செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

மின்னலைக்காய்ச்சி..

SDC11933.JPG
அமெரிக்கா அரிஸோனாவில் "அண்டிலோப் கேன்யான் "


மின்னலைக்காய்ச்சி..
============================================ருத்ரா


எதிரிகளை மயக்க‌
உடம்பு வண்ணங்கள்.
குச்சி போல் ஒடிந்து கிடந்து
உட்காரவந்த சிறு பூச்சியை
பலகாரம் பண்ணிவிடுதல்.
பாறை போல் படர்ந்து கிடக்கும்
இடத்தில்
குழு மீன்கள்
திடீரென்று காணாமல் போதல்.
பாறையே நாக்கு ஆகிவிடும்
பகீர் வேட்டை.
அழகாய் வாய் பிளந்து
இதழ்கள் முறுவலித்து
ஆடும் கிண்ணப்பூக்களில்
சின்ன வண்டுகள் சிறை.
மனிதனின் மூளை
விரிந்து பரந்து
ஒளி உமிழும் ஆலவிழுதுகளாய்
வெளியே பிதுங்கி
கேலாக்சி விண்மீன் மகரந்தமாய்
தூவி மயக்கி
குவாண்டம் கம்பியூட்டிங்கில்
"அவதார்"புகை மண்டலமாய்
கிராஃபிக்ஸ் காட்டுகிறது.
புடைத்த தொடையுடன் வாலுடன்
முண்டைக்கண் உருள்விழியிலும்
காதலின் பாதரசம் ஊற்றி
...
கடைசியில் அங்கும்
மனிதன் கற்றாய் கரைய‌
ஒன்று ஒன்றை விழுங்கி..
கீதை(13.11) சங்கர பாஷ்யம் கூட‌
வர்ணம் பூசி அழைக்கிறது.

"மயி ச அனன்யயோகேன பக்தி அவ்ய அபிசாரிணீ
விவிக்த தேச சேவித்வ அரதி(ர்)ஜன சம்ஸதி"

பக்தி
காதல்
காமம்
கம்ப்யூட்டர்..எல்லாம் பிசைந்து
நியூரானின்
சைனாப்டிக் ஜங்ஷனில்
ஜெல்லி மீன் மயிர்த்தூவல்களால்
பர்கின் ஜே செல்களாய்
ஸ்லோகன்களில் வரிபிளக்கின்றன.

அந்த "அனன்யயோகம்"....
மக்கள் சுவாசங்களையெல்லாம் விலக்கிய‌
ஒரு "உன்மத்த" மோனம் எனும்
"என்னில்" (மயி)மனம் வை
என்கிறான் கிருஷ்ணன்
கூவி கூவி அழைத்து.

சோமச்செடியை நசுக்கி சாறு பிழிந்து
ரிக்குகளில் நுரைத்தாலும் சரி நொதித்தாலும் சரி..
விழிகள் நிலைகுத்தி
செருகிக்கொள்ள வேண்டும்.
மனசு...
மனசும் மனசும் புணர்ந்து
அறிவு அறிவைக் கலந்து
ஒளிக்கும் நிழலுக்கும்
நழுவிய அந்த‌
பிம்பத்தை
கையில் பிடியுங்கள்..
மின்னலைக்காய்ச்சி வடித்த சாராயம் இது.
ஞானத்தின் போதை அஞ்ஞானம்.
அஞ்ஞானத்தின் சிகரமே இந்த மெய்ஞானம்.
"ஹிக்ஸ் போசானை" கையில் பிடித்துவிட்டு
செர்ன் எனும்
நுண்ணணுக்கூடத்து வளையங்களின்
வளையல்களின்
ஒரு கிளுகிளுப்போசைக்கு
தவம் இருக்கும்
அந்த விஞ்ஞானம்
இன்னும் ஒரு கிண்ணத்தைக்கையில் ஏந்திக்கொண்டிருக்கிறது..
பரிமாணத்தின் கிண்ணத்தை.

============================================================
அமெரிக்கா அரிஸோனாவில் "அண்டிலோப் கேன்யான் "