ஞாயிறு, 7 ஜனவரி, 2018

நகைச்சுவை (2)


நகைச்சுவை (2)
================================================ருத்ரா

வான் உலகம்.
மேக மண்டலங்களினூடே ...
"நாரதாயண ..நாரதாயண"
விஷ்ணு  நாரதரை
அழைத்துக்கொண்டே வருகிறார்.
"க்ஷமிக்கணும் ..க்ஷமிக்கணும்
அபசாரம் அபசாரம்..
"நாராயண நாராயண..என்று
நான் அல்லவா
உங்களை அழைக்கவேண்டும்.
நீங்கள் என்னை இப்படி
அழைத்துக்கொண்டு வரலாமா?"

"போகட்டும் ..விடு நாரதா?
எனக்கு ஒரு அவசரமான கேள்வி
உன்னிடம்."

"பாற்கடலில் பள்ளிகொண்ட
பரந்தாமா? இது என்ன சோதனை?
நாயேன் என்னிடம்
தங்களா கேள்வி கேட்பது?"

"விடு நாரதா.
எனக்கு இந்த வைகுண்டம்
அலுத்துவிட்டது.
நரர்கள் சொர்க்கவாசல் என்று
நம்மைத்தேடி வருகிறார்கள்.
இதைவிட சுவாரஸ்யமான
சொர்க்கவாசல் வேறு எங்கும்
இருக்கிறதா சொல்"

"பரந்தாமா
அதைச்சொல்லத்தான்
உங்களிடம் ஓடோடி
வந்து கொண்டிருக்கிறேன்...
அதோ கீழே பாருங்கள் ..."

மேகமண்டலங்களைத்துளைத்துக்கொண்டு
இருவரும் பார்வையிடுகிறார்கள் .

காட்சி  விரிகிறது
......................................

..................................

"அய்யா சாமி  கொஞ்சம் தர்மம் செய்யுங்க சாமி"

(எதிரே வருகிறவர் தன பாக்கெட்டிலிருந்து துழாவி
ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை அவர்  தட்டில் இடுகிறார்.)

"கோயிச்சுக்காதீங்க சாமி...இந்தாங்க இந்த சில்லறையை
திருப்பி வாங்கிக்கிங்க சாமி.."

"ஏம்பா ..உனக்கு எவ்வளவு வேணும்?"

"மன்னிச்சுங்க சாமி.... நான் பத்தாயிரம் இருபதாயிரம்
ரூபாக்கட்டுகளுக்கு  கொறஞ்சு வாங்கிக்கிறது இல்லை சாமி."

அப்போது தான் இவர் அவர் தட்டை பார்க்கிறார். அதில் அவ்வளவும்
இரண்டாயிரம் ரூபாய் கற்றைகள்..."

 ...............................................
.................................................

"நாராயணா ..நாராயணா .."
சொல்லிக்கொண்டே
நாரதர் திரும்பிப்பார்க்கிறார்.
அங்கே
நாராயணர் கீழே மயங்கிக்கிடக்கிறார்,

அவர்கள் பார்த்த இடம்  வடசென்னை  ஆர்.கே  நகர்.

======================================================
பொறுப்பு துறப்பு :-

இந்த காமெடி புராணம்
நகைச்சுவைக்காக ..நகைச்சுவைக்காக
மட்டுமே!

=======================================================





சனி, 6 ஜனவரி, 2018

ஆன்மீக அரசியல்


ஆன்மீக அரசியல்
==================================ருத்ரா

ஆயிரம் ஆண்டுப்பொய்கள்
கட்டவிழ்த்து விடப்படுகின்றன.
ஆழ்வார்களின்
நாயன்மார்களின்
தமிழ்ச்சொற்களில்
பக்தி சொட்ட சொட்ட‌
வடிந்தது எல்லாம் சரி தான்.
ஆனால்
சைவம்
வைஷ்ணவத்தின்
கழுத்தை வெட்டியது
வைஷ்ணவம்
சைவத்தை
கற்றுணைப்பூட்டி
ஒரு கடலில் பாய்ச்சியது.
இரண்டும் சேர்ந்து
புத்தத்தை
சமணத்தை
கழுவில் ஏற்றியது.
இது அரசியல்.
ஆன்மீகப்பூச்சுகள் எல்லாம்
மறைந்து போயின.
செங்கோலை
அரசர்கள் விறைப்பாக‌
வைத்துக்கொள்ள‌
அவர்கள்
மதவெறியையே
வெட்டரிவாள் ஆக்கி
மனிதம் எனும்
சமூக நீதியின்
கழுத்தை அறுத்தார்கள்.
அரசியல்கள்
மதங்கள் பேசலாம்.
மதங்கள்
அரசியல் பேசும்போது
மனித ரத்தமே
"இந்து மகா சமுத்திரம்"
ஆகி விடும்.
பாபாக்களின்
முகமூடிகள் போட்டுக்கொண்டு
வாக்குகளைக்குவிக்கும்
தாந்திரிக யோக முத்திரைகள்
கண்டு மயங்கி
அப்பாவிகளான‌
தமிழ் நாட்டு ஆட்டுக்குட்டிகள்
ஏமாந்து விடலாமா?
"பா..பா பிளாக் ஷீப்
ஹேவ் யு எனி உல்
எஸ் சார் எஸ் சார்
த்ரீ பேக்ஸ் ஃ புல் "
ஆமாம் உங்கள்
தமிழ்க்கருவூலங்கள்
ஏற்கனவே கொள்ளை போனது
உங்களுக்கு தெரியுமா?
மீண்டும்
உங்கள் ஓட்டுக்களை
அள்ளுவதற்கு
சிங்கம்
தனியாக வந்தாலும்
கூட்டணி சேர்த்து வந்தாலும்
பார்த்துக்கொள்ளுங்கள்.
தமிழ்நாடு
எலும்புக்குவியல்கள்
ஆகிவிடக்கூடாது.
தமிழ்ப்புயல்களே
சீறி வருக!
உங்கள் ஐந்திணை வெளிச்சத்தின்
அருமை வாழ்க்கையியல்கள்
கொத்து கொத்தாய்
சிதறடிக்கப்படும் முன்
உங்கள் வாக்கு தேசங்களை
காப்பாற்ற வருக!
தமிழ் வாழ்க!
தமிழ் வாழ்க!
விண் முட்ட‌
மண் அதிர‌
குரல் எழுப்பு!
தமிழ் வாழ்க!
தமிழே வெல்க!
==========================================

