புதன், 31 ஆகஸ்ட், 2022

"குறையொன்றும் இல்லை.."

 "குறையொன்றும் இல்லை.."

புல்லாங்குழலில்

வீணையில்

வாய்ப்பாட்டில்

கீ போர்டுகளில் 

இன்னும் 

கிராமத்துக்கொட்டங்கச்சியில் கூட‌

கண்ணா!

அப்படித்தான் பாடுகிறோம்.

நீ 

எங்களுக்கு 

எந்த குறையும் வைக்கவில்லை.

ஆமாம்..

எங்களைப்பற்றி

நாங்கள் மனிதர்கள்

என்று

அறிந்து கொள்ளும்

வாய்ப்பையே 

நீ இன்னும் தரவில்லை.

ஆடுகளாக மாடுகளாக‌

எங்களை மேய்த்துக்கொண்டிருக்கிறாய்.

பரிணாமம் எனும்

கீதையைப்பற்றி அறியாமல்

மனிதனின் உள்விசையை

உணர்ந்து கொள்ளாமல்

உன் விஸ்வரூபத்தைக்கண்டு மட்டும்

பயந்து கொண்டு

பாடிக்கொண்டிருக்கிறோம்..

"குறையொன்றும் இல்லை..கண்ணா.."


_________________________________________________

ருத்ரா




யுகவிளிம்புகள்.

 யுகவிளிம்புகள்

________________________________________

ருத்ரா



அந்த அகலமான தார்சா.

அங்கு நிற்கும் சுண்ணாம்புக்காரையின்

தூண்கள்.

பற்கள் தேய்ந்தும் துருத்தியும்

தெரிவது போல்

செங்கற்சிதிலத்தோடு

அந்த தூண்கள்.

வாசல் முற்றம் ஏதோ ஒரு

சரித்திரத்தைச்சொல்லிக்கொண்டே

இருக்கும்.

அந்த மணவடை சதுரக்கல்லில்

எங்கள் அண்ணன்மார்களுக்கு

நடந்த திருமணத்தோரணங்கள்

அசைந்து அசைந்து

குருக்களின் மந்திரங்களையும்

சுருட்டி சுருட்டிச் சொல்லிக்காட்டும்.

அவர்கள் வாழ்க்கையில்

துவங்கிய வசந்தங்கள்

இன்னும் பூமயிர் மின்னல்கள்

அரும்பு மீசையாக பரிணாமம் ஆகாத‌

எங்களுக்கும்

அதாவது

எனக்கும் என் தம்பிக்கும் கூட‌

மத்தாப்பு வெளிச்சம் காட்டும்.

கல்யாண வீடு களை கட்டும்

அந்த பெட்ரோமேக்ஸ் ஒளிவெள்ளம்

ஏற்படுத்தும் நிழற்கோடுகளில் எல்லாம்

உற்சாக ஓவியங்கள் தான்.

காலம் எப்படி இப்படி ஒரு

அசுரன் ஆகிப்போனான்.

இன்று பேரன்மார்கள் பேத்திமார்களின்

திருமணங்கள்

அதே மகிழ்ச்சி கொப்புளிக்கும்

நிகழ்வுகளாக இருந்த போதும்

புன்னகைகளும்

சிரிப்புகளும் 

பேச்சுக்கொத்துகளின் 

பரிமாறல்களும்

ஆன் லைன் நிழற்படத்தொகுப்புகளில்

வாட்ஸ் அப் ஆல்பங்களில்

வேக வேகமாக பாயும் யுகவிளிம்புகளாய்

பாய்ச்சல் காட்டுகின்றன.


__________________________________________________




திங்கள், 29 ஆகஸ்ட், 2022

ஏ ஆர் ஆர்.

 AR Rahman pens emotional note as a street in Canada gets named after him: ‘The name AR Rahman is not mine, it means…’ (msn.com)




அது இசையா?

சன்னமாய் செவிகளுக்குள்

தேன்சிட்டுகள் 

ஊசிச்சிறகைக்கொண்டு

அதிர்வு எண்களில் 

ஆகாசமே இனிமையை

கொப்புளிக்கச்செய்த‌

அந்த 

"சின்ன சின்ன ஆசை..."

மறக்க முடியலையே.

எங்கோ தெரிகின்ற அந்த பச்சை வயல்..

தண்ணீரின் பளிங்கு உடலுக்குள்

துள்ளுகின்ற‌

மீன் துடிப்புகள்..

அந்த படகுத்துடுப்பு  நீண்டு ஒலித்து

நம் நெஞ்சுள் ஆழமாய் விழும் 

இசை நங்கூரம்...

வைர‌முத்து என்று சாதாவாய்

பெயர் வைத்துக்கொண்டு வந்தவரின்

வரிகள் ஒவ்வொன்றும் 

கிம்பர்லி சுரங்கம் ஆனதிலும் கூட‌

தமிழ் ரீங்கரித்தது

வைரச்சிறகுகளைத்தான்.

என்னடா உங்க ரஹ்மான்

என்று நாக்கில் பல்லைப்போட்டு

கேட்பவர்களுக்கு

காட்டி விட்டது "கனடா".

...

கானடா..

என் பாட்டு தேனடா..

இசைத்தெய்வம் நானடா..

அய்யோ

ஒரு சின்ன புல்லையும் 

அதிரவைத்து பேசத்தெரியாதவர் 

ரஹ்மான்.

இசையின் உயரங்களையெல்லாம்

தன் அடக்கம் எனும்

உயர் பண்பில் பூத்து

புன்முறுவல் காட்டுபவர்

ஏ ஆர் ஆர்.

வாழ்க அவர் இசை!

ஓங்குக அவர் புகழ்!


____________________________________________________

ருத்ரா

அரவிந்த் கெஜ்ரிவால்

 அரவிந்த் கெஜ்ரிவால்

____________________________________



டெல்லியின்

இந்த மியாவ் மியாவ் 

பூனையின் 

வரிகளை இன்று உற்றுப்பாருங்கள்.

அதன் நகங்களைக்

கவனியுங்கள்.

அந்த கோரைப்பற்களையும் தான்.

வெறுமே 

ஆட்டுக்குத்தாடி என்று

உவமை பேசிக்கொண்டிருந்தால்

அந்த ரோடு ரோலர்

உருட்டித்தள்ளி

நம்மை நசுக்கி விடாதா?

அது

துடைப்பமா?

தூரிகையா?

தீச்சுடர்களா?


_____________________________________________

ருத்ரா


ஒன்று தானே

 கடல் என்றாலும் 

இந்த பைரவர்கள் என்றாலும்

ஒன்று தானே.

அது

"ஓங்காரம்" மட்டும் தானே.

அவற்றின் நீள நாக்குகள்

மில்லியன் ஒளியாண்டுகள்

என்கிறார்களே.

_____________________________________

ருத்ரா



கொஞ்சம் பொறுங்கள்.

 கொஞ்சம் பொறுங்கள்.

சுண்டலும் பொரியும்

கொழுக்கட்டையும்

தின்று முடிக்கப்படட்டும்

அப்புறம் அவரை

கடலில் போடலாம்.

இந்து மகா சமுத்திரம் 

ஆகிவிடும் ஒருநாள்

ரசாயன மகா சமுத்திரம்.

__________________________________

ருத்ரா

நொய்டா ரெட்டைக் கோபுரம்.

 நொய்டா ரெட்டைக் கோபுரம்.

_________________________________


3500 கிலோ வெடிமருந்தும் 

ஒன்பது விநாடிகளும்

சேர்ந்து

வளைந்து கிடந்த நீதியை

நிமிர்த்தி வைத்த போது

புழுதிப் புகை மட்டுமே 

மிச்சம்.

சிறந்த நீதியின் 

மிகச்சிறந்த தீர்ப்பு இது.

இந்தப்புழுதியின் 

மூல மூலதனம் 

ஐநூறு கோடி என்கிறார்கள்.

ராமலீலா மைதானத்து

ராவணன் எரிந்து முடிந்தான்.

இந்த வருட தீபாவளியின் 

மிக மிகப் பெரிய வெடி இது.

இதே போல் 

சர்வாதிகாரம் நூறு மீட்டர் உயர‌

அசுரன் போல் நின்றால்

அதை இந்த‌

மரச்சுத்தியல்கள் தட்டி நொறுக்கி

தரைமட்டம் ஆக்கி

ஜனநாயகத்தை 

மனங்குளிரச்செய்திடுமா?

நம்பிக்கை இருக்கிறது.


_______________________________________

ருத்ரா