ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

கோட்டை



"கோட்டை "
===================================================ருத்ரா இ.பரமசிவன்



வெள்ளையன் விட்டுப்போன பேய்வீட்டில்
ஜனநாயகம்
சதுரங்கம் ஆடிக்கொண்டிருக்கிறது.

புது மனை குடிபுக‌
குறுகிப்போன மனத்தில்
இடமே இல்லை.
அதனால்
இந்த பூத பங்களாவில் தான்
வாக்குகளுக்கு
ஜமா பந்தி!

வாசிக்கப்படுவது கேட்கிறது.
விவாதங்கள் கேட்கவில்லை.
மரத்துப்போன மரமேஜைகளில்
கைகள் வரட்டி தட்டுவது
மட்டுமே கேட்கிறது.

மின்னணுப்பொறியின்
வாயில்லா பூச்சிகளின்
வாய்களுக்கும் கூட‌
அதிசய "ப்ளாஸ்திரி" அல்லவா இது.
நூத்திப்பத்து விதி.

கணினித்திரை திறந்து
நதிகள் ஓடுகின்றன.
மெட்ரோ ரயில்கள் தடதடக்கின்றன.
கோடி கோடி ரூபாய்கள்
நலத்திட்டங்களாய்
விசை தட்டலில்
வீசி யெறியப்படுகின்றன.

கோட்டையை இயக்க‌
புழக்கடையில்
பாட்டில் பாட்டில்களாய்
கோட்டை அடுப்பில்  தயார்.
டாஸ்மாக் சமையல் தான்.
இந்த போதைகளின் பாதைகளுக்கு
மைல் கற்களே இல்லை
என்ற ரகசியம் மட்டுமே
இவர்கள் கம்பியூட்டர்களின் பாஸ்வர்டு.

தேர்தல் ஆணையம்
கழுத்தைப் பிடித்துக்கொள்ள‌
கண்ணுக்குத்தெரியாத வெட்டரிவாளும்
கைகளும்
ஓங்கி ஓங்கி விழ‌
வெற்றிகளின்
பிரியாணி ரெடி.
பாவம்
மாமிசமாகிப்போன ஆடுகளே
தன் மாமிசத்தை
கறி விருந்து சாப்பிடும்
வினோத கிராஃபிக்ஸ் தான்
உலகின் மிகப்பெரிய நம் ஜனநாயகம்.

==============================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக