வியாழன், 31 டிசம்பர், 2020

சுகப்பிரசவம் தான் .....

 சுகப்பிரசவம் தான் 

டாக்டர் சொல்லிவிட்டார்

இன்னும் இரண்டு மணி நேரத்தில்.

சரி தான்.

ஆனால் சுகம் என்ற‌

அந்த சொல்லில்

கன்னிக்குடம் உடைந்த போதும்

எத்தனை கண்ணீர் வெள்ளங்கள்

அந்த கடிகார முள்ளில்

சொட்டிக்கொண்டு இருந்தன?

அதனிடையேயும்

எத்தனை மகிழ்ச்சி ரோஜாக்களின்

மகரந்தங்கள்

தூள் பரப்பி வந்தன?

நம்பிக்கை 

நம்மை வருடிக்கொடுக்கும்

மயில் பீலிகளாய் இருந்த போதும்

மறைந்து உறுத்தும்

முட்களும் பிரகாசம் காட்டுகின்றன!

ஆம்.

ஹேப்பி நியூ இயர் !

ஹேப்பி நியூ இயர் !!

ஹேப்பி நியூ இயர் !!!


அந்த தடுப்பூசிக்குழல்கள்

நம் இனிய பூபாளங்களின்

புல்லாங்குழல்களாய்

அதோ அந்த சன்னல்வழியாய்

ஒலிக்கப்போகின்றன.

சூரியன்கள் பின்னால் அணிவகுக்கும்

தினமும்

இனி

மகிழ்ச்சியின் ஒளிப்பிழம்பாய்.

கொரானாக்கள்

பொறாமையில் வெந்து சாகட்டும்.

ஓ!மனிதன் எனும்

இந்த மகத்தானவனின் பிம்பம்

தான் கடவுள் என்பதா?

....என்று

அந்த முள்ளு மண்டையன் 

தலையைப் பிய்த்துக்கொள்ளட்டும்!

"இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!"

_________________________________ருத்ரா

(இரவு மணி 10.01 ...31.12.2020)

மரச்சுத்தியல்கள்

 மரச்சுத்தியல்கள்

=================================================ருத்ரா


ஒரு மீள்பதிவு. 

(நீதி அரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்களுக்கு 

ஓர் அஞ்சலி)




ஒரு நூற்றாண்டு 

பயணம் செய்த களைப்பில்

கண் அயர்ந்த பெருந்தகையே!

அன்று ஒரு நாள் வீசிய‌

அரசியல் புயலில்

உன் நீதித்தராசுகள் ஆட்டம் கண்டபோது

ஒரு புதிய மைல் கல்

நட்டுச்சென்றாய்.

அரசியல் சட்டத்தை எல்லாம்

அந்த "இருபது அம்ச" வெள்ளம்

அடித்துக்கொண்டு போனதன்

மௌன சாட்சியாய் நீ இருந்தபோது

உனக்குள் ஒரு வேள்வி

கொளுந்து விட்டு எரிந்தது!

ஆம்!

மனித நேயமே பசையற்றுப்போய்

அச்சிடப்பட்டுவிட்டதோ

இந்த "ஷரத்துக்கள்" என்று!

இந்த நாட்டில்

நீதியரசராய் பிடித்திருக்கும் செங்கோலை

சூட்சுமமாய்

இன்னொரு கை 

திசை மாற்றும்

மாயத்திசை எங்கிருக்கிறது என‌

புருவம் உயர்த்தினாய்!

உன் தேடல் இன்னும்

அந்த தராசு முள்ளில்

வெட்டிவைத்த வேதாளம் போல்

தொங்கிக்கொண்டிருக்கிறது.

இந்த நாட்டில்

இதிகாசங்கள் மட்டும் அல்ல‌

நீதி தேவதையின் பக்கங்கள் கூட‌

லட்சக்கணக்கில் தான்.

அதற்குள்

விழுந்து கிடக்கும் ஊசியைத் தேடும்

இந்த பயணம் 

இன்னும் நீண்டுகொண்டு தான் இருக்கிறது.

கறுப்பாகி அழுக்காகிப்

போன பொருளாதாரத்தை

வாக்குச்சீட்டுகளாலேயே

வெளுக்க முடியாத போது

வெறும் அட்டை கனத்த‌

அரசியல் சாசனம் 

என்ன செய்து விடமுடியும்?

இருப்பினும்

இந்த அடர்ந்த காட்டின்

நம்பிக்கை கீற்றுகள்

நீதியின் கூரிய முள்ளில்

கோடி சூரியன்களாய்

கருப்பிடித்து வைத்திருக்கிறது.

துருப்பிடித்த வாதங்களை

தூக்கி எறியும் உத்வேகத்தை

நீ தந்திருக்கிறாய்.

ஓ!நீதியின் காவலனே!

நீதி என்றால்

அது பேனாவின் கீறல் அல்ல!

அது துளியாய் இருப்பினும்

தீப்பொறி தான்

என்று காட்டிய பேரொளி நீ.

சுதந்திரமும் ஜனநாயகமும்

காற்றைப்போல கண்ணுக்குத்தெரியாது.

அதன் அடையாளங்கள் எனும்

அரசு எந்திரங்களில்

ஏன் இந்த அசுரத்தனமான 

கட கடத்த ஒலி?

நீதி என்பது

ரத்தமும் சதையும் கேட்கும்

ஷைலக் அல்ல.

நீதிகளுக்குள்

அடியில் நசுங்கிக்கிடக்கும் 

மனித நீதியும் சமூக நீதியும்

காலத்தால் உறைந்துபோன‌

சம்ப்ரதாயங்களால் 

மிதி பட்டுக்கிடக்கின்றன.

நீதிக்கும் தேவைப்படுகிறது

வர்ணங்களைக் களைந்த ஒரு நிர்வாணம்.

மாண்புமிகு மேதையே

"மகாவீரராய்"

நீங்களும் அந்த தரிசனத்திற்கு

கொஞ்சம்

திரை விலக்கியிருக்கிறீர்கள்.

அந்த மரச்சுத்தியல்களில்

கனமாக கேட்கிறது

உங்கள் மனிதத்தின் ஓசை.


================================07/12/14




ஞாயிறு, 27 டிசம்பர், 2020

மான் உளைக் குடுமி

 மான் உளைக் குடுமி அன்ன‌

கான்செறி அடுக்க‌ம்‌ நெடுதரு வெற்ப‌

ஊண் செறி வட்டில் நெடுநாள் மறந்து

பூண்செறி உடம்பும் நெகிழ்தரக்கிடந்து

ஆம்பல் ஊதி விளையாட்டயரும்

அஞ்சிறார் குழாத்துடன் ஆடல் நனிமறந்து

பளிங்கின் நுண்சிறை நுவல்காழ்த் தும்பி

சிறைகொண்டு சிற்றில் கூட்டும் ஆயம் மறந்து

நின் நினைவின் கூர்வாள் கொடுவரி மின்னல்

தின்றல் செத்தென பாழ்வான் போன்ம்

முன்றில் முடங்கினள் மற்று என் மன்னே.

முந்துறு கதழ்பரிக் கலிமா ஓச்சி

மணித்தேர் விரைய ஒருப்பட்டு வருதி!


______________________________________________ருத்ரா\


பிரிவுற்ற தலைவியின் வாட்டம் போக்க‌

விரைந்து வ்ருவாய் என தோழி தலைவனை

நோக்கிப்பாடியதாய் நான் எழுதிய 

சங்கநடைச்செய்யுட் கவிதை இது.

__________________________________________ருத்ரா



வெள்ளி, 25 டிசம்பர், 2020

தொ.பரமசிவனார்

 தொ.பரமசிவனார்

________________________________ருத்ரா


தமிழ் ஆய்வாளர் என்று

இரண்டு சொல்லில்

இவரை அடக்கிவிடுவது

ஒரு கடைந்தெடுத்த பாமரத்தனம்.

தமிழ் ஏதோ ஒரு சிற்றெரும்பு

கால் கட்டை விரலால் நசுக்கி விடலாம்

என்று கோயில் வழியே ஒரு ஆதிக்கம்

தலை காட்டும் இந்த‌

கால கட்டத்தில்

கோயில்கள் வெறும் 

கற்களின் கூட்டம் அல்ல‌

அது நம் தமிழ் தொன்மையின்

எலும்புக்கூட்டு மிச்சங்கள்.

பக்தி ரசம் வழிதோடும் அந்த‌

காட்டாறு காட்டும் மரபுகளும் வழக்குகளும்

தமிழின் உயிர்த்துடிப்புகள் என்று

காட்டிய பெருந்தகை தொ.ப அவர்கள்.


கடவுள் மறுப்பு என்பதும் கூட‌

கடவுளுக்கு மிகவும் விருப்பமான 

ஒரு பூசனை தான்

என்ற அடிக்கருத்து தான்

இவரது ஆய்வு மரத்தின் அடிக்குருத்து.

மண்ணோடு இயைந்த தமிழர்களின்

வாழ்வு முறைகளில்

வர்ண முறைத் தூசிகளும் புழுதிகளும்

படிந்திருக்கவே இல்லை என்பதே

இவரது நுட்ப நோக்கு.

தமிழ் மொழி 

சடங்கு சம்பிரதாயங்களின்

நீரோட்டத்து அடிமடியில்

சிந்துவெளியையும் கீழடியையும் தான்

கூழாங்கற்களாய் கிடத்தியிருக்கிறது

என்று கண்டு உணர்ந்து

பல நூல்கள் படைத்து 

வெளிச்சம் காட்டியவர் தொ.ப அவர்கள்.


மார்க்சியம் பெரியாரியம் திராவிடம்

என்பதெல்லாம்

மேட்டிமை அறிவு ஜீவிகளால்

தீண்டப்படத்தகாதவையாக‌

கருதப்படும் சூழலில் 

தமிழின் அரிச்சுவடிகளும் அடிச்சுவடுகளும்

அந்த சமதர்ம ஏக்கத்தையும் கனவுகளையும்

ஏந்தியிருந்தாக கண்டுபிடித்தார்.

அவர் படைத்த நூல்களில்

தமிழியல் ஒரு சமுதாய மானிடவியலுக்கு

சாளரங்கள் திறந்து வைத்திருப்பதை

கண்டு புல்லரித்தார்.

"அறியப்படாத தமிழகம்"

"அழகர் கோயில்"

"பண்பாட்டு அசைவுகள்"

போன்று எத்தனையோ படைப்புகளில்

தமிழ் சிந்தும் ஒளியில்

தமிழ் சிந்து வெளியின்

இசிஜி வரிகளைக்காணலாம்.

தமிழின் இதயத்துடிப்புகளுடன்

தன் இதயத்துடிப்புகளையும்

இழைவித்துக்கொண்ட தமிழ் ஆய்வாளர்

நம் தொ.ப அவர்கள்.


அவர் மறைவு ஒரு பேரிழப்பு

என்று மாமூலாக இரங்கலை

தெரிவித்துக்கொள்வதில்

அர்த்தம் ஏதுமில்லை.

அகர முதல என்று ஒலிக்கும்

வள்ளுவம் உள்ளிட்டு

நம் பத்துப்பாட்டு எட்டுத்தொகைகளின்

எல்லா வரிகளும் இங்கே

உலா வரவேண்டும்.

தமிழ்ப்பகை நம்மீது 

ஆதிக்க விரல் நீட்டி

அழிக்கப்பார்க்கும் தந்திரங்கள் யாவும்

தவிடு பொடி ஆகவேண்டும்.

அந்த ஒரு எழுத்து மட்டும் 

"ஆயுத" எழுத்தல்ல!

தமிழ் என்று ஒலிக்கும்

நம் எழுத்து வெள்ளம் அத்தனையுமே

ஆயுத எழுத்துக்கள் தான்.

அவற்றில் நம்மிடம் எப்போதுமே

கூர்மையுடன் ஓர்மையுடன் 

ஒலித்துக்கொண்டிருப்பது தான்

"தொ.ப" எனும் நம்

உயிரெழுத்துக்கள்.

_____________________________________________ருத்ரா


















வியாழன், 24 டிசம்பர், 2020

"தொ.ப"

 "தொ.ப"

_________________ருத்ரா


இவர் யார்?

இந்தக்கேள்வி ஒரு பொறி.

நம் தமிழ்த் தொன்மையின் 

வெளிச்சத்திற்கு

தீக்குச்சி உரசியவர்.

நம் காலடியில் நம் அடையாளங்கள்

எலும்பு மிச்சங்களாய்

சிதறிக்கிடந்ததை

சித்திரம் ஆக்கி சிற்பம் ஆக்கி

நிமிர்த்தி வைத்தவர்.

அழகர் கோயில்..

அறியப்படாத தமிழகம்..

பண்பாட்டு அசைவுகள்..

என்று

இவர் இதயம் இன்னும்

நமக்காகத் துடித்துக்கொண்டு இருக்கிறது.

"எனக்கு கண்ணீர் வேண்டியதில்லை.

நம் தமிழுக்கு சாவு மணி அடிக்கும் முன்

தமிழ் எனும் செம்புயலாய்

சீறி எழுங்கள்"

என்று அவர் சொல்வது மட்டுமே

நம் காதில் விழுகிறது.


____________________________________




ஆயிரம் பிரகாசமாய்...

 ஆயிரம் பிரகாசமாய்...

_________________________________ருத்ரா.


அது என்ன?

காதலிக்கிறேன்

என்று 

சொல்லிவிட உனக்கு

ஆயிரம் யுகங்களா வேண்டும்?


மின்னல் பிரச‌விக்கும் முன்னமேயே

கன்னம் குழித்து சிரித்து

என்னைப்பார்த்தாயே

அதற்குப்பின்னருமா

இந்த வானங்களையெல்லாம் 

சுருட்டி கைக்குட்டையாக்கி நான்

வியர்த்து வியர்த்து வடியும் 

என் முகத்தைத்

துடைத்துக்கொண்டிருப்பது?


உன் இமையின் மெல்லிய 

தூரிகையில்

படபடத்து

கண்கள் வழியே காதலை

ஓவியமாக்கி விட்டாயே

அதன் பின்னருமா

நான்

கை வேறு கால் வேறாய்

முறுக்கி

முகம் திருகி முதுகில் நிற்க‌

ஒற்றைக்கண் கொண்டு

உருண்டையான என் விழிவெண்படலத்தை

ஆம்லெட் போட்டது போல்

ஒரு பிக்காஸோ ஓவியமாய்

அந்த அலங்காரச்சுவரில் 

ஒரு அலங்கோலமாய் நான்

தொங்கிக்கொண்டிருக்க வேண்டும்?


மீன் கொத்தி ஒன்று

தண்ணீரை படக்கென்று குத்தி

வைரச்சிதறல்களை

நீரில் தெறித்தது போல்

"க்ளுக்"என்று

ஒரு சிரிப்பால் 

என்னைக்குத்தி விட்டுப்போனாயே !

அது 

என் இதய ஆழத்துள்

இன்ப நங்கூரம் ஒன்றை

பாய்ச்சி விட்டதே

அதன் பின்னும் நான்

கோடி கோடி மைல்கள் கணக்கில்

நீளமாய் ஒரு தூண்டில் போட்டு

கடலே இல்லாத ஒரு

சூன்யவெளிக்கடலில்

மீன் பிடிப்பதாய் உன் காதலுக்கு

இந்த கரையில் 

நின்று கொண்டிருக்க வேண்டுமா?

அதுவும் 

இது விளிம்பற்ற ஒரு தொடுவானச்சிகரமாய்

என் கனவின் கூர் ஊசியில்

நின்று கொண்டிருக்கவேண்டுமா?

கண்ணே!

உன் சொல் என்று பூக்கும் என்று

இந்த மொட்டை வெளியின் 

மௌன மொழிக்குள்

நெளிந்து கொண்டிருக்கிறேன்.

இதோ இதோ ..என்று

அந்த நட்சத்திரங்கள் போல்

என் மூக்கின் மேல்

முட்டி மோதிக்கொண்டு

உன் ஒளியின் வாசனையை காட்டிக்கொண்டு

நிற்கிறாய்!

என் இருளுக்குள்ளும்

எப்போதும் உன் 

இனிப்பின் பூபாளம் தான்.

உன் விடியல் விரியும் வரை

இந்த அண்டத்தையே பூட்டிக்கொண்டு

வர்ண மண்டலங்களின் நினைப்புகளின்

ஒரு புழுக்கூட்டு ஊஞ்சலில்

ஆடிக்கொண்டிருப்பேன்.

உன் சொல்லின் சிறகு விரிக்கும்

காதலின் அந்த‌

பட்டாம்பூச்சி பட்டென்று வெளிப்படும்

தருணம் 

இந்த கொடுங்காலத்தின்

கன்னிக்குடம் உடைத்துப் பிறக்கும்

என்ற ஒரு மெல்லிய நம்பிக்கையில்

நான் இந்தக்கூட்டில்

அடைந்து கிடப்பேன் கண்ணே!

ஆம்.அடைந்துகிடப்பேன்.

வரும்போது வா!

என் ஆயிரம் பிரகாசமாய்!


_____________________________________


புதன், 23 டிசம்பர், 2020

கால் இடறு கடும்பரல் பாலை

 கால் இடறு கடும்பரல் பாலை

சுரம் கடாத்த அளிமென் தலைவன்

சிலம்பி வலைய சில்முள் மூசு

திரங்கு மரல் மலிந்த சூர்மலிக் கானிடை

நுழைந்துழி ஆங்கு தன்னெஞ்சத்து நுவலும்.

அலர்மழை தோய் அஞ்சிறை இறையவள்

என்னுள் புக்கு தன்னுள் பார்க்கும்

சுடுனெடு பானாள் கொல் உமிழ் கங்குல்

அவள் பூஞ்சேக்கை முளி பெயர்த்து

பாம்புரி செத்து பிணைதரக் காயும்.

பிரிவிடை அடையல் இறந்துபட்டொழியும்

அன்ன அவள் உறும் நிலை என்னையும் 

ஈண்டு துண்டுபடுத்து எடுக்கும் இக்கொடுவாள்

வேண்டேன் ஆயிழை தழூஉம் அவிர் நசை வாட்ட‌

விரையும் மன்னே அவள் ஊர் இன்றே.


______________________________________ருத்ரா


பொருள்வயின் பிரிந்து பாலை வழி ந‌டந்து வரும் 

தலைவன் பிரிவுத்துயரில் மீண்டும் தலைவியை

நோக்கி அவள் ஊர் திரும்பிவிடும் துடிப்பில்

விரைகிறான்.

இதுவே எனது இந்த சங்கநடைச்செய்யுட்கவிதையின்

கருப்பொருள்.

________________________________________________________