திங்கள், 1 செப்டம்பர், 2025

முனைப்போடு நடவுங்கள்.

 01 செப்டெம்பர் 2025

_____________________________________


செப்டம்பர் என்றால்

அந்த இனிய ஆங்கில இசை

நம் இதயத்துள்

ஒரு இளமையின் 

பூபாளம் விரிக்கும்.

இந்த பூந்தென்றலுக்குள்

புயல்களின் குயில் பாட்டுகளும்

மெல்லிய கீற்றாய் 

இழையோடும்.

ஆம்.

அந்த 

அக்டோபரும்

நவம்பரும்

நம் உலகத்து மானிட வரலாற்றில்

நட்டுச்சென்ற‌

ஒரு மின்னல் வெள்ளத்தின்

மைல்கற்களை

மறக்க முடியுமா?

நினைவு கூர நினைப்பவர்கள்

நினைத்துக்கொள்ளுங்கள்

நண்பர்களே!

மனிதம் 

ரத்தம் சொட்டும் 

அடிமைச்சங்கிலிகளில்

பிணைத்துக்கிடந்தது.

பழமையின் 

அபினித்தூக்கத்தில்

அமுங்கிக்கிடந்தது.

வரலாறு கண் விழித்தது.

அட!

அந்த சூரியனில் இத்தனை

தூசியா?

அறிவுத்துடைப்பம் கொண்டு

அந்த நெருப்பையே 

கழுவிச் சுத்தம் செய்தது.

எப்போதும் பகல் போல

விழித்தும் எழுந்தும் இருக்கலாமே

என்று

செயற்கையாய்க் கூட‌

அந்த பகலவனை

பக்குவமான தூரத்தில்

பக்கத்தில் வைத்துக்கொள்ளும்

சிந்தனை கூட‌

செயலுக்கு வந்து விடும் 

போலிருக்கிறதே!

"கம் செப்டம்பரின்"

ரொமாண்டிக் 

இசைக்கூட்டங்களுக்குப்பின்

அந்த‌

செங்குயில்களின்

விடியல் கீதங்களை

உங்கள் சிந்தனையில்

ஏந்திக்கொள்ளுங்கள்.

இப்போது உற்றுப்பாருங்கள்

உங்கள் கையின்

"கொட்டாங்கச்சிகச்சிக்குள்"

நூறு நூறாய் பிரபஞ்சங்கள்.

மனிதம் எனும் விஸ்வரூபமே

உங்கள் முன்னே!

முனைப்போடு நடவுங்கள்.

தடங்கல்கள் தவிடு பொடி!


____________________________________________

செங்கீரன்






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக