கடற் குருகுகள்
=========================================================ருத்ராவெள்ளித்திவலைகளை
தின்னத் திரியும்
கடற் குருகுகளே!
கொஞ்சம் உங்கள்
பசியலைகளின் படுதாக்களை
சுருட்டி வைத்து விட்டு
அந்த வெள்ளிக்கொலுசுகளில்
கேட்கும் ஏக்கத்தை
உற்றுக்கேளுங்கள்.
பசிபிக் மங்கையின்
பில்லியன் ஆண்டுக்கனவின்
குரல் இது.
நீர்ப்பிழம்புகளின் பிரளயங்களை
நெளிந்து தாண்டிய
மானிடப்பரிணாமம்
கொண்டுவந்த சேதி என்ன?
ஓ! பறவைகளே
கூரிய அலகுகள் எனும் கேள்விகள் கொண்டு
கொத்தி கொத்தி
என்ன தேடுகிறீர்கள்?
இந்த மானிடம்
வெளிச்சமா?
வெளிச்சம் மறைக்கும் நிழலா?
நிழலில் ஒதுங்கத்தான்
மனிதன்
கடவுளைக் கண்டெடுத்தான்.
மனித வெளிச்சத்தில்
கடவுளும் கண்டுகொண்டது
தன் கடவுளை
===================================================