அருவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அருவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 27 ஜூன், 2024

வாழ்க நற்றமிழர்!

 


நீராரும் கடலுடுத்த‌

நெடும்பேர் உலகமிது.

இனமென்றும் மொழியென்றும்

கோடுகளின் சிறைக்குள்ளே

பூட்டிக்கொண்ட உலகமிது.

முடிந்தவர்கள் முடியும் வரை

அள்ளிக்கொண்டபூமியிலே

மிஞ்சிய தெலாம் வெறும்

எலும்புக்கூட்டு கார்ட்டூன்கள்

உலவுகின்ற உலகமிது.

உலகப்பொது மானிடமும்

உலகப்பொது வாழ்க்கையுமே

அன்பென்றும் பண்பென்றும்

அணிவகுத்துக்கொண்டதில்லை.

அணுகுண்டு தோரணங்கள் 

அலங்கரிக்கும் அரசியலில்

விஞ்ஞான அறிவுகளும்

கணினிகள் என்கின்ற‌

நத்தைக்கூட்டுக்குள்

நாவடங்கி பேச்சடங்கி

செயற்கை மூளையென்ற‌

செப்பு விளையாட்டில்

வணிகம் மட்டுமே

செழித்தோங்கச் செய்ததனால்

மனிதம் எனும் வெளிச்சம்

மங்கியே போனதுவே.

போர்வணிகப் புகைமூட்டம்

பூதமாய் கிளம்பியதால்

அமைதிப் புறாக்கள்

சிறகடிக்க அஞ்சினவே!

அகம் பூத்து புறம் பூத்து

தமிழ் பூத்த புத்தொளியின்

தேசம் ஒன்றுண்டு.

உலகத்தீரே!உலகத்தீரே!

ஒரு சொல் கேளீர் உலகத்தீரே!

"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்

நூலோர் தொகுத்தவ‌ற்றுள் 

எல்லாம் தலை" என்று

ஒலித்த தேசம் அது.

இன்றும் எல்லார்க்கும்

ஒளி காட்டும் தேசம் அது.

வாழிய செந்தமிழ்!

வாழ்க நற்றமிழர்!

செந்தமிழ் 

நாடெனும் போதினிலே

புல்லரிக்கும் புல் கூட‌

எங்கள் தேசம்.


___________________________________________

சொற்கீரன்


செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

பெண்ணே !

பெண்ணே !  
==============================ருத்ரா

அம்மி மிதித்தது மிதித்தது தான்.
மிக்ஸி வந்தபின்
இன்னும் எதற்கு அம்மி.

"பெய்யெனப் பெய்யும் மழை"
எழுதும்போது ஞாபகத்துக்கு வந்தது
"வாசுகி"யின் கண்ணீர்.

அழாதே!பெண்ணெ!
முகம் துடைத்துக்கொள்...உனக்கு
வானம் கூட கிழித்து தரும் மின்னலை!

விமானம் ஓட்டு!நாட்டை ஆளு!
குலுங்குவது உன் வளையல்கள் அல்ல‌
இந்த உலகம்!

ராமன் காலில் சீதை விழுந்திருந்தாள்.
அதனால் தான் ராமன் கால் பட்டு
அகலிகை உயிர்த்தெழுந்தாள்.

நிலத்தை தோண்டி தோண்டி
பார்த்தது போதும் பெண்ணே !
"ஐ பேட்"உனக்கு ஆயிரம் ரெக்கைகள்.

==================================================ருத்ரா

செவ்வாய், 1 நவம்பர், 2011

நுழைமுகம்





ருத்ரா இ.பரமசிவன்



வாருங்கள்

இது ஒரு வித்தியாசமான
கவிதைக்காடு.
பூக்கள் கூட
இங்கே தலைகீழாகவே இருக்கும்.
முத‌லில் முள் காட்டி
அப்புற‌ம் ம‌லர் காட்டும்
ரோஜாக்க‌ளே இங்கு அதிக‌ம்.
ச‌முதாய‌ த‌னிம‌னித‌ அவ‌ல‌ங்க‌ளைக்கூட‌
வாச‌லில் கூட்டிப்பெருக்கி
த‌ண்ணீர் தெளித்து
ர‌ங்கோலிக‌ளாக போட‌
ப‌ய‌ன்ப‌டுத்திக்கொள்ள‌வேண்டும்.

புல்லாங்குழ‌ல் புல‌ம்புகின்ற‌து.
வீணை அழுகின்ற‌து.
அலை ஓசைக‌ள் அர‌ற்றுகின்ற‌ன‌.
தென்ற‌ல் சுடுகின்ற‌து.
நில‌வு எரிக்கின்ற‌து.
இப்ப‌டி எதிர்ம‌றையாய்
பேனாவை கூர்தீட்டி
குவியும் எழுத்துக்காடுக‌ள் இவை.

நேர்ம‌றையாய் ந‌ம்பிக்கைக்க‌ட்டுரைக‌ள்
ம‌சாலா சேர்த்த‌ தின்ப‌ண்ட‌ங்க‌ளாய்
பேராசையின் ஈ மொய்க்கும்
வாக்கியப்பிண்ட‌ங்க‌ளாய்
வ‌ல‌ம் வ‌ரும் இக்கால‌ க‌ட்ட‌த்தில்
எதிர்நீச்ச‌ல் போல்
வ‌ரி காட்டி அதில்
வ‌ழி காட்டி
ப‌ய‌ண‌ம் தொட‌ர
எதிர்ப்ப‌டுவ‌தே
இந்த‌ ஊசியிலைக்காடுக‌ள்.

ப‌ண‌ங்காட்டு ந‌ரிக‌ளின் ச‌ல‌ச‌ல‌ப்புக்கு
இங்கு இட‌மில்லை.
ஊசிப்போன‌ உள்ள‌ங்க‌ளுக்கு
ஊசி போட்டு உர‌மேற்றும்
எழுத்து ம‌ருத்துவ‌ம் இங்கு உண்டு.
இந்த‌ ஊசியிலைக‌ள் ச‌ர‌ ச‌ர‌ப்பில்
நீல‌வான‌ங்க‌ளும் உராய்ந்து கொள்ளும்.
அந்த‌ தீப்பொறிக‌ள் ம‌ட்டுமே
இங்கு
இலை உதிர்க்கும்.
பூ உதிர்க்கும்.

ப‌ண‌க்கார‌ர்க‌ள் எப்ப‌டி
ப‌ண‌க்கார‌ர்க‌ள் ஆனார்க‌ள் என்று
ப‌டுதா விரித்து
ப‌த்திக‌ள் நிறைக்கும்
ப‌க்க‌ம் அல்ல‌ இது.
முர‌ண்பாடுக‌ளே இங்கு
வ‌ழிபாடுக‌ள்.
க‌ண்ணை மூடி ப‌க்தியாக‌ இருப்ப‌தை விட‌
க‌ண்ணைத்திற‌ந்து ச‌க்தியாய் சிலிர்ப்ப‌தே மேல்.

வாருங்க‌ள் வாருங்க‌ள்
வ‌ல‌ம் வ‌ருவோம்.
வ‌ர்ணாசிர‌ம‌ங்க‌ள் இல்லாத‌
ஆர‌ண்ய‌ காண்ட‌ம் இந்த‌
ஊசியிலைக்காடுக‌ள்.


அன்புட‌ன்
ப‌கிர்த‌ல் செய்வோம்.
ருத்ரா
< epsivan@gmail.com >


நவம்பர் முதல் நாள் 2011