வியாழன், 23 அக்டோபர், 2025

தோழர் ராஜப்பா

 

தோழர் ராஜப்பா !

_________________________________________

இ பரமசிவன்.


தோழர் ராஜப்பா !

தோழமை வீரம் செறிந்த‌

மீசை ராஜப்பாவாக 

என் கண்முன்னால் இன்னும்

தெரிகிறார்.

பொறி பறக்கும் அவர் உரைவீச்சே

அவர் வைத்திருக்கும்

"உடை வாள்"

மூவேந்த மிடுக்குடன் 

நடக்கும்போதே

இமயத்துத்தமிழ் கொடி பறக்கும்

நிழல் தெரியும்.

உழைக்கும் வேர்வைக்காரன் 

போராட்டம் 

வெற்றி மகுடம் சூட்டுமென்றால்

அதில் பதிந்து இருக்கும்

மணிகளும் வைரங்களும்

வியர்த்தவனின் உப்புக்கடல்

முத்துக்கள் தானே.

அவன் விழுப்புண்களுக்கு

விலை ஏது?

ராஜப்பா கள நிலவரம் பேசினால்

முகவரி தெரியாத ஆனால்

அகவரிகளின் அக்கினி கொண்டு

எழுதும் அனுபவங்களின் துடிப்பாக‌

இருப்பவர்களை அங்குலம் அங்குலமாய்

விண்டுரைப்பார்.

போராட்டத்தோழர்களின்

நாடி நரம்புகள்

அவர் பேச்சில் முறுக்கேறும்.

வாய் மட்டுமா பேசும்?

மீசை கூட தீப்பொறி தெறிக்கும்.


(தோழர் ராஜப்பா தொடர்வார்)



(தோழர் ராஜப்பா தொடர்கிறார்)


அன்று எல் ஐ சி ஊழியர்கள்

ஒரு "பெரிய கம்பியூட்டர்"

எனும் ஆட்கொல்லி எந்திர மிருகத்தை

எதிர்த்து நின்ற போது

இந்த அறிவு ஜிவிகள் 

அதை காட்டு மிராண்டித்தனம்

என்றார்கள்.

இன்று அந்த மிருகம்

ராட்சத "செயற்கை மூளையாய்"

இந்த "அறிவு ஜீவி" வெள்ளத்தையும்

அடித்துக்கொண்டு

இன்று ஓடிக்கொண்டிருக்கிறது.

பங்கு மூலதன சூதாட்ட‌த்திலும்

அது பகடை உருட்டும் வேகத்தில்

மூலனப் பகாசுரர்கள் கூட‌

கண்மூடி கண் விழிக்கும் முன்

மண்மூடிப்போகும் 

அபாயத்தில் இருக்கிறார்கள்.

அன்று அந்த 

"இலாகோ விஜில்" முற்றுகையில்

நாம் முனை முறியாமல் நின்றோம்.

அந்தப்போரில் 

நாம் வீறு கொண்டு நிற்க‌

நமக்கு ஒரு புறநானூற்று வீரத்தைப்புகட்டி

அந்த கூர் தீட்டீய மீசையில்

அவர் முழங்கி நின்று "கர்ஜித்தது"

இன்னும் மறக்க முடியாத 

காட்சி அல்லவா!

அந்த செயல் மறவனுக்கு 

நெஞ்சம் சிவந்த நினைவுகளில்

ஒரு வீர வணக்கம் !!!!


(தோழர் ராஜப்பா 

இன்னும் நம்மிடம் தொடர்கிறார்)


_________________________________________

இ பரமசிவன்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக