின்னல் யுகம்!
==========================================ருத்ரா

பெண்ணே!
இந்த உலகம் வட்டமானது
என்று நீ தெரிந்து கொண்டாய்
உன் "வளையலை" வைத்து!
சூரியனின்
காலைச்சிவப்பைக்கூட‌
உன் குங்குமப்பொட்டை
வைத்து தான் பார்த்துக்கொண்டாய்.
தந்தை என்றும்
தம்பி அண்ணன் என்றும்
உறவுகளின் அர்த்தங்களைப் புரட்டும்
உன் அகராதியில்
ஒரு மனிதன் எனும்
பல அர்த்தங்களை
நீ புரிந்து கொண்டது
உன் "கணவனை" வைத்து தானே!
"கொழுநற் தொழுதெழுவாள்
பெய் எனப்பெய்யும் மழை"
என்றானே!
உண்மை தான்.
உன் அவனுக்கு
உன் கண்ணீர் மழை
மட்டுமே பிடிக்கும்.
எரியும் சிகரெட் நுனிகளை எல்லாம்
உன்மேல் வைத்து
"ப்ரெய்லி"போல் தடவிய‌
அந்த உள்ளம் இல்லாத‌
குருடனுக்கு
விழியாக இருந்த நீ உன்
வழியைத்தான் மறந்து போனாய்.
நம் சங்கத்தமிழில்
மனம் ஒன்றிய அந்த
இரு மான்களைப் பற்றிய‌
பாலைவனத்துப்படம்
பசுஞ்சோலையாய்
பலப் பல நூற்றாண்டுகளையும்
தாண்டி ஒளிர்கிறது.
சில சொட்டு நீர் மட்டுமே
அங்கு உள்ளது.
இது குடிக்கட்டும் என்று
அதுவும்
அது குடிக்கட்டும் என்று
இதுவும்
கள்ளம் செய்யும் அந்த அன்பின்
கனபரிமாணத்துள்
ஆயிரம் பிரபஞ்சங்கள் அடங்கும்.
இன்று ஆணின்
"ஈகோ"த்தனங்களின்
ஈனத்தனங்களுக்கோ
அளவில்லை.
ஆனாலும் இது
சிறு விழுக்காடுதான் என்று
தள்ளி விடுவதற்கில்லையே.
விழிக்காட்டின் உன் மௌனத்தீயில்
தெரிகின்ற
ஒரு விடியல் வெளிச்சம்
இந்த வானங்களின்
ஊமை விளிம்புகளை
அடித்து நொறுக்க‌
அலை அடித்து கிளம்பியிருக்கிறது.
உன் குங்குமச்செப்புள்
சுருண்டுகிடக்கும்
"கூகிள்"கண்களின்
கணினி வீச்சில்
அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு
ஒரு புதிய "ஆண்ட்ராய்டு" அழகில்
அறிவின் எழில் போர்த்திய‌
வெட்கத்தில்
கன்னம் சிவந்து நிற்கிறது.
எல்லோருக்கும் இங்கே ஒரு
புதிய யுகம்!
பெண்ணே! உனக்கு மட்டும் இது
உன் மின்னல் யுகம்!

==========================================ருத்ரா இ.பரமசிவன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக