புதன், 21 மே, 2014

கேள்வியும் நானே பதிலும் நானே





கேள்வியும் நானே பதிலும் நானே
===========================================ருத்ரா

கடவுள்
உண்டா?இல்லையா?
இருந்தால்
ஆணா? பெண்ணா?
ஆண் என்றால்
சிவனா?விஷ்ணுவா?
பெண் என்றால்
பார்வதியா?லட்சுமியா?
அஃறிணை என்றால்
உயிருள்ளதா?
உயிரற்றதா?
உயிரற்றதென்றால்
அதுவா?
இதுவா?
கடவுளுக்கு
மதம் உண்டா? இல்லையா?
இருந்தால் எந்த மதம்?
இல்லாவிட்டால்
ஏன் இல்லை?
அவர்
நாத்திகரா? ஆத்திகரா?
நாத்திகர் என்றால்
திராவிட நாத்திகரா?
ஆரிய நாத்திகரா?
ஆத்திகர் என்றால்
நித்யானந்தா பக்தரா?
சங்கராச்சாரியார் பக்தரா?
அவர் கடவுள் இல்லை.
அவர் மனிதன் இல்லை.
அவர் உயிரும் இல்லை.
அவர் உயிரற்றதும் இல்லை.
அவ‌ர் அறிவா?
அறிவு என்றால்
க‌ம்பியூட்ட‌ரா?"கை பேசி"யா?
அவ‌ர் அறியாமையா?
அறியாமை என்றால்
அவ‌ர் ப‌ன்றிக்காய்ச்ச‌லா?
ப‌ற‌வைக்காய்ச்ச‌லா?
அவ‌ருக்கு
நோவும் இல்லை
நொம்ப‌ல‌மும் இல்லை.
அவ‌ர்
ஜ‌ன‌ன‌மும் இல்லை
ம‌ர‌ண‌மும் இல்லை.
அவ‌ருக்கு பிற‌க்க‌த்தெரியாதா?
அவ‌ருக்கு பிற‌க்க‌ இய‌லாதா?
பிற‌ந்தால்
இற‌க்க‌த்தெரியாதா?
இற‌க்க‌ இய‌லாதா?
பிற‌க்க‌த்தெரியாத‌வ‌ரையும்
இற‌க்க இய‌லாத‌வ‌ரையும்
ப‌ற்றி
பிறக்கின்ற‌வ‌ர்க‌ளும்
இற‌க்கின்ற‌வ‌ர்க‌ளும்
வாழ்த்துக‌ளையும்
ஒப்பாரிக‌ளையும்
கூடி கூடி குரலெழுப்பி
ப‌ட்டிம‌ன்ற‌ம் ந‌டத்த‌ப்ப‌டுகிற‌தே.
ப‌ட்டிம‌ன்ற‌த்துக்கு
ஒரு ப‌க்க‌மா? இரு ப‌க்க‌மா?
......................
.........................
........................
அய்யோ சாமி..ஆளை விடு..
........................
........................
எங்கே ஓடுகிறீர்க‌ள்.
உப‌னிஷத்..உப‌னிஷ‌த்..
அப்ப‌டியென்றால்
அருகில் உட்காருங்க‌ள்..உட்காருங்க‌ள்..
என்று அர்த்த‌ம்..
இது தான் "கேள்விகளால் ஆன‌"
"ப்ர்ச்னோப‌னிஷ‌த்"
கேள்விக‌ளை
நீங்க‌ள் கேட்கிறீர்க‌ளா?
நான் கேட்க‌ட்டுமா?
.............
..............
"கும்.கும்.டும்.டும்
கும்மாங்..டும்மாங்க்"

இது ஸ்லோக‌ங்க‌ள் இல்லை.
கும்மாங்க் குத்துக‌ளின்
கொத்து கொத்தான‌ ஓசைக‌ள்...

கேள்விகளுக்கு
பதில்களும்
பதில்களுக்கு
கேள்விகளும்
பரிமாறிக்கொண்ட‌
அடி உதைகளின்
பூஜைகள் பஜனைகள்.

=============================================ருத்ரா
 08-05-2012...... 23:12:55







செவ்வாய், 20 மே, 2014

மராமரங்கள்

SDC12305.JPG

மராமரங்கள்
====================================ருத்ரா இ.பரமசிவன்

மறைந்து கொள்ளத்தானே வேண்டும்
உனக்கு.
இதையே மராமரங்களாக்கிக்கொள்.

தெய்வம்
காதல்
சத்தியம்
தர்மம்
அதர்மம்
ஜனநாயம்
ஆத்மீகம்
நாத்திகம்
சாதி மதங்கள்.

எப்படி வேண்டுமானாலும்
பெயர் சூட்டிக்கொள் மனிதனே!
இவற்றிலிருந்து 
கள்ளிப்பால் சொட்டுவது போல்
ரத்தம் கொட்டுகிறது
தினமும் உன் சொற்களில்.
மன சாட்சியில் வேர் பிடித்துக் கொண்டாதாய்
கண்ணாடி பார்த்துக்கொள்கிறாய்.
உன் பிம்பங்களுக்கு
நீயே மத்தாப்பு கொளுத்திக்கொள்கிறாய்.
மனிதனுக்கு மனிதன்
உறவாடுவதாய் நடத்தும்
உன் நாடகத்தில்
அன்பு எனும்
இதயங்கள் உரசிக்கொள்வதில்
உனக்கு பொறி தட்டுவதல்லையே
ஏன்?

உன் வீட்டுக்குப்பையை
இரவோடு இரவாக‌
அடுத்த வீட்டு வாசலில் கொட்டுகிறாய்.
மறுநாள் காலையில்
உன் வீட்டுவாசலில்
சூப்பி விட்டு எறிந்த மாங்கொட்டைகளும்
மீன் எலும்பு மிச்சங்களும்
மற்றும் மற்றும்
உன் கால் இடறுகிறது.
மாம்பழம் நீ சாப்பிடவில்லை.
மீன் சாப்பிடவில்லை.
எப்படி இது?
உன்னைப்போல்
அடுத்த வீட்டுக்காரன் 
விட்ட அம்புகள் இவை.
உன் நிழலில் உனக்கே அச்சம் கவிகிறது.
அதனால்
உன் வீட்டுத்திண்ணைக்கு
இந்த கனமான இரும்புக்கிராதிகள்.
என் நிழலைக்கூட இன்னோருவன்
எச்சில் படுத்தல் ஆகுமா?
என்று 
தனிமை வட்டம் ஒன்றை
உன்னை இறுக்கும்
கயிற்றுச்சுருக்காய் வைத்துக்கொண்டிருக்கிறாய்.

பார்
இந்த மரங்களை.
பட்டாம்பூச்சிகள் கூட 
இங்கே வந்து
படுக்கை விரிப்பதுண்டு.
சிறு குருவிகளும்
தங்கள் சுகமான குகைகளை
குடைந்து கொள்வதுண்டு.
அவைகளின்
அஜந்தா எல்லோரா ஓவியங்கள் எல்லாம்
அவற்றின் பூக்குஞ்சுகளே.
பொக்கை வாய் பிளந்து தீனி கேட்கும்
அவற்றின் பசியாற்ற‌
இந்த நீலவானம் முழுதும்
உழுது விட்டு 
இப்போது தான் வந்திருக்கின்றன.

நல்ல உள்ளமும் தீய உள்ளமும்
அம்பு போட்டு 
விளயாடும் இடங்களே
மனங்கள் எனும் மராமரங்கள்.
மரத்தில் மறைந்த மரமும்
மரத்தை மறைத்த மரமும்
இந்த கள்ளிகளுக்கும் தெரியும்.
அவற்றின் 
முட்களுக்கும் மலர்களுக்கும் கூட தெரியும்.
இயற்கையின் உள்ளுயிர்
கூடு விட்டு கூடு பாயும் 
வித்தையில் தான்
எல்லா விஞ்ஞான‌ங்களும் இங்கே
கழைக்கூத்தாடித்தனம் செய்கிறது.
இங்கே
வரிசையாய் நின்று கொண்டிருப்பது
திருவள்ளுவரா? திரு மூலரா?
ஐன்ஸ்டீனா? நீல்ஸ் போரா?
ஹெய்ஸன்பர்க்கா?பெட்ரண்ட் ரஸ்ஸலா?
நம் ராமானுஜனா?இல்லை ராமானுஜரா?

=================================================================









ஞாயிறு, 11 மே, 2014

அன்னையின் அலைகள்




அன்னையின் அலைகள்
======================================ருத்ரா இ.பரமசிவன்
பாம்புச்சட்டை


அம்மா!
இமய உச்சியை
தொட்டாற்போல் பெருமிதம் உனக்கு.
எனக்காக நீ
உத்திரத்தில் தொட்டில் கயிறு
மாட்டும்போது.

உன் மார்பகம்
விம்மிய போது புரிந்து கொண்டேன்
என் பசி தீர்க்க‌
கேஸ் ஸ்டவ் பற்ற வைத்தாய் என்று.

ஒரு பூவைக் குளிப்பாட்ட‌
இன்னொரு பூ இங்கு இதழ்விரித்து
அமரச்செய்தது.
வாளியிலிருந்த பூக்கள்
பூப்போன்ற கை வழியே
அருவிப்பூ சொரிந்தது.
இந்த பூக்குளியலில் எஞ்சியதே
பூமியில் ஆறுகள் கடல்கள்
ஆயினவே.

எனக்கு உறைக்குமென்று
மிளகாயை தள்ளினாய்.
எனக்கு புளிப்பு ஆகாது என்று
புளியை ஒதுக்கினாய்.
எனக்கு எது தான் உணவு
உனக்கு மட்டுமே தெரியும்.
உன் ஆத்மாவை
எனக்கு ஊட்டினாய்.

இந்த செல்களுக்கு தெரியவில்லையே.
ரத்தமும் நரம்பும் கொஞ்சங்கொஞ்சமாக‌
உன்னிடம் முரண்டு பிடித்தது
உனக்கு தெரியவில்லையே.
இந்த சுரப்பிகளுக்கு முளைத்த‌
கள்ள ஊற்றுகள்
உனக்கு புரிபடவில்லையே.

அதோ காகிதம் படபடக்கிறது பார்.
அது என் கடிதம்.
உன் கருப்பைக்குள் இருந்தபோது
துடித்தது தான் இப்போதும் துடிக்கிறது.
உனக்கு நான் மட்டுமே என்று
நீ இருந்தாய்.
இன்று எனக்கு அவன் மட்டுமே....
அதோ கண்ணீரில்
கலந்த நீல மை எழுத்துக்கள்
உனக்கு புரிகின்றதா?

அவள் காகிதத்தை உற்றுப்பார்த்தாள்.
அம்மாக்களை
உரித்துப்போட்டுவிட்டு
ஓடிப்போகும்
புதிய அம்மாக்களின்
பரிணாமக்கொள்கை
அந்த மகள்களிடம் !
பாம்பு உரித்த சட்டைமட்டும்
அங்கே மிச்சம்.

வயிற்றைக் கிழித்து
உனக்கு உயிர் கொடுத்தேன்.
ஆனால்
உன் காதல் எனும்
சிசேரியன்
என் வாழ்க்கையையே கிழித்து
எடுத்துக்கொண்டு ஓடுகிறது.
என் முலையைக்கவ்விய‌
உன் உதட்டுச்சுவடுகள்
இன்னும் என்னிடம் தான்.
அதன் மின்காந்த அலைகளுக்குள் தான்
உன் தேடல்களும் ஓடல்களும்.
அறிவாயா?
ஓ!என் பெண்ணே அறிவாயா?

==================================================

வியாழன், 8 மே, 2014

கண்ணாடி சில்லுகள்

2013/11/26 

கண்ணாடி சில்லுகள்
==============================================ருத்ரா இ .பரமசிவன்

உடை தரிக்கும் முன்
கண்ணாடி பார்த்தேன்.
நான் உன்னிப்பாக‌
கண்ணாடி பார்ப்பது
மழித்தலின் போது
மட்டும் தான்.
இன்று ஏன் பார்க்கிறேன்
எனககே தெரியவில்லை.
நீயும் உன் முகரையும்
என்று
முகத்தில் ஓங்கி
ஒரு குத்து விடாத ஜீவன்
இந்த கண்ணாடி மட்டும் தானே.
பல தடவை
நான் என் முகத்தின்
எட்டு கோணல்கள் காட்டி
உதடு பிதுக்கியும்
கண்களை உருட்டியும்
இதை
என்ன பாடு படுத்தியிருப்பேன்.
எப்படியெல்லாம்
பொறுத்துக்கொண்டது.
என் பிம்பம்
அதில் ஒட்டிக்கொண்டு
என்னையே
கிச்சு கிச்சு மூட்டியது போல்
எத்தனை விளையாட்டுகள்
அதனிடம்.
இன்னும் ஒரு நாள் தானே.
காத்திருப்போம்.
பிம்பம் பார்க்க‌
இன்னொரு பிம்பம்
வந்துவிடுமாமே.
இப்படித்தான் சொன்னான்
கவிதையாக‌
என் நண்பன் சொன்னான்
ஒரு "மனைவி" என்பவளைப்பற்றி.
கண்ணாடி பார்ப்பது போல்
பார்த்துக்கொண்டே இருக்கலாமா?
எனக்கு ஆவல்
கட்டுக்கடங்கவில்லை.
பெண்ணை நான் பார்க்கவில்லை.
இன்று காலை தான்
இங்கு வந்து சேர்ந்தேன்.
அன்று மாலையே ரிஸப்ஷன்.
பெண்ணின் முகம் ஏறிட்டேன்.
திடுக்கிட்டேன்.
அதிர்ச்சியுற்றேன்.
ஒரு
அமாவாசை முகம் பார்க்க‌
ஒரு
பௌர்ணமியையா
எதிரே நிறுத்துவார்கள்?
என் பிம்பத்தை
அவள் பிம்பத்தில் பார்ப்பதா?
ஆயிரம் மடங்கு
அழகிய பிம்பம்
அவளுடையது.

ஒரு வழியாய்
மறுநாள் காலை
மாப்பிள்ளை அலங்காரத்துடன்
கண்ணாடியின் முன் போய் நின்றேன்.
என் பிம்பங்களை வைத்து
எத்தனை முறை
எப்படியெல்லாம்
அதை வதம் செய்திருப்பேன்.
எனக்குள் கோபம் கொளுந்துவிட்டது.
நரம்புக்குள்
சூரியனின் கொரானவே
கொப்புளித்து விட்டது.
ஓங்கி குத்துவிட்டேன்
கண்ணாடியில்
என் முகத்தின் மீது..
கண்ணாடியின் சார்பாக‌
என்னை பழி வாங்க..
பிம்பம் சில்லு சில்லுகளாய்
தெரித்தது..
கைவிரல் முட்டியெல்லாம் ரத்தம்.
கீழே... கீழே....
கெட்டி மேளத்துக்கு
காத்திருக்கும் கூட்டம்.
திமு திமு என்று வந்து விட்டது.
எல்லாவற்றையும்
துடைத்து வழித்துப்போட்டு விட்டார்கள்.
"மாங்கல்யம் தந்துனானே"
மந்திரமும் துவங்கிவிட்டது.
பெண் வீட்டுக்காரர்
ஒருவர் பெருமையாய்
பீற்றிக்கொண்டார்..
கை நிறைய சம்பாதிப்பவனாம் நான்.
இருட்டுப்பிண்டத்தின் கையில் தாலி.
எனக்காக ஒரு நிலவு
சிரித்துக்கொண்டு உட்கார்ந்து இருந்தது.


=========================================.

களிப்பருளும் "களிப்பே"!




களிப்பருளும் "களிப்பே"!
===============================ருத்ரா இ.பரமசிவன்

அரிஸ்டாட்டில் 
ஒரு சிறு நேர்கோட்டை
பாதியாக்கு என்றார்.
மீண்டும் பாதியாக்கு.
பாதியையும் பாதியாக்கு
பாதி..பாதி..
அது புள்ளிகள் ஆகலாம்.
கண்ணுக்கு தெரிகிற புள்ளிகள் ஆகலாம்.
கண்ணுக்கு தெரியாத புள்ளிகள் ஆகலாம்.
ஆனாலும்
பாதியாக்கு
பாதியை பாதி ஆக்கு...
எது ஞானம்?
எது அஞ்ஞானம்?
அது மெய்ஞானம்?
எது விஞ்ஞானம்?
முடிவில்லாததற்கு
முடி போட்டு குடுமி போடமுடியாது.
முனை தெரியும் வரை
கையில் கருத்தில் நிரடும் வரை
பாதியாக்கு
பாதியாக்கிக்கொண்டே இரு.
கிரேக்க மொழியில்
மெலிடஸ் (கிமு 610_540)
இதை "அபெய்ரான்" என்றார்.
இன்ஃபினிடி என்று
இது நுண்கணிதம் ஆயிற்று.
லிமிட்டிங் டு சீரோ என்பது
டிஃபரன்ஷியல் கால்குலஸ்.
லிமிட்டிங் டு இன்ஃபினிடி என்பது
இன்டெக்ரல் கால்குலஸ்.
தொகுத்ததை பகுத்த போதும்
பகுத்ததை தொகுத்த போதும்
வெறுமையே அங்கு விஸ்வரூபம்.
விஞ்ஞானிக்கு அது ஹிக்ஸ் போஸான்.
மெய்ஞானிக்கு அது ஹிரண்யகர்ப்பன்.
ஆத்திகத்தையும் நாத்திகத்தையும்
குவாண்டம் பிடித்து
ஒரு லிங்கம் செய்தால்
அதுவே இங்கு ஒரு
குவாண்ட லிங்கம்.
ஃபெர்மியானும் போஸானும்
கொண்டு பிசைந்த லிங்கமே அது.
பாலுக்குள் தயிர் உண்டு.
பால் இல்லாமலேயே
தயிர் அங்கு எப்படி வந்தது?
வெறுமையே மத்தாகி
வெறுமையே கடலாகி
கடைந்து வந்ததில்
"திடீர்" என்று 
எப்படி அது திரண்டு வந்தது?
ஹிக்ஸ் துகளே 
"கடவுள்" துகள் ஆகிப்போனது.
பால் கடைவது போல்
தீ கடைந்த மனிதனுக்கு
தீயே திடீர் அச்சம் ஆனது.
அச்சமே "கடவுளை" இங்கு
எச்சம் இட்டது.
ப்ராபபளிடியில்
ஒரு தொடர்பு எனும்
தொப்பூள் கொடியை
விழுது ஆக்கி 
வித்தை ஆக்கத்தெரிந்தவனே
அண்டத்தையும்
விண்டு பார்க்கத்தெரிந்தவன் ஆனான்.
அந்த "கப்ளிங் கான்ஸ்டான்டை"
சூத்திரம் செய்யவே 
இங்கு விஞ்ஞானிகளின் வேட்டை.
இந்த நுரை அளபடைவெளிக் கோட்பாட்டின்
(குவாண்டம் ஃபோம் தியரி)
திரை இன்னும் விலகவில்லை.
கடவுள் உண்டு என்பதிலும்
கடவுள் இல்லை என்பதிலும்
ரகசியம் ஏதுமில்லை என்பதே
சிதம்பர ரகசியம்.
யார் கண்டது?
குவாண்டத்தின் அந்த "பஞ்சு நுரை வெளி"
எனும் அந்த "திருவாதிரைக்களியில்"
தெரியலாம் அந்த சூத்திரம்.


==============================================

புதன், 7 மே, 2014

ஆரண்யகாண்டம்

SDC11534.JPG

ஆரண்யகாண்டம்
=====================================ருத்ரா இ.பரமசிவன்

இடுப்பில் டவல் கட்டிக்கொண்டு
டூத் பேஸ்ட் கேட்கும் கணவன்.
வாசலில்
பள்ளிக்கு அழைத்து செல்லும்
வாகனம் வந்த போதும்
வாய்க்குள் இட்லியை திணிக்கத்
தெரியாமல் விழிக்கும் பையன்.
எட்டாவது போகிறான் என்று பெயர்
இன்னும் அவனுக்கு வகுப்பு வாய்க்கால்கள்
எல்லாம் எட்டி வரவில்லை.
அடுப்பில்
சுரு சுரு வென்று
குண்டுவில் நாகம் சீறுவது போல்
ஆவிப்பீய்ச்சல்கள்.
எத்தனையாவது விசில் இது
மறந்து போய் விட்டது.

ஹோம் ஒர்க் எழுதிய நோட்டு எங்கே
என்று
முயல்குட்டி போல்
மிளகு கண்கள் 
உருட்டி விசும்பும் குட்டிப்பெண்..
பேபி கிளாஸ் தான் என்றாலும்
செமினாரில் தீசிஸ்
படிக்கப்போகும் பர பரப்பு
அந்த குட்டிக் கூகிளுக்கு..


இந்து பேப்பரை 
நான் என்னமோ
என் இடுப்பில் கட்டியிருக்கிறேன்
என்று
என்னிடம்
மாமனாரின் விசாரிப்பு.

மாமியார்
கம்பும் கையுமாக‌
காயப்போட்டிருக்கும்
துணியை எடுத்துக்கொண்டு
குளிக்கப்போகவேண்டுமாம்.
மடி.
மனிதன் தொடக்கூடாத‌
கம்பு மட்டுமே
தொடக்கூடிய மடி.
வேளுக்குடியார் சொன்ன சுலோகத்தை
எச்சில் படுத்திக்கொண்டு
அவர் குளியலறை கிளம்பிக்கொண்டிருக்கிறார்.

இதையெல்லாம் முடித்து
கணவரும் நானும் தான்
ஓட வேண்டும்
அலுவலகக்காடுகளுக்கு.
அதற்குள்
இந்த அடுப்படி ஆரண்யகாண்டம்
"முற்றோதல்"
முடிவுக்கு வரவில்லையே!

வாழக்கை எனும்
பொய் மானின்
அந்த தங்கப்புள்ளிகள்
எந்த அகராதியிலும்
அகப்படவில்லையே!





===============================================

வெள்ளை





SDC11907.JPG


வெள்ளை அடிப்போம் வாருங்கள்!
==========================================ருத்ரா

நீண்ட வலி.
ஊமைப்பாட்டுகள்.
முக்கல் முனகல்கள்.
குறுக்கே ஓடுகிறது
காட்டாறு எனும்
மே பதி"னாறு"....
முடிவு தெரியும்
எண்களின் அக்கரை அது.
முடிவின் முனையே தெரியாத‌
எண்ணங்களின் இக்கரை இது
மின் பொறியில்
குஞ்சு பொரிக்க காத்திருக்கும்
"வாக்கு முட்டைகள்".
மராமரங்களுக்கு
முன்னாலும் பின்னாலும்
இங்கு
அம்பு விடுவது
வறுமை அரக்கனும்
லஞ்ச அரக்கனும் தான்.
கொசுக்களை அடித்து அடித்து
குவித்து பழகி விட்டார்கள்.
தேர்தல் தோறும்
புதுப்புது கொசுக்களாய்
ரெக்கை முளைத்த
குண்டூசிகளின் மழை.
கை பேசி முக நூல்
தொலைக்காட்சி என்று
விளம்பர மழை
விளாசித்தள்ளியதில்
நாலாயிரம் நாய்க்குடைகள்
வரவேற்க காத்திருக்கின்றன‌
இந்த
இருட்டுச்சித்திரங்களை.
அறுபத்தேழு ஆண்டுகளாக‌
கருப்பு வானத்தை
வெள்ளையடிக்க‌
கொடிகள் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால்
இருட்டில் ஒன்றும் தெரியவில்லையே!
சுண்ணாம்புக்கு பதில்
கையில் ஏந்தியது
கனவுகள் கந்தல்களாகிப்போன‌
"தார்"ச்சட்டியை அல்லவா?

============================================



                                    

கனவு மிருகம்

SDC11958.JPG


கனவு மிருகம்
======================ருத்ரா இ.பரமசிவன்.

 கனவுப்புகை மிருகத்தின்
அந்த வெள்ளிக்கூர் நகங்கள்
இருட்டைக்கிழித்து
வெளிச்சத்தின்
வெள்ளருவி பாய்ச்சின.
நீல மின்னல் திரட்சிகளில்
ஆவேசமான தாகங்கள்
எல்லாவற்றையும்
குடித்து தீர்க்கத் துடித்தன.
ஒலியை
அந்த இளஞ்சிவப்புக்கழுத்துள்
மிடைந்து வைத்து
உடைந்து உடைந்து
கசியச்செய்து
கலங்கடித்தது கனவு.

 நான் எங்கு இருந்து
இந்த மண்ணுக்குள் வந்து
நரம்பின் நாற்று பாவினேன்?

 எங்கோ ஒரு அரபிய
பாலைமணல் துளியா நான்?

 அட்லாண்டிக்
அடிவயிற்று சதைமடிப்புக்குள்
கிடக்கும் கட்டிடச்சிதிலங்களின்
முனகல்களா நான்?

 குமரிக்கண்டத்தில் புதைந்து கிடக்கும்
குத்து விழியா நான்?

 ஒரு பனிக்காலத்து
பெரும்பிசாசாய் உறைந்துபோன‌
நயாகாராவின்
விறைத்துப்போன‌
பளிங்கின் நாக்குப்படலத்தில்
நழுவி விழும் மௌனப்பிழம்பா நான்?

 ஸ்கேன் பார்த்து
உதடு பிதுக்கினார் டாக்டர்.

 "நாற்பது நாள் நீலக்குழவி இது.
நாற்பது பிரபஞ்சத்தை
உருக்கிய ஒளியின் மூளையுடன்..
கண்ணைக்கூசுகிறது"
........
டாக்ட்ருக்கு தலை சுற்றியது.
"ராட்சசத்தனமாய்
ஒரு மெமரி சிப்..
இனி பூலியன் அல்ஜீப்ரா மழை பெய்யும்.
பைனரி அரிசி சமைத்திடுங்கள்.
அறிவுப்பசி..
அறி அறி அறி அறி
அல்லது
அழி அழி அழி அழி..

 மயிர்க்கீற்றில்
நாற்பது கோடி மண்டலங்களின்
கூகிள் கள் கூடு கட்டும்..

 கல்லும் ருசிக்கும்
மண்ணும் இனிக்கும்.
கணினிக் கர்ப்பம்
ஊழிகளின் ஊழிகளாய்
உள்ளே கரு பிடித்து..."

 விலுக்கென்று விழித்துக்கொண்டேன்.
வியர்வை முத்துக்கள்
உப்புக்கரித்தன.
கனவு மிருகம் செத்துக்கிடந்தது.

=====================================================
அமெரிக்காவின் அரிஸோனா "ஆண்டிலோப் கேன்யானின்"
திடுக்கிடும் கோணம் இது.
======================================================




                                  

கள்ளிக்காட்டில் ஒரு கனக சபை.

SDC12156.JPG


கள்ளிக்காட்டில் ஒரு கனக சபை.
======================================ருத்ரா இ.பரமசிவன்

எட்டு கோணலில் நின்ற‌
எண் குணத்தானே இங்கு
இது என்ன முள்ளின் கூத்து?
கள்ளிக்காட்டில் ஒரு கனக சபையா?
இங்கே எப்படி என்றேன்?

"அரிஸோனா கள்ளிச்சபையும்
எனக்கு ஒரு சிதம்பரம் தான்.
ரகசியம் ஏதுமில்லை.
ஐந்து பூதத்துக்கும்
ஐந்து சபைகள் வைத்தேன்.
ஆறாம் பூதம் ஒன்று
இங்கு தான் உண்டு கண்டேன்.
கணினி பூதம் அது
அதற்கோர் சபையும் செய்தேன்.
கணினியில் என் "கியூ பிட்ஸ்" தான்
ஊர்த்துவ தாண்டவமாகும்.
முள்ளிலே போட்ட முடிச்சு
மலரிலே அவிழ்ந்து போகும்.
எத்தனை கைகள் பார்.
எத்தனை கால்கள் பார்.
அவிர்சடை விரிந்ததென்றால்
ஆரக்கிள் என்று சொல்வார்.
உடுக்கைகள் ஒலித்து விட்டால்
யூனிக்ஸ் சிஸ்டம் தெரியும்.
அண்டமே அதிரவைக்கும்
அண்ட்ராய்டு என்னுள் உண்டு
பிக்பேங்க் வெடிக்கும் முன்னே
திரியினை பற்ற வைக்கும்
திரி சூலம் என்னிடம் தான்.
அமெரிக்கர் தெரிந்து கொண்டார்
அதனால் இங்கு வந்தேன்.
ஹிக்ஸ் போஸான் சூத்திரங்கள்
தீச்சுடர் ஏந்துமென் கையில்
தெரிந்ததென சொல்லுகின்றார்.
சாம்பலில் சிறகடிக்கும்
பறவையூர் ஃபீனிக்ஸ் கூட‌
திருநீறு தத்துவம் தான்
தெளிவுகொள் நன்றே இன்று."

===================================================