காக்காய்ப்பாட்டு
==================================================ருத்ரா
வீட்டின் பின்னால் தோட்டத்தில்
நான் அந்த புல்லாந்தரிசில்
பனித்துளிகளை
கால் கட்டைவிரலால்
நக்கிப்பார்த்துக்கொண்டே நடந்தேன்.
சூரியன் சமைத்துக்கொடுத்ததில்
அவற்றிற்கு
ஏழுவர்ண ருசி.
இன்று காலை கண்விழித்ததிலிருந்தே
உள்ளம் உள்ளே எல்லாம் கலவரம் தான்.
இன்னும் சிறிது நேரத்தில்
என் நெஞ்சுக்கனத்திற்கு முட்டுக்கொடுத்துக்கொண்டு
புத்தகங்களை அள்ளி அணைத்துக்கொண்டு
கல்லூரி கிளம்பிவிடுவேன்.
கனம் தாங்க முடியவில்லை.
அவன் பாட்டுக்கு
ப்ராஜக்ட் நோட்டில்
ஐ லவ் யூ என்று
ப்ரொபோஸ் பண்ணிவிட்டான்.
பென்சில் எழுத்துதான்.
ரப்பரில் அளித்துவிட்டு
நெஞ்சில் செதுக்கிக்கொண்டேன்.
காதல் கல்வெட்டுகளுக்கு
வெண்ணெய் இதயங்கள் கூட
கருங்கல் சிற்பம் காட்டி நிற்கும்.
அதனால் இத்தனைப்புத்தகங்களில்
அதற்கு தொட்டில்.
"ஏண்டி!இத்தனை புத்தகங்களை சுமக்கிறாய்
நீ என்ன கழுதையா?"
அம்மா அதட்டினாள்.
ஏதோ சொல்லிவிட்டு நடந்தேன்.
அவன் பென்சில் இனிப்பு
புத்தகங்கள் எல்லாமே தான்.
கற்பூரவாசனை... இதுகளுக்கு எங்கே தெரியும்.
அவள் கல்லூரிக்கு கிளம்பிவிட்டாள்.
முழுதாக சொல்லவில்லை.
அம்மா இலேசாக சொல்லியிருக்கிறாள்.
இப்படி கடுதாசி கொடுத்து தான்
அப்பாவை கல்யாணம் செய்துகொண்டாள் என்று.
கொஞ்சம் சொல்லும்போதே
அம்மாவுக்கு முகம் எல்லாம்
குப்பென்று சிவந்து
வாய்க்கு பூட்டு விழுந்து விட்டது.
அப்படி இருந்தும்
சில டி.வி சீரியல்களில்
இந்த சாக்கரின் தடவிய காட்சிகள்
வரும்போதெல்லாம்...
"பொண்ணுங்களா இதுக?
காலை முறித்து அடுப்பில வைக்கணும்."
என்பாள்.
இப்போது
ஆஃபீஸில் எல்லாம் போய் சம்பாதிக்கும்
புதமைப்பெண் அம்மாவின் நெஞ்சுக்குள்
அன்று கூவிய "புதுச்சேரியின்"குயில்பாட்டு
கர்ண கடூரமாய் காக்காய் பாட்டு பாடுகிறதே.
இது தான் புரியவில்லை.
அந்த நோட்டுக்குள் விழுந்த கற்பூர வாசனையை
அம்மாவுக்கு எப்படி புரியவைப்பது?
பாவம்.அம்மா!
வாழ்க்கையின் முட்கூட்டில் தான்
இந்த காக்காய் பரிணாமம்.
கல்லூரிக்காம்பவுண்டுக்குள் எல்லாம்
காக்காய்களின் இரைச்சல்.
ஹிட்ச்காக் படத்து காக்காய்கள் போல்
கொத்து கொத்தாய் கூட்டம்.
மின்சாரக்கம்பியில் இசகு பிசகாய்
மாட்டிய ஒரு காக்கை
மின்சாரம் தாக்கி இறந்து அங்கேயே
தொங்கிக்கொண்டிருந்தது.
"மின்சாரப்பூவே" என்ற வழக்கமான
அவள் ஹம்மிங்
சடக்கென்று நின்றது.
வகுப்புக்கு நோக்கி
செல்லும் அவளின்
படபடப்பு அடங்கவில்லை.
என்ன இது?
காக்காய் சென்டிமெண்ட்ஸ்.
குயில்கள் கூ வென்கின்றன.
காக்காய் தானே அந்த
முதலெழுத்தை
உயிரெழுத்தை ஒலிக்கிறது..
அவள் படபடப்பு சட்டென்று அடங்கியது.
எதிரே அந்த "பென்சில்" மன்மதன்
முறுவல் வளைவின் கரும்புவில்லுடன்!
"ஹாய்" என்றான்.
இப்போது அவளும் ஒரு கம்பத்தில்
தொங்கிக்கொண்டிருந்தாள்.
=======================================================ருத்ரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக