செவ்வாய், 1 நவம்பர், 2011

நுழைமுகம்





ருத்ரா இ.பரமசிவன்



வாருங்கள்

இது ஒரு வித்தியாசமான
கவிதைக்காடு.
பூக்கள் கூட
இங்கே தலைகீழாகவே இருக்கும்.
முத‌லில் முள் காட்டி
அப்புற‌ம் ம‌லர் காட்டும்
ரோஜாக்க‌ளே இங்கு அதிக‌ம்.
ச‌முதாய‌ த‌னிம‌னித‌ அவ‌ல‌ங்க‌ளைக்கூட‌
வாச‌லில் கூட்டிப்பெருக்கி
த‌ண்ணீர் தெளித்து
ர‌ங்கோலிக‌ளாக போட‌
ப‌ய‌ன்ப‌டுத்திக்கொள்ள‌வேண்டும்.

புல்லாங்குழ‌ல் புல‌ம்புகின்ற‌து.
வீணை அழுகின்ற‌து.
அலை ஓசைக‌ள் அர‌ற்றுகின்ற‌ன‌.
தென்ற‌ல் சுடுகின்ற‌து.
நில‌வு எரிக்கின்ற‌து.
இப்ப‌டி எதிர்ம‌றையாய்
பேனாவை கூர்தீட்டி
குவியும் எழுத்துக்காடுக‌ள் இவை.

நேர்ம‌றையாய் ந‌ம்பிக்கைக்க‌ட்டுரைக‌ள்
ம‌சாலா சேர்த்த‌ தின்ப‌ண்ட‌ங்க‌ளாய்
பேராசையின் ஈ மொய்க்கும்
வாக்கியப்பிண்ட‌ங்க‌ளாய்
வ‌ல‌ம் வ‌ரும் இக்கால‌ க‌ட்ட‌த்தில்
எதிர்நீச்ச‌ல் போல்
வ‌ரி காட்டி அதில்
வ‌ழி காட்டி
ப‌ய‌ண‌ம் தொட‌ர
எதிர்ப்ப‌டுவ‌தே
இந்த‌ ஊசியிலைக்காடுக‌ள்.

ப‌ண‌ங்காட்டு ந‌ரிக‌ளின் ச‌ல‌ச‌ல‌ப்புக்கு
இங்கு இட‌மில்லை.
ஊசிப்போன‌ உள்ள‌ங்க‌ளுக்கு
ஊசி போட்டு உர‌மேற்றும்
எழுத்து ம‌ருத்துவ‌ம் இங்கு உண்டு.
இந்த‌ ஊசியிலைக‌ள் ச‌ர‌ ச‌ர‌ப்பில்
நீல‌வான‌ங்க‌ளும் உராய்ந்து கொள்ளும்.
அந்த‌ தீப்பொறிக‌ள் ம‌ட்டுமே
இங்கு
இலை உதிர்க்கும்.
பூ உதிர்க்கும்.

ப‌ண‌க்கார‌ர்க‌ள் எப்ப‌டி
ப‌ண‌க்கார‌ர்க‌ள் ஆனார்க‌ள் என்று
ப‌டுதா விரித்து
ப‌த்திக‌ள் நிறைக்கும்
ப‌க்க‌ம் அல்ல‌ இது.
முர‌ண்பாடுக‌ளே இங்கு
வ‌ழிபாடுக‌ள்.
க‌ண்ணை மூடி ப‌க்தியாக‌ இருப்ப‌தை விட‌
க‌ண்ணைத்திற‌ந்து ச‌க்தியாய் சிலிர்ப்ப‌தே மேல்.

வாருங்க‌ள் வாருங்க‌ள்
வ‌ல‌ம் வ‌ருவோம்.
வ‌ர்ணாசிர‌ம‌ங்க‌ள் இல்லாத‌
ஆர‌ண்ய‌ காண்ட‌ம் இந்த‌
ஊசியிலைக்காடுக‌ள்.


அன்புட‌ன்
ப‌கிர்த‌ல் செய்வோம்.
ருத்ரா
< epsivan@gmail.com >


நவம்பர் முதல் நாள் 2011

3 கருத்துகள்:

cheena (சீனா) சொன்னது…

அன்பின் ருத்ரா

நுழைமுகம கவிதை நன்று - மிக மிக இரசித்தேன் - ஒரு வித்தியாசமான கவிதைக் காட்டிற்கு வருக வருக வாருங்கள் என வரவேற்கும் கவிதை. - வந்து மகிழ்ந்து கவிதையினைப் படித்து இரசித்து புதுமையான காட்டினில் வசித்துத் திரும்ப வைக்கும் கவிதை.

அன்புடன் பகிர்தல் செய்யும் ருத்ரா - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

அன்புள்ள திரு.சீனா அவர்களே

கருத்துக்கு நன்றி.
காட்டிற்கென்ன முள்ளில் வேலி?
என்றானே ஒரு எழுத்தின் பிரம்மா!
மூவர்ண ரோஜாகளில் தான்
நமது வேலி.
கனவுகளைத் தாண்டி
இங்கு
கண்களுக்கு வேலையில்லை.

அன்புடன் ருத்ரா

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

அன்பின் திரு.சீனா அவர்களே

அது
காட்டிற்கென்ன...அல்ல‌
"கள்ளிக்கென்ன முள்ளில் வேலி"
பிழை திருத்தங்களும்
பிழைகளும்
மண்டிப்போன காடு இது.

அன்புடன் ருத்ரா

கருத்துரையிடுக