ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

நிழல்

 2014-07-02_19-01-23_972.jpg


நிழல்
========================================================ருத்ரா

 கனமான தருணங்களை சுமந்து சுமந்து
காய்த்துப்போனது என் உள்ளம்.
கவிஞர்கள் காலத்தை மையில் தோய்த்து
அன்னத்தூவி என்பார்கள்.
மயிற்பீலிகள் என்பார்கள்.
அவர்கள் காலம் எனும் உத்திரக்கட்டைகளை
தன் கற்பனை எனும்
பஞ்சு மண்டலங்களில் படுத்துக்கொண்டு
உருட்டித்தள்ளி விடுகிறார்கள்.
கடிகார முட்களையே உற்றுப்பார்
ஒரு ஐந்து நிமிடத்துக்கு!
முடியுமா?
"பாப்பிலான்" எனும் நாவலில்
அவன் பல ஆண்டுகளை
தனிமைச்சிறையில் 
நடந்து நடந்து தேய்த்து
அந்த காலப்பாம்பை நசுக்கியதை
மூச்சிறைக்க மூச்சிறைக்க எழுதியது தான்
நம் நினைவில் வந்து
கழுவில் ஏற்றிக்கொல்லும்.

 அந்த ஐந்து நிமிட தவம்
காப்பிக்கு "பால் காய்ச்ச" தேவைப்படுகிறது.
மாதர் அடிக்கு நெருஞ்சிப்பழம்
என்று
பெண்மையை மென்மையின் உருவகமாய்
வள்ளுவன் எழுதியிருக்கும்போது
இந்த காலத்தின் கனபரிமாணம்
அவனை என்ன பாடு படுத்தியிருக்கும்?
பத்து பன்னிரெண்டு நீண்ட கழுத்துக்களுடன்
அல்லது 
வெளி நோக்கி பிதுங்கிய குடல்களுடன்
அந்த அபூர்வ மரம்
நம் கண்ணுக்குத்தெரியாமல்
காலத்தின் நச்சரிப்புகளோடு
யுத்தம் செய்கிறதோ?
கணினி யுகம் என்றாலும்
பெண் என்பவள் 
கணினியையும் முந்திக்கொண்டு
முனைந்து ஓடுகிறாள்.
படைப்பின் ஒரு "சூபர் கம்ப்யூட்டரை"
தன் "சூலில்" முடிந்து வைத்திருப்பவள்.
ஒவ்வொரு பிரசவமும்
ஆயிரக்கணக்கான வெற்றுப்பக்கங்களை
சுருட்டி அவளிடம் வீச மட்டுமே
தெரியும் இறைவனுக்கு!
அவற்றை உயிர் நிரப்பி
இறைவன் தேடும் அர்த்தங்களையும்
அதில் அச்சிட்டு வார்ப்பவள் அல்லவா
தாய் எனும் பெண்!
இந்த மரம்
ஒரு தாயின் நிழல்

=============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக