ஏய் உன்னைத்தான்....
_________________________________
யூ ஆர் வாட் யூ ஹேட்!
கார்ல் ஜங் எனும்
பேரறிஞர் கூறியது இது.
"நீ யாரை வெறுக்கிறாயோ
நீ அவனே தான்"
ஆனால்
நான் அவனில்லை.
நீ நான் இல்லை.
யாரும் யாருமாக இல்லை.
இவை தான்
நாம் விரும்பும் 'உருட்டுகள்"
தத்துவம் என்ற சொல்
எப்போதும் நம்மீது
ஈக்களாய்
மொய்த்துக்கொண்டிருக்கும்.
நம் நாட்டு ஈ கொசுக்களைப்போல.
ஈக்கள் மொய்க்கும் இடமே
நம் கடவுள்கள் இருக்கும் இடம்.
அதனால்
அத்தனை தூப தீபங்கள் அங்கே.
கடவுள்
என்ற கத்தரிக்காயோ
வெண்டைக்காயோ
எப்படி முளைத்தது.
நம் பசியும் தாகமுமே
அதற்கான அறிவை தேட
வைத்தது.
அந்தக் கல் தடுக்கியதில்
அதில் நாம் விழுந்ததில்
இருந்து தான்
சிந்திக்க துவங்கினோம்.
அது ஒரு சிந்தனையாய்
மேலும் மேலும் சிந்தனையாய்
சிந்தனை மேல் சிந்தனையாய்
ஏன்
செல்ல வில்லை.
கல் தடுக்கி ஏன் விழுந்தோம்
என்று சிந்திப்பதற்குப்பதில்
நான் இந்தகல்லை
மிதித்து
தீட்டு படுத்தி விட்டோமோ
என்று
ஒரு சிந்தனை நம்முள்
குமிழியிட்டது.
என்ன சிந்தனை பாருங்கள்?
அப்போது தான்
ஒரு படுகுழியில்
நாம் விழ ஆரம்பித்தோம்.
விழுந்தோம்.
இன்னும் விழுந்து கொண்டே
இருக்கிறோம்.
உள்ளத்தில் விழுந்த ஓட்டை இது.
இப்போது நாம்
நம்மையே கிழித்துக்கொண்டு
கந்தல் ஆகிப்போனோம்.
ஆம்.
அந்த கல்லை மற.
உன்னை நினை.
உன் அருகில் இருக்கும்
இன்னொரு "உன்னை" நினை.
இப்போது தான்
மனிதனை நினைக்கும் மனிதனாக
ஆகின்றாய்.
உனக்குள் முகிழ்க்கின்ற
உன் பரிணாமக்கோட்பாடே இது.
______________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக