இனியுமா? இனியுமா? இந்த சினிமா?
===================================================ருத்ரா
எம்.ஜி.ஆர்..ரஜினி..விஜய்..
விஜயகாந்த்..அஜீத்...
ஆர்யா...சூர்யா...
என்று
மந்தைவெளியில் மேய வந்தவை இவை.
மக்களே புல்லுக்கட்டுகள்.
இந்த பருத்தி புண்ணாக்குகளுக்கு
அரசியல் சட்டம் ஜனநாயகம் எல்லாம்
ஜிகினா ஜிகினா ஜிகினா மட்டுமே.
பாடலை எழுதியவன் கவிஞன்.
இசை அமைத்தவன் கலைஞன்.
காட்சி அமைத்தவன் ஒருவன்.
வாய்ச்சொல் வீரர்கள் கூட இல்லை
வெறும் வாயசைப்பு வீரர்களின்
அட்டைக்கத்திகளே இங்கு
அடுப்பில் உலை கூட்டுகின்றன.
நான் அணையிட்டால் என்று
இவனுக்கு இவனே
சவுக்கு அடித்துக்கொள்கிறான்.
சிக்கு மங்கு சிக்கு மங்கு செல்லப்பாப்பா
என்று அரிதாரக்கன்னங்கள் உரச
பிஞ்சுகள் எல்லாம்
பிஞ்ச கனவுகளுக்கு தையல் போடும்
வானில் பறந்து பறந்து
கும்மாங்குத்துகளுக்கு பஞ்சமில்லை.
இவர்கள் களத்தில் இறங்கினால்
சங்கிலி பறிப்புகளும்
கொள்ளை கொலைத்திருட்டுகளும்
காணாமல் போய்விடுமே.
குத்துப்பாட்டுகளும்
குலுக்கல் நடனங்களும்
இளசுகளை
சினிமா எனும்
கரும்புச்சாறு பிழியும் எந்திரத்தில்
பிழிந்தெடுத்தபின்
இந்த சக்கைகள்
வாக்கு போட்டன.
ஆனால் சக்கைகளைத்தான்.
மக்கள் மனத்தில் விழுந்த
அந்த மணிக்குரல் பாடகர்களோ
எங்கோ படுக்கையில் கிடக்கிறார்கள்
பாட்டுக்கு உதடுகள் உதவியவர்கள்
பவனி வருகிறார்கள்
அன்னா ஹசாரேக்கள் அழைக்கிறார்கள்
"என்னா" என்றாவது கேளுங்கள்!
லோக்பால் கூட இங்கு
சினிமாப்படம் போல்
கல்லா கட்டுவது
கண்களுக்கு தெரிகிறதா?
ஆண்டவன் கூட காப்பாற்ற முடியாது
என்று சொன்னவர்
ஆண்டவன் அருளால் காப்பாற்றப்பட்டது
அப்பட்டமான மகிழ்ச்சி நமக்கு.
இன்னும் அந்த எந்திரன்
"சனாதன" தர்மத்து பாபாவாய்
அன்ன தான ஆட்சிக்கே
"இலை"போட்டு பந்தி வைக்கிறார்.
வரவேண்டிய நேரத்தில் வருவேன் என்று
கரெக்டாய் வந்து
கரெக்டாய் ஓட்டு போடுகிறார்.
வாழ்க அவர் ஜனநாயகம்.
தமிழ்நாடு பிழைத்ததா?
தமிழ்நாடு "பிழை"த்ததா?
மீண்டும் வாய்ஸ் கொடுக்கும்போது
பார்க்கலாம்
சினிமா நாயக நாயகிகளுக்கு
பச்சை குத்திக்கொள்ளுங்கள்
பரவாய் இல்லை...ஆனால் நம்
பச்சைத்தமிழுக்கு
பச்சைத்துரோகம்
செய்யலாமா என்று
சிந்திக்கத்துவங்குங்கள்.
ஊழல் செய்தவர்களின் ஆட்சி
ஊற்றிக்கொண்டது...ஆம்
ஊற்றிக்கொண்டது தான்.
அதை
"ஊற்றிகொண்டே" வந்து
முழங்கியதும்.
ஊற்றிக்கொண்டதே.
அந்த திராவிடம் வேண்டாம்
இந்த திராவிடம் வேண்டாம் என்று
சொன்னவர் கிரீடத்திலும்
அந்த "காக்காய் சிறகு திராவிடத்தை"
சொருகித்தானே வைத்திருக்கிறார்.
காமெடியாய் வந்து
கதா காலட்சேபம் பண்ணியவர்
சிரிக்கவைத்தால் மட்டும் போதும்
சிந்திக்க வைக்க வேண்டியதில்லை
என்று இவர்கள்
பட்டனைத் தட்டிவிட்டு
பட்டம் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆர். பாட்டையே
எம்பி எம்பி பாடினார்.
இரட்டை மலை யிடையே
சூரியன் வரும் என்று.
இரட்டை இலை தான் வந்தது.
அந்தப்படங்களில்
வாயசைத்தவருக்கு பின்னால்
இருந்த அந்த
வெண்கலத்தொண்டைக்காரருக்கு
அல்லவா
வெண்சாமரம் வீசப்பட்டிருக்கவேண்டும்.
முகமூடிக்குப்பின்னே உள்ள
முகத்தைப்பற்றி கவலையில்லாமல்
முகம் இழந்து போகலாமா? தமிழ்
முகவரிகள்
தொலைந்து போகலாமா?
தமிழர்களே! தமிழர்களே!
நீங்கள் இளைப்பாறும்
அந்த நிழலை உற்றுப்பருங்கள்
பிணமாகிப்போன
உங்கள் நிழல்களா
உங்களுக்கு
உயிர்தரப்போகின்றன?
இனியுமா? இனியுமா?
இந்த சினிமா?
=====================================================ருத்ரா
2nd Nov.2011
சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே! வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்
செவ்வாய், 1 நவம்பர், 2011
நுழைமுகம்
ருத்ரா இ.பரமசிவன்
வாருங்கள்
இது ஒரு வித்தியாசமான
கவிதைக்காடு.
பூக்கள் கூட
இங்கே தலைகீழாகவே இருக்கும்.
முதலில் முள் காட்டி
அப்புறம் மலர் காட்டும்
ரோஜாக்களே இங்கு அதிகம்.
சமுதாய தனிமனித அவலங்களைக்கூட
வாசலில் கூட்டிப்பெருக்கி
தண்ணீர் தெளித்து
ரங்கோலிகளாக போட
பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
புல்லாங்குழல் புலம்புகின்றது.
வீணை அழுகின்றது.
அலை ஓசைகள் அரற்றுகின்றன.
தென்றல் சுடுகின்றது.
நிலவு எரிக்கின்றது.
இப்படி எதிர்மறையாய்
பேனாவை கூர்தீட்டி
குவியும் எழுத்துக்காடுகள் இவை.
நேர்மறையாய் நம்பிக்கைக்கட்டுரைகள்
மசாலா சேர்த்த தின்பண்டங்களாய்
பேராசையின் ஈ மொய்க்கும்
வாக்கியப்பிண்டங்களாய்
வலம் வரும் இக்கால கட்டத்தில்
எதிர்நீச்சல் போல்
வரி காட்டி அதில்
வழி காட்டி
பயணம் தொடர
எதிர்ப்படுவதே
இந்த ஊசியிலைக்காடுகள்.
பணங்காட்டு நரிகளின் சலசலப்புக்கு
இங்கு இடமில்லை.
ஊசிப்போன உள்ளங்களுக்கு
ஊசி போட்டு உரமேற்றும்
எழுத்து மருத்துவம் இங்கு உண்டு.
இந்த ஊசியிலைகள் சர சரப்பில்
நீலவானங்களும் உராய்ந்து கொள்ளும்.
அந்த தீப்பொறிகள் மட்டுமே
இங்கு
இலை உதிர்க்கும்.
பூ உதிர்க்கும்.
பணக்காரர்கள் எப்படி
பணக்காரர்கள் ஆனார்கள் என்று
படுதா விரித்து
பத்திகள் நிறைக்கும்
பக்கம் அல்ல இது.
முரண்பாடுகளே இங்கு
வழிபாடுகள்.
கண்ணை மூடி பக்தியாக இருப்பதை விட
கண்ணைத்திறந்து சக்தியாய் சிலிர்ப்பதே மேல்.
வாருங்கள் வாருங்கள்
வலம் வருவோம்.
வர்ணாசிரமங்கள் இல்லாத
ஆரண்ய காண்டம் இந்த
ஊசியிலைக்காடுகள்.
அன்புடன்
பகிர்தல் செய்வோம்.
ருத்ரா
< epsivan@gmail.com >
நவம்பர் முதல் நாள் 2011