பாரதியின் துடிப்பு
=====================================================
ருத்ரா இ,பரமசிவன்
"தூண்டிற் புழுவினைப்போல்
சுடர் விளைக்கினைப் போல்"
................
................
பெண் மனத்தின் துடிப்பை அறிய
தூண்டில் முள்ளில்
கழுவில் ஏறி எழுதியிருப்பானோ
பாரதி!
அந்தக்காற்றின்
பேய்க்கூந்தல் ஆட்டத்தில்
அந்த சுடர்ப்பிஞ்சு உருவில்
கூடு விட்டு கூடு பாய்ந்திருப்பானோ
பாரதி!
காதலுக்குள் கண்ணம்மாவையும்
கண்ணம்மாவுக்குள் காதலையும்
ஒரு மெல்லிய மயிற்பீலி வருடும்
காற்றின்
ஆயிரமாயிரம்
ரோஜா இதழ் அடுக்கில்
ஊடுருவிக்கொண்டானோ
பாரதி!
ஏதோ ஒரு ஓலைப்பந்தலின்
கீற்றுக்கயிறுகள்
அசைந்து கொண்டிருக்கின்றன.
பெரிய கீற்று ஒன்றும்
சிறிய கீற்று ஒன்றும்
காற்றில் ஆட
அந்த ஊற்றில் நுழைந்து
வள்ளி முருகன் கல்யாணம்
கண்டு களித்து
வசன கவிதை புனைந்தானே
பாரதி!
அவன் எழுத்துக்கள் அத்தனையும்
உயிர்.
அவன் எழுத்துக்கள் அத்தனையும்
மெய்.
பாரதி எனும் இன்பத்தமிழ்
பார்த்தசாரதி கோவில் யானையுடனா
முற்றுப்புள்ளி பெற்றது?
அந்த ஆவேசத்தமிழை
ஒரு கோவிலோடு முடிச்சுப்போடும்
ஆத்திகத்தமிழ் இல்லை
அவன் தமிழ்.
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று அவன் எறிந்த கேள்வியில்
நம் ஆகஸ்டு பதினைந்துகள்
இன்னும் கொழுந்து விட்டுக்கொண்டுதான்
இருக்கின்றன?
ஓ!மனிதா!
இந்த "மந்தைத்தனத்திலிருந்து"
மனிதனாய்
உன் விலங்கொடித்து
சிறகடிப்பது எந்நாளோ?
என்ற ஏக்கமும்
அந்த தூண்டிற்புழுவிலும்
சுடர் விளக்கிலும்
இழையாடுகிறது.
வெறும்
முண்டாசு உருவம் அல்ல அவன்!
கொடுமைகளை
முட்டித்தள்ளும் உணர்வு அவன்!
=====================================================