ஞாயிறு, 11 மே, 2014

அன்னையின் அலைகள்




அன்னையின் அலைகள்
======================================ருத்ரா இ.பரமசிவன்
பாம்புச்சட்டை


அம்மா!
இமய உச்சியை
தொட்டாற்போல் பெருமிதம் உனக்கு.
எனக்காக நீ
உத்திரத்தில் தொட்டில் கயிறு
மாட்டும்போது.

உன் மார்பகம்
விம்மிய போது புரிந்து கொண்டேன்
என் பசி தீர்க்க‌
கேஸ் ஸ்டவ் பற்ற வைத்தாய் என்று.

ஒரு பூவைக் குளிப்பாட்ட‌
இன்னொரு பூ இங்கு இதழ்விரித்து
அமரச்செய்தது.
வாளியிலிருந்த பூக்கள்
பூப்போன்ற கை வழியே
அருவிப்பூ சொரிந்தது.
இந்த பூக்குளியலில் எஞ்சியதே
பூமியில் ஆறுகள் கடல்கள்
ஆயினவே.

எனக்கு உறைக்குமென்று
மிளகாயை தள்ளினாய்.
எனக்கு புளிப்பு ஆகாது என்று
புளியை ஒதுக்கினாய்.
எனக்கு எது தான் உணவு
உனக்கு மட்டுமே தெரியும்.
உன் ஆத்மாவை
எனக்கு ஊட்டினாய்.

இந்த செல்களுக்கு தெரியவில்லையே.
ரத்தமும் நரம்பும் கொஞ்சங்கொஞ்சமாக‌
உன்னிடம் முரண்டு பிடித்தது
உனக்கு தெரியவில்லையே.
இந்த சுரப்பிகளுக்கு முளைத்த‌
கள்ள ஊற்றுகள்
உனக்கு புரிபடவில்லையே.

அதோ காகிதம் படபடக்கிறது பார்.
அது என் கடிதம்.
உன் கருப்பைக்குள் இருந்தபோது
துடித்தது தான் இப்போதும் துடிக்கிறது.
உனக்கு நான் மட்டுமே என்று
நீ இருந்தாய்.
இன்று எனக்கு அவன் மட்டுமே....
அதோ கண்ணீரில்
கலந்த நீல மை எழுத்துக்கள்
உனக்கு புரிகின்றதா?

அவள் காகிதத்தை உற்றுப்பார்த்தாள்.
அம்மாக்களை
உரித்துப்போட்டுவிட்டு
ஓடிப்போகும்
புதிய அம்மாக்களின்
பரிணாமக்கொள்கை
அந்த மகள்களிடம் !
பாம்பு உரித்த சட்டைமட்டும்
அங்கே மிச்சம்.

வயிற்றைக் கிழித்து
உனக்கு உயிர் கொடுத்தேன்.
ஆனால்
உன் காதல் எனும்
சிசேரியன்
என் வாழ்க்கையையே கிழித்து
எடுத்துக்கொண்டு ஓடுகிறது.
என் முலையைக்கவ்விய‌
உன் உதட்டுச்சுவடுகள்
இன்னும் என்னிடம் தான்.
அதன் மின்காந்த அலைகளுக்குள் தான்
உன் தேடல்களும் ஓடல்களும்.
அறிவாயா?
ஓ!என் பெண்ணே அறிவாயா?

==================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக