வார்த்தைகள்
==================================ருத்ரா இ.பரமசிவன்
சிலருக்கு ஆழ்கடல் முத்து.
பலருக்கு மழைக்கால ஈசல் சிறகுகள்.
வாளின் காயம் ஒன்றுமில்லை.
வாயின் காயம் ஆயிரம் உயிர்களை தின்னும்.
பேசவேண்டும் என்று
மூளை
சமுத்திரத்தில் இறங்குமுன்னமேயே
ஒரு பெரிய சுநாமியாய்
வந்த வார்த்தையில்
மூளைக்கபாலமே
மண் மூடிப்போகிறது.
மனிதன்
ஏன் இப்படி
கனமான கற்களைத்தூக்கி தூக்கி
என் மீது எறிகிறான்.
கடவுளுக்கு இன்னும் புரியவில்லை.
"சஹஸ்ரநாமத்தை"
அவனுக்கு எப்படித்தான் புரிய வைப்பது?
நமக்கு இன்னும் புரியவில்லை.
வானம் வாய்பிளந்து
கற்பலகையில் சொன்னது
என்றான் மோசஸ்.
வார்த்தைகள்
யாருக்கும் புரியவில்லையே
புரிந்து பாருங்கள் என்றால்
மார்பில் ஆணி.
தலையில் முட்கிரீடம்.
லட்சக்கணக்காய்
வார்த்தைகள் வார்த்தைகள் வார்த்தைகள்.
ஆத்மாவில் அச்சடித்தது என்றார்கள்.
ஒரு கனத்த புராணபுத்தகத்தில்
நசுங்கிப்போன
அந்துப்பூச்சியில்
எல்லாவார்த்தைகளும்
முற்றுப்புள்ளி போட்டுக் கொண்டன.
உயிரின் உயிரின்
உயிரினுள் உயிரின் உயிரினுடன்
உரசும் ஓசைகள்
எங்கே மொழி பெயர்த்திருக்கக்கூடும்?
சாக்கடை ஓரத்து
மனிதப் பூச்சிகளின்
இரப்பைக்குள்ள்ளும்
குடலுக்குள்ளும்
பசியின் பரல்கள் ஒலிக்கின்றன.
பூர்வ உத்தர மீமாம்சங்கள்
என்ன வார்த்தையின் மாம்சங்களை
இங்கே புலிக்கூண்டுகளுக்குள்
வீசக்காத்திருக்கின்றன?
ஓங்காரத்தில்
கடல்கள் வாய் கொப்புளித்து
துப்பியது என்றார்கள்.
தோலை உரித்து
ரத்தம் வடித்து
எல்லாம் எரித்து தேடினார்கள்
மனிதனை
ஒரு மோட்ச சாம்ராஜ்யத்தில்.
கயிலாய வைகுண்ட
பொற்பிழம்புச்சதைக்கூழில்
பிழிந்து பிழிந்து உலர்த்தினார்கள்.
மனிதனுக்கு மனிதன்
முகம் காட்டும் வார்த்தைகள் மட்டும்
எங்கே புதைந்து போயின?
=======================================================