சனி, 7 ஜூன், 2014

ஹவாயி தீவுகள்

SDC11655.JPG



ஹவாயி தீவுகள்
====================================ருத்ரா இ பரமசிவன்


தென்னை மரம் தவம் இருப்பது
எத்துணை அழகு ?
கீற்று ஒவ்வொன்றும்
நடுங்கி நடுங்கி யாழ் மீட்டும்.
காற்றின்
கண்ணுக்குத்தெரியாத
நாவின் ஒலியை
அந்த நீட்டோலைகள் மொழிபெயர்க்கும்.
அமெரிக்கர்கள்
ஹாயாய் உட்கார்ந்து கடலை கொறிக்க
ஹாவாய் தீவு.
பசிபிக் கடல் ஆயிரம் மைல்களில்
மயிலிறகுகொண்டு துடைத்துப் பெருக்கினாற் போல்
நுரைகளில் திவலைகளில்
ஒரு பிரம்மாண்ட முற்றம்.
அலையாடு முன்றில் ஓரம்
அசையாமல் அசையும்
தென்னையின்  மௌனம்...
வெட்டி வெட்டி வீழ்த்தப்படும்
வேதாளங்களும்
விக்கிரமாதித்தனும்
இனி என்னென்ன  வாழ்க்கையின்
மூலை முடுக்கு களை
கதையாக்கலாம் என
எண்ணிக்கொண்டிருக்கலாம்.
"பேர்ல் ஹார்பர்" அமைதியாக
இங்கே காட்சிப்பொருளாய்
அங்கே லட்சம் லட்சமாய்
எலும்புக்கூடுகளை குவித்து முடித்த பின்
அலைகளோடு
கிச்சு கிச்சு தாம்பாளம்
ஆடிக்கொண்டிருக்கிறது..
ஓ தென்னை மரமே
நீ சொல்.
ஒரு ஜாடையில்
அந்த ஐன்ஸ்டீனைப்போல்
ஒரு "பம்பைக்கிராப்பில்"
உன் சிகையலங்காரம் சிலிர்க்க
உட்கார்ந்து கொண்டிருக்கிறாய்.
இந்த மனிதர்கள்
தங்கள் கடவுள் பொம்மைகளில்
எங்கள் பொம்மை தான் "ஒசத்தி"
என்று
அந்த "இ இஸ் டு ஈக்குவல் டு எம்சி  ஸ்குவாரை "
பரிசோதித்துப்பார்க்கக் கிளம்பிவிட்டால்..
அப்புறம் என்ன?
தென்னையும் இருக்காது  கீற்றும் இருக்காது .
உலகம் முழுதுமே
அழகிய வெள்ளி நுரைகளின்
சல்லாத்துணி மூடப்பட்ட
பசிபிக் எனும் சமுத்திரம் மட்டுமே
மிச்சமாகிப்போகும்.
பாருங்கள் !
இன்னும்
பசியோடு
கடலுக்குள்ளேயே  கூட  அது
மரணச்சுவையின்
எச்சில் ஊறிக்கொண்டு காத்துக்கொண்டிருப்பதை.

========================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக