இளஞ்சூறாவளியே எழுக!
________________________________
சுக்கா? மிளகா?
சொல் கிளியே.
சுதந்திரம் என்ன
உணர்வாயா?
பாவேந்தன்
அன்றே கொதித்தான்.
டூ கே கிட்ஸ்..
சரி தான்.
துள்ளித்துள்ளி
விளையாடு.
துள்ளித் துள்ளி
துடிக்கலாமோ
இந்த
தூண்டில் முள்ளிடம்?
பொன் தூண்டில்
மீன் விழுங்கியற்று
என்று
அன்றே சொன்னான்
டூ கே ஆண்டுகள்
தாண்டி நின்று.
அறிவு ஒளிரலாம்!
அறிவு ஒளியலாமோ
இந்த
அரிதாரம் அரிக்கும்
அட்டைக்காட்டில்.
எல்லோருக்கும்
எல்லாமும் என்று
சொல்லிச் சென்றவர்
எத்தனை?எத்தனை?
இப்படி
பல்லிகள் ஆட்டம்
பலித்திடுமா?
சிந்தனைப்புயலா?
அந்த குத்தாட்டம்.
வெத்தாட்டம் தானே
அறிவீரோ?
உழைத்தவர்
வியர்த்தவர்
எல்லாரும்
சுரண்டக்கொடுக்கவா
பிறந்திட்டார்?
புயல் தான் நீ
புரிந்து கொள்.
நிழல்கள் இல்லை
திரை இல்லை.
வாழ்க்கை இடறும்
மைல் கற்கள்
சோப்புக்குமிழிக்
கனவு இல்லை.
வாழ்வதை நீ
வாழ்ந்து தான்
காட்டிட வேண்டும்.
நடித்து வாழ்ந்திட
கிளிசரீன் போதும்.
கிழிசல் விழுந்த
சமுதாயம்
சீர்ப்பட வேண்டும்
அறிவாயா?
சமநீதி அமைப்பு
சரித்திரம் தந்த
படைப்பு.
போராட்டம்
போராட்டம்
இந்த தர்ணா கூட
போராட்டம்.
வெறும் ஜிகினா
அல்ல போராட்டம்.
தெரிவாய்
தெளிவாய்
எழுவாய் எழுவாய்
இன்றே நீ.
பிஞ்சு யுகமே
கிளர்ந்திடுவாய்!
பிஞ்சு விழுந்திடும்
போஸ்டர் அல்ல
உன் வாழ்க்கை.
பொருள் முதல் வாதம்
இருக்கையிலே
கனவு வாதமா
கை கூடும்?
நேற்றும்
இன்றும்
நாளையும் கூட
இளைய தலைமுறை
நீ தானே?
எண்ணம் நரைக்க
விட லாமோ?
திண்ணம் கொண்டு
திரண்டிடுவாய்.
அலைகள் காட்டும்
கடல் நடுவே
நெரிசல் காட்டவா
வருகின்றார்.
நெறிக்க வருவார்
உன் குரலை!
பாசிசத்தை
பாயஸம் என்பார்.
பசப்பல் வாதம்
பல சொல்வார்.
சினிமா எனும்
இனிமா கொடுத்து
உனை
ஓய்ந்திடச்செய்யும்
தந்திரமே உனைச்
சாய்ந்திடச் செய்யும்
விழித்திடுவாய்.
இளஞ்சூறாவளி
இனியும் நீ
இந்த
கிலு கிலுப்பையா
உன் புயல் கருப்பை?
தளர்வுகள் இனி
உனக்கில்லை.
தமிழா!தமிழா!
என
சொல்லிப்பார்.
புதிதாய்
கில்லிகள்
அடித்திடுவாய்.
வாழ்க தமிழ்!
வெல்க தமிழ்!
______________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக