செவ்வாய், 12 மே, 2020

"எரிப்பூப் பழனம் நெரித்து..

"எரிப்பூப் பழனம் நெரித்து..

 -------------------------------------------------------------------ருத்ரா
(ஓலைத்துடிப்புகள்..26)


கடமா மிதிபட்டன்ன எரிப்பூப் பழனம் நெரித்து

அரியல் ஆற்றும் வலைஞர் கண்ணே போல்

என் இறை வளை இறுக்கி   திண்ணிதின் திண்ணிய

என் இஞ்சியும் தகர்த்தாய்  நின் மின்னகையால்.

அன்பே ஈண்டு எஃகின் இலை எனின்

அன்பே ஈண்டு வேல் படை வீழ்த்தும்.

முளியலை முன்னீர் திருக்கி ஆண்டு

செருக்கியஉன் வென்றியின்  மாலை யெல்லாம்

மலைகுவிய  மருள்வித்தாலும் நுடங்கு சிலை

அதிர்ந்தாங்கு என் இமைகவி மையுண் விழிகள்

விலங்கினுள் பூட்டிநிற்கும் படுமணி இரட்டும் தேர !

எம் முன்றில் படு புள்ளி நீழல்

கோடு நீட்டி கோடு அழிந்திடுமுன்

விரைகுவாய் சுழிப்பவரும் ஆறுகடவாய்.

_________________________________________________


தும்பி சொகினனார் எனும் "தும்பி சேர் கீரனார்
புறநானூற்றுப்பாடல் 249ல் "எரிப்பூப்பழனம் நெரித்து உடன் வலைஞர்"
என்ற ஒரு மிகச்சிறப்பான அழகு ததும்பும் வரியை எழுதியிருக்கிறார்.
நெல்வயல் நீரில் நெருங்கிப்பூத்திருக்கும் நெருப்பைப்போன்ற‌ சிவப்புப்பூக்களின் அந்த பரப்பை கால்களால் விலக்கி ஒடுக்கி அதில் மீன் பிடிக்க வலையைவீசி அரித்து மீன்களை பிடிப்பார்கள். அந்தக்காட்சியைத்தான் "எரிப்பூப்பழனம் நெரித்து" என்ற வரியில்
தும்பி சேர் கீரனார் ஒரு ஓவியம் போல் தீட்டியிருக்கிறார்.

தலைவனும் அந்த வலைஞன் போல் தலைவியின் கைகளை இறுகப்பற்றி ஒரு கோட்டையைப்போன்ற அவள் உறுதியை கலைக்கும் முறையில் தன் மின்னல் ஒளிரும் சிரிப்பால் அவளை மயக்கி காதல் கொள்கிறான்.
பதிலுக்கு அவளும் அவனிடம் கூறுகிறாள்:
வில் அதிர்வடைந்து அம்பு எய்து தாக்குவது போல் இமைகள் கவிந்த‌
தன் மையுண்ட விழியால் அவன் எத்துணை படைகளை வென்றுகொண்டு வந்து நின்றாலும் விலங்கு பூட்டி சிறைப்பிடிக்கும்.வா.விரைவாய் வளைந்து வளைந்து வரும் பாதைகள் கடந்து என் வீட்டு வாசல் நிழல் கோடுபோல் நீண்டு மறைந்துவிடும் முன் வா.விரைந்து வருக என்கிறாள்.

"எரிப்பூப்பழனம்" என்ற அந்த சொற்கள் தான் இந்த சங்க நடைச்செய்யுளை எழுதும்படி என்னைத்துண்டியது.

-------------------------------------------------------------------ருத்ரா 


சனி, 9 மே, 2020

அம்மா என்று அழைக்காத...

அம்மா என்று அழைக்காத...
______________________________________________ருத்ரா

அம்மா என்று அழைக்காத...
...உயிரில்லையே"
இளையராஜா 
அவர் அம்மாவை நினைத்திருப்பாரா?
எழுதிய கவிஞரின் பேனாவுக்குள்
அம்மாவின் ரத்தம்
முலைப்பாலாக ஊறி
அந்த காகிதத்தை நனைத்திருக்குமா?
இன்னும்
அந்த இசைக்கருவிகளின்
நரம்புகளும் 
தோல்களும்
துளைகளும்
அந்த அம்மா என்ற‌
பெருவெள்ளத்தை வழிய விட்டிருக்குமா?
ஆனால்
அம்மா...
இந்த கொரோனா பிரளயத்தில்
நீ தான்
எங்கள் "நோவாவின் கப்பல்"
எல்லா உயிர்களும்
தன் இனத்தை பெருக்கவும் காக்கவும்
துடிக்கின்றன.
அந்த வைரசும் 
அப்ப்டித் துடித்து தான்
பில்லியன்களின் எல்லையின்மையாய்
ஒரு இறைவத்தின்
விளிம்பை அடைகின்றதோ?
ஆம்.
அடித்தாலும் பிடித்தாலும்
கொன்றாலும் தின்றாலும்
அம்மா எனும்
குரல் மட்டும்
இங்கு அமுதப்பிரவாகம் தான்.
அம்மா..
அது குரல் மட்டும் அல்ல.
அது..
மரணங்களில் ஜனனம்.
ஜனனங்களில் மரணம்.

‍‍‍‍‍‍‍‍‍_______________________________________‍‍‍‍___



சைத்தான்கள்

சைத்தான்கள்
=======================================ருத்ரா

தினந்தோறும் ஊடகங்கள்
புள்ளிவிவரங்களை
அவித்து அவித்து
கொட்டிக்
கவிழ்த்துக்கொண்டிருக்கின்றன.
மரணத்தின் பசி தீரவில்லை.
ஏதோ ப்ரொட்டீன் என்வெலப்
புரட்டி புரட்டிப் போடுகிறது
இந்த உலகத்தை.
பழைய பழைய ஏற்பாடுகளும்
புதிய புதிய ஏற்பாடுகளும்
இன்னும்
கருடன் காக்காய் குருவி
புராணங்களும்
அந்த வில்லனின் முகத்தை
கார்ட்டூன் உருவங்களாய்
காட்டி விட்டுப்போய் விட்டன.
மனிதனே 
மனிதனை "கிருமி போஜனம்"
செய்யும் அதர்மங்கள்
அழிக்கப்பட 
அந்த பத்துக்கைகளிலும் 
பத்தாமல் பற்றிக்கொண்டிருக்கும்
ஆயுதங்களை வைத்துக்கொண்டு
கடவுள்கள் முழித்துக்கொண்டிருக்கின்றன.
மனிதன் படைத்த கடவுள்கள்
மனிதனோடு கூட்டணி சேர்ந்து விட்டனவோ?
மனித நேயம் காட்டு என்று
சிலுவை சுமந்த 
முட்கிரீடம் சுமந்த 
வரலாறு கவிழ்ந்து விட்டதுவோ?
இப்போது
முட்கிரீடம் சுமந்து வந்து
ஒரு சைத்தான்
தீண்டாமை போதிக்கிறது.
பழைய சைத்தான்களின் தீண்டாமையும் 
புதிய சைத்தான்களின் தீண்டாமையும்
ஒரு கோட்டில் வந்து நிற்கின்றன.
முக கவசத்தை நீக்கிப்பார்த்தாலும்
மனிதனின் முகம்
இன்னும் ஒரு முக மூடிதான்.
"எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்
இங்கு இல்லாமை 
இல்லாமை பெற‌ வேண்டும்"
மனிதன் நன்றாகத்தான் பாடுகின்றான்.
ஆம்.
சினிமாவுக்கு வாய் அசைக்க!

===============================================








பாண்டில் ஒப்ப பகன்றை மலர

பாண்டில் ஒப்ப பகன்றை மலர

------------------------------------------------ருத்ரா

(ஓலைத்துடிப்புகள் ..25)




பாண்டில் ஒப்ப பகன்றை மலர

விரி  பூ வான் பூ ஓர் சொல் உதிர்க்கும்.

அரவு அன்ன வீக்கொடி  படர

முன்றில் ஆடு மைச்சிறை காக்கை

கரையும் பொழுதில் என் நெஞ்சு கிழிய

உமணர் மறுத்த சாகாட்டுப்பகடு

தும்பி தொடர நோன்றல் உகள

நெடிய கிடந்தாங்கு நீள் விழி புதைய

பிரிந்தனை என்னை எற்றுக்கு மன்னே ?

---------------------------------------------------------

வெள்ளி, 8 மே, 2020

சங்கத்தமிழ் வேந்தருக்கு வாழ்த்துக்கள்



சங்கத்தமிழ் வேந்தருக்கு வாழ்த்துக்கள்

சங்கத்தமிழ்ச் சொற்கடல் நீந்தி
தமிழ்த்தொண்டு ஆற்றும்
முனைவர் திரு ப பாண்டியராஜா அவர்களின்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்

=============================================
ஏப்ரல் 29 2020


தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த அமுதுக்கு அமுதென்று
எப்போது பேர்?
உங்கள் செழிப்பான செறிவான‌
"சங்கத் தமிழ்ச்சோலை"
உலா வந்த போது 
உணர்கின்ற நம் செம்மொழியின்
ஒளி வந்த போது
தமிழுக்கும் அமுதென்று பேர்!

அன்பின் திரு பாண்டியராஜா அவர்களே
நீடூழி நீடூழி நீவிர் வாழ்க!

அன்புடன் ருத்ரா

ஒரு பொழிப்புரை

ஒரு பொழிப்புரை:‍‍

நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
==================================ருத்ரா
( ஓலைத்துடிப்புகள்..24)


பஃறுளியாறும் பன்மலை அடுக்கமும்
பக்கம் இருந்து மதிமலி புரிசை
வான் தோய் இமையம் இமையாது
விழிக்கும் விழுப்பம் புகழ்சேர் வெற்பன்
அற்பம் செப்பும் முரல் பரல் முகடன்
ஆயினன் கொல்லோ.அணி இழாய்
நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
வாலிழைக் கிளர்வால் அறுபடும்
வன்முறை ஊழின் ஆற்றுப்படுமோ?
செம்பின் அம்பொன் குறுமாந்தளிரின்
மின்னல் பெய்தரு ஒளிபூசி யானும்
பசலை நோற்று பாழ்படு கூவல்
கிடந்தேன் மன்னே.யாண்டுகள் நீளுமோ
மலர்தலை உலகம் கவிழுமோ
அவன் தோற்று குணகம் ஓர்நாள்
எல்லே பரப்பும் என் உயிர் தளிர்தரூஉம்.

============================================
பொழிப்புரை
=======================================ருத்ரா

பஃறுளியாறும் அதைச்சார்ந்த பல மலைத்தொடர்களும் அருகருகே இருந்து அணிசெய்ய அவற்றின் சிகரங்களில் நிலவு வந்து தொட்டு நின்று இன்னும் அழகு கூட்ட‌ வான் முட்டி நிற்கும் அந்த இமைய மலை கூட இந்த 
மலை வளம் கண்டு வியந்து இமைக்க மறந்து விழித்து நிற்கும்.அத்தகைய செழிப்பு மிக்க புகழ் வாய்த்தவன் அந்த மலை நாடன்.
தலைவி அந்த தலைவனிடம் மயங்கி விட்டாள். அவனோ அவளுடைய
காதலை  உணர்ந்தானில்லை. வெறும் மலை மேட்டை சொந்தம் கொள்ளும் அற்பன் ஆகி விட்டான்.அழகிய அணிகலன் அணிந்திருக்கும் என் தோழியே! அவன் எப்படி
என்னை மறந்து போனான்? சொல்!
நரந்தை எனும் மணம் மிக்க புல்லை மேயும்
கவரிமான் திடீரென்று தன் ஒளிபொருந்திய 
வால் துடித்து துடித்து அறுபட்டு விழும்படி 
ஒரு பேரிடர்மிக்க நிகழ்வுக்கு உட்பட்டு விட்டால்
அது எப்படி துயர் உறும்? அது போல் நான்
அவன் தொடர்பே அற்று விட்டவள் போல்
ஆகிப்போனேனே! செம்மை செறிந்த
செம்பு போலும் அழகிய பொன் போலும்
நான் நிறம் மாறி பசலையுற்று அந்த சிறிய‌
மாந்தளிர் போல் சுடர் வீசி மின்னல் பாய்ந்ததென‌
தளர்வுற்று பாழ் பட்டுக்கிடக்கும் கிணற்றில் 
வீழ்ந்தவளாய் நொந்து கிடக்கின்றேன்.
இப்படி எத்தனை நீண்ட காலம்  நான் கிடப்பது?
இந்த உலகமே என் மீது கவிழ்ந்து விடுமோ?
தெரிய வில்லையே! திடுமென்று ஒரு நாள் அவன் தோற்றம்
கிழக்கில் ஒளி பரப்பி களிப்பூட்டும் சூரியனாய்!
தோழி அப்போதே என் உயிரும் துளிர்த்து விடும்!

========================================

குறிப்புரை.
===========

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 

ஆய் அண்டிரனை புறநானூற்றுப்பாடல் 132ல் 

வட புல மன்னர்களுக்கும் ஒப்பாக பாடியிருக்கிறார்.

அப்பாடலில்  "நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி"

என்னும் வரி மிகவும் எழில் நுட்பம் செறிந்த தாகும்.



வடதிசை இமயம் மிகவும் உயர்ந்து தென் திசை தாழ்ந்து 

நெடிய இந்நிலம் பிறழ்வது எனும் பேரிடர் நிகழாது 

தடுத்தவன் ஆய் அண்டிரன் என்னும் 

தமிழ் மன்னனே என்கிறார் புலவர்.அப்படியெனில்
 
இவன் கொடையில்  படையில் எல்லாம் 

சிறந்தவனாக வடபுலத்தையே 

நம் மண்ணுக்கு சமப்படுத்தியவன் அல்லவா
 
என்று  வியக்கிறார்.

நில இயல் அடிப்படையில் தென் மண்டலம் கடலில் மூழ்கி 

வடபுலம் உயர்ந்திருக்க வேண்டும்.ஆம் அப்படி ஒரு பிற‌ழ்மம் 

(பிரளயம்) ஏற்படாதவாறு தடுத்தது ஆய் அண்டிரன் என்று 

உயர்வு நாவிற்சியாகப்பாடுகிறார் .

"முன்னுள்ளுவோனைப்  பின்னுள்ளினேனே " என்று 

இவன் புகழை இது வரை யான் அறியாது பாழ்பட்டேன் 

எனும் நெஞ்சம் நைகிறார்.கடல் கோள் ஏற்படுத்தும் 

ஊழிப்பேரலைகள் தலை காட்டி தலை காட்டி 

சென்றிருக்கும் பின்னணியில் அதை உட்குறிப்பாக்கி 

அப்பாடலை எழுதியிருப்பார் என எண்ணுகிறேன்.


நான் அவர் பாடலில் உள்ள
 
"நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி"எனும் 

வரியில் உள்ள இனிய காட்சியை தலைவி தலைவன் 

இடையே உள்ள காதலில் பதியம் இட்டு

இச்செய்யுட் கவிதையை எழுதியுள்ளேன்.

தலைவி தலைவனைப்பிரிந்து ஒரு கணம் கூட 

வாழ இயலாத நிலையை விவரிப்பது இப்பாடல்.

நரந்தை எனும் நறுமணம் மிக்க புல்லை மேயும்
 
கவரிமானைப்பற்றி அவர் பாடியிருக்கிறார்.
 
அந்த வரியை அசைபோட்டு அசைபோட்டு 

நான் இந்தப் பாடலை எழுதியுள்ளேன்.

=======================================ருத்ரா







வியாழன், 7 மே, 2020

ருத்ராவின் குறுநானூறு (முதலாம் பத்து...பொழிப்புரை)

ருத்ராவின் குறுநானூறு (முதலாம்பத்து...பொழிப்புரை)

=============================================



குறு நானூறு (1)
===============================ருத்ரா


பனை படு கிழங்கு உரி பிளந்தன்ன‌

கனை கொடு வெய்நோய்

கலிங்கம் எரிக்கும். கழை அடுக்கத்து

மழை உரி உடுத்த மணி அறை வெற்ப!

மஞ்சு துகில் போலும் தழீஇயத் தருதி.

என் ஆவி ஓம்ப விரைதி மன்னே.



=====================================


குறுநானூறு (2)

==================================ருத்ரா


தன் பார்ப்பு தின்னும்

கொடுமுதலை வாய்ப்பட்டன்ன‌

நெடுநாடன் வாய்ச்சொல்

யானே பட்டழிந்தேன்

ஞாழல கரைய அலைகூர

அலையிடை காண் அளியனோ.

____________________________________


குறுநானூறு (3)

=====================================ருத்ரா


கயம் துகள் மூசும் அலர் பெய்

பேழ்வாய்க் கடுவளி சுரம் நுழைபடுத்து

குச்சிக்கை நீட்டி அஞ்சிறு பைம்புள்

அணைக்கத் தாவும் காட்சிகள் மலிய‌

தமியனாய் எல்வளை நோக்கி

வறள் பேயாறு வருந்தி மிசை கடவும்.


==========================================


குறுநானூறு (4)

=====================================ருத்ரா


யாஅ  மரத்தன்ன இலைதொறும்

கதிரொளி பூசி மின்னிய வானம்

மருட்கும் நின் அம்பசலை கண்டுழி

தான்  உள் உள் வெட்கும் குறுகும்.

குடுமி மலையன் செவி போழ்ந்திடு

காலம் காட்டும் முன் விரைந்து.


========================================




பொழிப்புரைகள்
------------------------------------------------------------------------------------



குறு நானூறு (1)

===============================ருத்ரா


(தலைவி பிரிவுத்துயரில் தலைவனை நினைத்து வாடுவதை குறிக்கிறது இப்பாடல்)

பனங்கிழங்கு உண்ணப்படும்போது அதன் தோல் உரிக்கப்படுகிறது. அது போல் நான் காதல் கொள்ளும்போது அந்த வெம்மை உணர்ச்சி என் தோலை உரித்து விடுவது போல் உணர்கிறேன்.என் உடலில் உள்ள ஆடைகூட எரிந்து போய் விடுவது போல் இருக்கிறது.மூங்கில் காடுகள் செறிந்த மழை மேகங்களால் போர்த்தப்பட்ட மணி போல் சுடர் தெறிக்கின்ற மலைவளம் கொண்ட தலைவ! மலையை மேகம் ஆடை போல்  எப்படித்தழுவி இருக்கிறதோ அப்படி என்னைத்தழுவி என் உயிர் பிரியாமல்
என்னை விரைந்து வந்து காப்பாற்று.

குறுநானூறு (2)

==================================ருத்ரா

முதலை தன் குஞ்சுகளை தானே தின்றுவிடும் கொடுங்குணத்தை உடையது.
என் தலைவனும் அப்படித்தான் போலும். அப்படி முதலை வாய்ப்பட்ட அதன் குஞ்சுகளைப்போன்று அவனது  காதல் நிறைந்த சொற்களை அவனே விழுங்கிவிட்டது போல் என்னைப் பிரிவுத்துயரில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டான். அந்த வேதனையில் நான் நைந்து போய் விட்டேன்.
ஞாழல் பூத்த கடற்கரையில் அலைகள் மிகுதியாய் வந்து வந்து அவற்றை
அலைக்கழிப்பது போல் நானும் அல்லல் உறுகின்றேன்.என்னைக்கண்டு
யாவரும் இரக்கம் கொள்கிறார்கள்.

(தலைவியின் பிரிவுத்துயரம் மிக்க கூற்று இது.)


குறுநானூறு (3)

=====================================ருத்ரா


தலவன் பொருள் தேடி பாலை நிலத்து வறண்ட காடுகளிடையே புறபட்டுவிட்டான்.வழியில் உள்ள சுனைகள் எல்லாம் பாழ்பட்டு தூசிபடிந்து கிடக்கின்றன.அத்தூசு அலர் எனும் சிறு பூக்கள் போல அங்கே அடிக்கும் பேய்க்காற்றின் பிளந்த வாய் பட்டு அந்த காட்டுவழியில் படர்கின்றது. தலைவியின் மீது அலர் தூற்றி (பழி பரப்புதல் போல்) அத்தூசுகள் சிறு சிறு மலர்களைப்போல் அந்த காட்டை நிரப்புகிறது.தலைவனோ ஏதும் அறியாதவனாக தன்னந்தனியனாய் அக்காட்டில் நடக்கின்றான்.வழியில் மரங்கள் தம் குச்சிக்கிளைகளை கை போல நீட்டி அழகிய சிறு பசும்பறவைகளை அணைக்கத்துடிக்கின்றன.இந்தக்காட்சிகள் நிறைந்த வழியில் தலவனும் அது போல் ஒளிபொருந்திய வளை அணிந்த தன் தலைவியின் கையைப்பிடிக்கும் நினைப்பில் அந்த அச்சம் நிறைந்த வறண்டு போன காட்டுவழியைக் கடந்து சென்று கொண்டிருக்கிறான்.

(பொருள்வயின் பிரிந்த தலைவன் காட்டுவழியில் தலைவியை எண்ணிக்கலங்கிய நிலை இது)


==========================================



குறுநானூறு (4)

=====================================ருத்ரா


யா மரம் என்றொரு காட்டுமரத்தின் இலைகளில் சூரியனின் சுடர் ஒளி பூசி மின்னுவது சூழ்நிலையில் மின்னல் பரவியதைப்போன்ற ஒரு மருள் நிறைந்த காட்சி தெரிகிறது.தலைவியே  உனக்கு அவனால் ஏற்பட்ட பசலை எனும் அழகிய காதல் நோய் உன்னிடம் படர்ந்து நிற்பது போன்ற நிலையைக் காட்டுகிறது.அதனால் அவன் தனக்குள் உணர்ச்சி பெருக்குற்று நிற்கிறான். இதுவே சமயம்.உச்சி திரண்ட மலைகளின் வளம் மிக்க உன் தலைவனின் செவிகளில் மறைவாகப்போய் உன் காதல் நோய் பற்றிக்கூறு.அது அலர் எனும் பழியாக மாறும் முன் காலம் தாழ்த்தாது இப்போதே சொல்லிவிடு.

(பொருள் வயின் பிரிந்த தலைவன் ஒரு காட்டு மரம் காட்டும் காட்சியில் ஆழ்ந்து தன் தலைவியின் காதல் பற்றி எண்ணி உணர்ச்சிப்பெருக்கு அடையும் போது அவன் செவிகளில் உன் காதலைப்பற்றி ஓதிவிடு என்று
தலைவி தன் நெஞ்சோடு கூறுவது போன்ற காட்சி இது)




மற்றப்பாடல்களின் பொழிப்புரை விரைவில் தொடரும்.





========================================