திங்கள், 15 ஜனவரி, 2024

கடைசி வரிகள்.

 

சன்னல் திரைச்சீலைகள்

ஆடுகின்றன

சலங்கை கட்டிக்கொள்ளாமல்.

என்ன வந்தது அவைகளுக்கு?

கோபம் தான்.

மாமிச நாற்றம் பிடித்த

வில் அம்புகளால்

தீட்டு இல்லையாம்

வேட்டுவனின்

எழுத்தாணி உமிழ்ந்த

எழுத்துக்களாலும் 

தீட்டு இல்லையாம்.

வால்மீகியே

உன்னைக்கொண்டல்லவா

உன் வழிவந்த அந்த

மானிட இழையையே

வெட்டி முறிக்கின்றார்கள்.

"ஆமாம்

என் கதாநாயகனையே

இவர்கள்

என்ன பாடு படுத்தினார்கள்?

இவர்கள்

என்ன காரணம் வேண்டுமானாலும்

சொல்லிக்கொள்ளட்டும்

அந்த சரயு நதியில்

அவன் தற்கொலை  

செய்து கொண்டதற்கும்

அந்த மன உளைச்சல்களே  காரணம்

 அந்தக் கண்ணீர்

ஒரு ஊழித்தீயாக

அம்பு விடத்தான் போகிறது.

நான் எழுதாமல் விட்ட 

கடைசி வரிகளும்

அவையே தான்.

-------------------------------------------------

ருத்ரா.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக