வியாழன், 4 ஏப்ரல், 2019

கமலின் "சதி" லீலாவதி

கமலின் "சதி" லீலாவதி
=========================================ருத்ரா

கமல் திரையைவிட்டு வெளியேறி
நாட்டின் தலைவர்களையெல்லாம்
சந்தித்தார்.
அப்போதே தன் நடிப்பையெல்லாம்
உதறிவிட்டு
சமூத யதார்த்தங்களையும்
அரசியல் சித்தாந்தத்தின்
அகப்புற சித்திரங்களையும்
நன்கு உள்வாங்கிய
ஒரு அறிவு ஜீவி என்றார்.
கருப்பு சட்டையெல்லாம் போட்டுக்கொண்டு
திராவிடம் என்பது
தமிழனின் சிந்துவெளியிலிருந்து
காற்சுவடுகளை பதிக்கிறது
என்றெல்லாம்
சொற்களை செதுக்கி செதுக்கிப்
பேசினார்.
ஆனால்
இப்போது அவர் மேடையில்
பேசுவதைப்பார்க்கும் போது
ஜிகினாவும் அரிதாரமும்
அப்படியே இருக்கிறது
என்று தான் நினைக்கத்தோன்றுகிறது.
சட்டமன்றமும்
நாடாளுமன்றமும்
ஏதோ தியேட்டர்கள் போலவும்
அதில் தன் சினிமாப்படத்தை
வியாபாரம் பண்ணியே ஆகவேண்டும்
என்றும்
ஏரியாக்கள் எல்லாம்
விற்றுத்தீர்த்துவிட வேண்டும்
என்றும்
பரபரப்புகளையும் பதற்றங்களையும்
அள்ளி அள்ளி வீசுகிறார்.
"தோழர்கள்" அவர் பக்கம் இல்லையெனத்
தெரிந்ததும்
ஹிட்லரின் கோயபல்கதைகளை
தன் ஜோல்னாப்பையிலிருந்து
எடுத்து வீசுகிறார்.
தோழர் லீலாவதியின் கொலைவழக்கு
பற்றி எல்லாத்தோழர்களும் அறிவார்கள்.
அவர்கள் சித்தாந்தம்
அந்த ரத்தச்சுவடுகளுக்கு காரணமான‌
உட்சுவடுகளை அழிப்பதை மட்டுமே
குறிவைக்கிறது.
சுரண்டல் வாதமும் மத வெறி வாதமும்
பின்னிப்பிணைந்திருக்கும்
இந்த சமுதாயச்சிதைவுகளை
அழிக்கும் போராட்டத்தில்
அவர்களது தியாகம் யாராலும்
கொச்சைப்படுத்தப்பட முடியாதது.
அவர்களிடம்
தோழர் லீலாவதிக்காக வடிக்கும்
கமலின் நீலிக்கண்ணீர்
எப்படிப்பட்டது என்று எல்லோரும்
அறிவார்கள்.
தன் இதயநாயகன் "காந்தியடிகள்"
என்று
அந்த உலக நாயகன் ஒருமுறை
பிரகடனப்படுத்தியிருந்தாரே.
ராம் என்ற திரைப்படத்திலும்
அந்த காந்தித்தாத்தா மேக்கப்பில் வந்து
அசத்தினாரே!
அவர் இன்று அந்த‌
"கோட்சே"க்காரர்களின் கூட்டணிக்கட்சிக்கு
மறைமுகமாய் ஓட்டு சேகரிக்கும்
ஒரு நாடகத்தை அல்லவா
அரங்கேற்றிக்கொண்டிருக்கிறார்.
இப்போது நடைபெறுவதும்
அவருக்கே உரித்தான‌
"சதி"லீலாவதி" நாடகம் தான்.
மதுரையில் "தோழர்"களின் ஓட்டுக்களை
பிடுங்கி அந்த கோட்ஸே கும்பல் கூட்டணிக்கு
கொடுத்துவிடலாம் என்று
அவர் நினைக்க
தோழர்கள் ஒன்றும்
அவர்  "பிக் பாஸ்" சீடர்கள் அல்ல.
மதுரை மக்கள் அவர்  நினைப்பது போல்
ஆட்டுத்தோலில் அழகர் மீது
தண்ணீர் பீய்ச்சி அடித்து
திருவிழா கொண்டாடுபவர்கள் மட்டும் அல்ல.
அவர்கள் சீற்றத்தை
எங்கே பீய்ச்சி அடிக்கவேண்டும்
என்று "ஓட்டுகளில்"
காண்பிக்கவும் தெரிந்தவர்கள் தான்.

====================================================




உலகநாயகனா? உள்ளூர் நாயகனா? கமல்?

உலகநாயகனா? உள்ளூர் நாயகனா? கமல்?
==========================================================ருத்ரா

தேர்தல் பரப்புரையில்
தீவிரமாக இறங்கிவிட்டார்
கமல் அவர்கள்.
ஒரு மய்யம் நோக்கி
வில் வளைக்க ஆரம்பித்து விட்டார்.
ஆனால் அவர் அம்பின் குறி தான்
மய்யம் இழந்து நிற்கிறது.
எந்த மய்யத்தை வீழ்த்தவேண்டுமோ
அதை சுற்றி வளைத்துக்கொண்டு
உள்ளூர் தமிழனையும்
திராவிடனையும்
வதம் செய்யக்கிளம்பி விட்டார்.
எம்.ஜி.ஆர் கூட்டத்தை
நெருப்பு செருப்பு என்று
எதுகை மோனையோடு பேசி
திராவிடநீதி காக்கும் தமிழன் மீது
திராவகம் கொப்பளிக்கிறார்.
அவர் சாட்டையை சுழற்றி
"நான் ஆணையிட்டால்" பாணியில்
நடைபோட நினைக்கிறார்.
திராவிட விதை ஊன்றக்காரணமாய்
இருந்த எம்ஜிஆர்
அதே திராவிடத்தின் வேரறுக்கும்
அரசியலுக்கும் காரணமாய் இருந்த
மர்ம முடிச்சு அந்த "மர்மயோகிக்கு"த்தான்
தெரியும்.
மக்கள் செல்வாக்கு எனும்
குடை நிழலில்
அவரது தொப்பியும் கண்ணாடியுமே
தெய்வங்கள் ஆகிப்போயின.
கமலுக்கும் எம்.ஜி.ஆர் ஆகும்
ஆசை வந்ததில் தவறில்லை.
அதற்கு "அந்த செருப்பு"வேண்டுமா?

காங்கிரஸ் ரத்தம் என்றார்களே.
மதவெறியை சாதுவாய்
மடித்து வைத்துக்கொண்டு
வாக்குறுதிகள் அளக்கும்
சனாதனிகள் பக்கம் ஓட்டுக்கள்
விழுந்தாலும் கவலையில்லை
என்று அவர்களின்
பி டீம் முத்திரையை
தன்மேல் குத்திக்கொள்ளத் தான்
இவ்வளவு ஆவேசமா?
தசாவதாரத்தில்
அமெரிக்கர்  புஷ்ஷின் வேடத்திலும்
தலை நீட்டியவர் ஆயிற்றே.
தசாவதாரம் தாண்டிய பதினொன்றாவது
அவதாரத்துக்கு
மோடிஜியின் மேக் அப்புக்குள்ளும்
வலம் வர அவர் துடிக்கும் துடிப்பு தான்
இந்த பரப்புரைப்பேச்சுக்களில்
ஒரு பதற்றத்தைக்காட்டுகிறதோ ?
அரசியலுக்குள் அரசியலாக
அவருக்கு நெருங்கிய சிலரை
வைத்து ஒரு இப்படி
"பிக் பாஸ்" ஷோ நடத்துவது
வெறும் சின்னத்திரை விளையாட்டு.

திராவிடம் வரலாறுகளின் காட்டாறு.
அதைக்கொச்சைப்படுத்தும்
குள்ளநரி விளையாட்டு
அவர் அரசியலுக்கே
குழி வெட்டிக்கொள்வதற்கு சமம்.

=====================================================





புதன், 3 ஏப்ரல், 2019

நெல்லிக்காய் மூட்டையல்ல நாங்கள்





நெல்லிக்காய் மூட்டையல்ல நாங்கள்
======================================================ருத்ரா

அவிழ்த்து விட்டால் போதும்
இவர்களுக்கு.
வரிசையில் நிற்கும் வியாதியும்
தூங்கிக்கொண்டே நடக்கும் வியாதியும்
அப்படியே தூங்கிக்கொண்டே
கணிப்பொறியில் பட்டன் தட்டும் வியாதியும்
இருக்கிறது
என்று தானே
இத்தனை காலமாக‌
நீங்கள் நாற்காலிகளைப்பிடித்துக்கொண்டு
இவர்களை
இந்த தூசிகளில் புரளவிட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.

இவர்கள் விழித்துக்கொண்டார்கள்.
அக்ரிக் எமல்ஷன் பெயிண்டில்
இந்த மண்ணாங்கட்டிகளுக்கு
நான்கு வர்ணம் பூசி
நாடகம் நடத்தும் உங்கள்
சாதி மத தந்திரங்கள்
ஒரு முடிவுக்கு வந்துவிடும் நாள்
இந்த ஓட்டுத்திருவிழா தான்.

இதோ அந்த குரல்களின் வெள்ளம்
கரை புரண்டு ஓடுகிறது.

"எங்களை
இலவசங்களால் எப்படிக்குளிப்பாட்டினாலும்
எங்கள் ஓட்டு ஒவ்வொன்றும்
எங்களுக்குள் ஒட்டிக்கிடக்கும்
மன அழுக்குகளை
கழுவி விடப்போகும் நாள்
இதோ வந்து விட்டது.

சுதந்திரம் ஜனநாயகம்
என்பவற்றின் கனபரிமாணங்கள் எல்லாம்
இந்த கரன்சிகள் தான் என்று
போக்கு காட்டும் உங்கள்
சூழ்ச்சிகள் எல்லாம்
தவிடு பொடியாகி
ஒரு புதிய பாடம் உங்களுக்கு
புகட்டப்போகும் நாள் இதோ
வெகு அருகில்.

உணவு கேட்டால்
கடவுளைக்காட்டுகிறீர்கள்.
வேலை இல்லையே என்றால்
பக்கடாப்பொட்டலங்கள் போடுங்கள்
என்கிறீர்கள்.
வங்கிகள் எனும் நிதியின் வாய்க்கால்கள்
சில தனியார் அமைப்புகளின்
நீச்சல் குளங்கள் ஆகிப்போனதால்
மக்களின் தாகம் தீரவில்லை.
பணமூட்டைகளே மேலும் மேலும்
கோட்டைகள் கட்ட அனுமதிக்கும்
உங்கள் பொருளாதார புத்தகங்களையெல்லாம்
இனி எங்கள்
போகிப்பண்டிகையின் தீ நாக்குகளுக்கு
இரையாகக்கொடுப்போம்.
அதைத் தான்
எங்கள் ஓட்டுகள் இனி
உங்களுக்கு எழுதிக்காட்டப்போகின்றன.

தை மாதமா?
சித்திரை மாதமா?
எந்த மாதத்தில்
எங்கள் தமிழ்ப்புத்தாண்டு
என்ற கேள்வி வலைகளில் சிக்குண்டு
இனி மயங்கபோவதில்லை
ஒரு நாளும்.
தமிழின் விடியல்
எங்கள் மொழியில் பூக்கும்.
தமிழ் மொழியே
எங்கள் பார்வைக்கு இனி பாதைகள் போடும்.
"எட்டுத்தொகை"த் தமிழர்கள் நாங்கள்.
"துட்டுத்தொகை" அடிக்கும் உங்கள்
எட்டுவழிச்சாலை என்பது
பயங்கரமாய்
பசுமைக்கிராமங்களையெல்லாம்
விழுங்கிக்கொண்டு ஓடுகின்ற
அசுரத்தனமான மலைப்பாம்பு அல்லவா?
நாட்டின் வறுமையை தீர்க்கும் இது
என்று
லாபம் சுரக்கும் கம்பெனிகளுக்கு
"சாலப்பரிந்து பாலூட்டும்"
உங்கள் "பரம பத " விளையாட்டைப்
புரிந்து கொண்டோம்.
அவர்களுக்கு எப்போதுமே ஏணிகள்.
எங்களுக்கு எப்போதுமே
அந்த நச்சுப்பாம்புகள் தான்.
தந்திரமாய் "சோழிகள்" குலுக்கும்
உங்கள் சகுனிகளின் வேடங்களை
கலைக்கப்போகும்
ஓட்டு இது!"


ஒதுங்கி ஓடுங்கள் வேடதாரிகளே!
இதுவும் கூட ஒருவகையில்
உங்களால்
பெயரிடப்பட முடியாத புயல்.
விவசாயிகள் எனும்
மண்புழுக்கள்
சீற்றம் கொள்ளும் "டிராகன்களாய் "
பரிணாமம் அடைந்துவிட்ட
ஒரு வரலாற்றின் புயல்.
இதோ
எங்கள் ஓட்டுகளே
அது கருக்கொள்ளும் இடம்!

==================================================







ஊசிக்குருவிகள்



ஊசிக்குருவிகள்

==================================ருத்ரா இ.பரமசிவன்



செம்பரத்தம் பூக்கள்

இலைகொத்துகளிடையே

உதடுகளாய்..

சிரிப்பை இறைக்கின்றன.

மௌனத்தை பேசி சிலிர்க்கின்றன.

நெருப்பைக்கொட்டும் சூரியனோடு

மல்லுக்கு நின்று

ரத்தம் வழிய விடுகின்றன.

செடியின் சொற்ப நிழலில்

அமர்ந்தேன்.

அண்ணாந்து பார்த்ததில்

வான நீலம் ஊடுருவி

மனத்துள் இற‌ங்கி சலவை செய்தது.

பட்டாம்பூச்சி ஒன்று

சிறகுகள் ஒட்டி வெகு நேரமாய்

ஒரு பூ அடுக்கில்

மான் தோல் விரித்து

குண்டலினி ஊசியை

தனக்குள் செருகிக்கொண்டு

கழுவில் ஏறிய சித்தன் போல்

தவம் செய்தது.

பட படப்பு இல்லை!

சிறகுத்துடிப்பு இல்லை!

அதன் வெளி வர்ணங்கள்

சிரிக்காமல் சிரிக்கும்

"மோனாலிசா"வாய்

கன்னம் குழியாமல் குழித்து

இமை சிமிட்டியது.

பிக்காசோ பிய்த்துப்போட்ட‌

கோடுகளில் வட்டங்களில் கூட‌

பிரபஞ்சங்களின் சாந்தி முகூர்த்தம்.

வடிகட்டிய பிறகு பார்த்தபோது

"நான்" காணவில்லை.

ரமணர்

எங்கு வேண்டுமானாலும்

படுத்து இருப்பார் போலிருக்கிறது.

அந்த இலைக்காட்டில்

பூவுக்குள் கோவணம் தரித்துக்கொண்டு...

மனம் பாதாளக்கரண்டியாய்

சமுத்திரங்களையெல்லாம்

அள்ளி எறிகிறது.

மண்வெட்டியால்

கீழ் நோக்கி வெட்டினேன்.

"ஃப்ராய்டிஸ" பிறாண்டல்களால்

மண்ணில் வண்ண வண்ணமாய்க் கீறல்கள்.

அது எப்படி மேலே

வானவில்லில் கூரை ஆனது?

செம்பரத்தம்பூக்கள் அசைகின்றன!

ஊசிக்குருவிகள்

அந்த மகரந்தத்தூள்களில்

தூளி கட்டிக்கொள்ள‌

துடிக்கின்றன.

செம்பரத்தம்பூக்கள் அசைகின்றன!




=====================================================


செவ்வாய், 2 ஏப்ரல், 2019

ஆகா! அருமையான தீவு.


ஆகா! அருமையான தீவு.
===============================================ருத்ரா


ஆகா! அருமையான தீவு.
உல்லாசத்திற்கு குறைவு இல்லை.
எங்கு பார்த்தாலும்
குத்தாட்டம் குதியாட்டங்கள் தான்.
வண்ண வண்ணக் கொடியேந்தல்கள்.
கொள்கை விளக்கங்கள்.
நமக்கு எவ்வளவு மரியாதை?
நம் காலில் விழாத குறையாய்
வணக்கங்கள் வணக்கங்கள்.
டிவி ஊடகங்கள்
செய்திகளைக்கூட‌
திகிலூட்டும் சினிமாக்கள் ஆக்கின.
நாலைந்து பேராய் உட்கார்ந்து கொண்டு
நார் நாராய் கிழித்தனர்
நம் அரசியல் கந்தல் கூளங்களை.
கட்டு கட்டாய் பணங்கள்
நமக்குத்தான்
சமையல் ஆகிக்கொண்டிருக்கின்றன.
இந்த திருவிழாவில்
பொய்க்கால் குதிரை ஆட்டங்கள்
மயிலாட்டங்கள் ஒயிலாட்டங்கள்
புலியாட்டங்கள்..
பார்க்க பார்க்க தெவிட்டாத காட்சிகள்..
என்ன இது?

பூமி நகர்கிறது மண் நடுங்குகிறது.
அலங்கார அமைப்புகள் எல்லாம்
சரிகின்றன..
ஆம்..அது தீவு இல்லை.
ஒரு திமிங்கிலத்தின் முதுகு.
கருப்புப்பணத்திட்டு  அது.
அந்த தேர் திருவிழாக்கள் எல்லாம்
அதில் தான்
தாரை தப்பட்டைகள் முழக்குகின்றன.

ஓட்டுகள்
பொறிகளில்
தட்டப்படும் நேரம் வந்துவிட்டது.

கனவுத்தீவு அதோ மூழ்கிக்கொண்டிருக்கிறது.
திமிங்கிலம் மூழ்கிக்களித்து
விளையாடுகிறது.


=====================================================

இங்கு யாருக்கும் வெட்கமில்லை.


இங்கு யாருக்கும் வெட்கமில்லை.
=======================================================ருத்ரா

என்ன இது?
தெரியவில்லை.
இடியாப்ப சிக்கலின்
ஒரு மூவர்ணப்படம் என்று
தெரிகிறது.
சிக்கலுக்குள்
நான்கு வர்ணமும்
தெரிகிறது.
யாருக்கோ அவசர அவசரமாய்
அதாவது
அறுபது எழுபது ஆண்டுகளாக
எப்படியேனும்
ஒரு சட்டையை தைத்து
போட்டு விடவேண்டும் என்ற
துடிப்பு மட்டும் தெரிகிறது.
ஆனால்
துடிக்க வேண்டிய
இதயத்தின் இடத்தில்
இதயம் இல்லை.
சிந்திக்க வேண்டிய
அறிவின் இடத்தில்
அறிவு இல்லை.
ருசி பிடித்த நாக்கு
வெறி பிடித்து நீண்டு கொண்டே
இருக்கிறது.
கரன்சிகளைக் கொடு கொடு
என்கிறது.
அலுவலக நாற்காலிகள் எல்லாம்
இந்த நாக்குகள் தான்.
ஆளும் எந்திரமோ
மொத்தமான குத்தகைக்கு
குந்தி உட்கார்ந்திருக்கிறது.
அதற்குள்
என்ன அவசரம் இந்த சட்டைக்கு?

என்ன?
நிர்வாணமாக இருக்கின்றதா?
இருந்து விட்டுபோகிறது....
இந்த "ஜனநாயகம்".
யாருக்கென்ன?
இங்கு யாருக்கும் வெட்கமில்லை.

====================================================


திங்கள், 1 ஏப்ரல், 2019

சினிமாவுக்குள் இதயம் செருகிய மகேந்திரன்



நன்றி : "ஒரு ஊழியனின் குரல்"





சினிமாவுக்குள் இதயம் செருகிய மகேந்திரன்
=========================================================ருத்ரா

இயக்குனர் மகேந்திரன் அவர்களின்
இதயத்துடிப்பு அடங்கியது
அறிந்து நமக்கு எல்லையற்ற துயரம்.
சினிமா என்பது
வெறும் கச்சாபிலிம்களின்
நீண்ட நீண்ட பாம்பின்
உடல் அல்ல.
நிகழ்வுகளை தின்னும்
அந்த நீண்ட ஒளி நிழல் பாம்பு
"படம்" எடுத்து திரையில்
ஆடும்போது
கதை ஓட்டங்களைத்தான்
நாம் பார்த்தோம்.
அதில் இதயத்தை
பதியம் செய்து
பதிவு செய்து
காட்டியது அவர் மட்டுமே.
தனி மனிதன்
சமூகம்
இந்த இரண்டையும்
அவர் இதயநாளத்தைக்கொண்டு
கட்டி
அதில் உணர்வுகளின்
உயிரோட்டத்தை தொப்பூள் கொடியாக்கினார்.
"உதிரிப்பூக்கள்"
என்ற அந்த ஒரு படம் போதும்.
மனிதன் எனும் மிருக மிச்சம்
அல்லது
மனிதன் எனும் தெய்வ அச்சம்
இரண்டையும்
சமுதாயத்தின் ஒற்றைப்புள்ளியில்
ஒன்று சேர்த்தார்.
சமூகம் மனிதன் மூலமாகவே
தன்னை வார்த்துக்கொள்கிறது
என்ற அந்த பாடம்
வரலாற்றுத்தடங்களை பதிக்கவல்லது.
அவரது கலைத்தொண்டுக்கு
நம் சிரம் தாழ்த்த வணக்கங்கள்.

===================================================