ரஜனி‍‍‍‍..கமல்..எனும் "உத்தமபுத்திரன்"க‌ள்

ரஜனி‍‍‍‍..கமல்..எனும் "உத்தமபுத்திரன்"க‌ள்
===================================================ருத்ரா

தமிழ்நாட்டு அரசியல் அரங்கில்
ஒரு புதிய‌
"உத்தமபுத்திரன்"படம்
நடந்து கொண்டிருக்கிறது
ஒரே நடிகரின்
இரட்டைவேடப்படம் அல்ல இது.
ஒரே வேடத்தை இரு நடிகர்கள்
நடிக்கும் படம்.
லஞ்சம் ஊழலற்ற‌
ஓட்டுக்கு துட்டு கேட்காத‌
ஒரு சமுதாயத்தை படைக்க‌
நினைக்கும் ஜனநாயகவேள்வி இது.
ஆம்
படம் அல்ல வேள்வி.
ஒருவர் ஆன்மீக அரசியல் என்கிறார்.
மற்றவர் மானிட மலர்ச்சி
என்கிறார்.
இவர்கள் கண்ணியமாய்
ஹலோ சொல்லிக்கொள்பவர்கள்.
வாழ்த்திக்கொள்பவர்கள்.
ஒருவர் ட்விட்ட‌ரிலேயே
செயிண்ட ஜார்ஜ் கோட்டை வழிக்கு
ஸ்கெட்ச் போட்டு வைத்திருக்கிறார்.
மற்றவரோ
தன் பிரம்மாண்ட திரைப்படைப்புகளை
கங்காருவைப்போல‌
குட்டிகளாய் தன் மடியில் வைத்திருக்கிறார்.
அந்தப்படங்களை 
முடித்த கையோடு ஒரு
முடிசூட்டு விழாவுக்கும்
கால்ஷீட் கொடுத்து விட்டார்.
இருவரும்
தமிழ் நாட்டிலிருந்து
திராவிடச்சுவடுகளை
துடைத்து அழித்துவிடப்போவதாக‌
பலூன்கள் ஊதிக்கொண்டிருக்கின்றன‌
இந்த ஊடகங்களும்
அதற்கு முளையடித்து
ஆணியடித்து வைத்திருக்கின்ற‌
வெஸ்டட் இன்டெரெஸ்டுகளும்.
இருவரும்
வாய்வீச்சுகள் தான் வைத்திருக்கிறார்கள்
வாள் வீச்சுகள் அல்ல.
அறிவு ஜீவியாக இருப்பவர்
பெர்னார்ட் ஷா என்று சொன்னால்
ஆன்மீக ஜோதியாக இருப்பவர்
எங்கே அமித்ஷா
என்று சொல்லிவிடுவாரோ
என்ற அச்சம் ஒரு நிழலாய்
தமிழ் மண்ணில் பரவிக்கிடக்கிறது.
ஒருவர் மத்ய மாநில என்றெல்லாம்
மீன மேஷம் பார்ப்பத்தில்லை.
எதிர்க்கின்ற முழக்கம் எங்கும்
சூடு பறக்கும்.
மற்றவருக்கோ
தூரத்தில் வருகிற 234க்கு மட்டும்
தன் முப்படையும் மூர்க்கதோடு பாயும்.
வெகு அருகில்
வரும் அந்த 39+1க்கு
ஒரு இறுகிய மௌனம்.
அதற்கும் அவர் கைகள் உயர்த்தவேண்டும்.
மனிதர்களுக்கு வர்ணம் பூசி
இதிகாசங்களுக்கு மத்தாப்பு கொளுத்தி
பிற்போக்காய் சரித்திரம் மாற்றும்
தந்திரங்களை அவர்
தவிடு பொடி ஆக்கவேண்டும்!
இந்த உத்தம புத்திரன்கள்
"கத்தி" சண்டை போட்டாலும் போடலாம்.
கத்திச்சண்டை
கண்டிப்பாய் போட மாட்டார்கள்.
இவர்களில் யாருக்கும்
அந்த "உத்தமபுத்திரன்"முகமூடி இல்லை.
இவர்களிடமும்
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
என்று
ஒரு அரசியல் கசிகிறது.
மாற்றத்தின் ஆவேசத்தில்
இந்த உட்கசிவே இருவரையும்
உருக்குக்கரங்களாய் இணைக்கலாம்.
கூட்டணி மாதிரி
ஒரு கூட்டணி உருவாகலாம்.
ரசிகர்கள்
மக்களாக
இயக்ககரமான மக்களாக‌
மெடமார்ஃபாசிஸ் அடையும்
ஒரு பரிணாமம்
இந்த தியேட்டர் கியூக்களில்
நிகழ்வுறும் என்று
நம்புவோம்.

=================================================




வெள்ளி, 5 ஜனவரி, 2018

காதல் கணக்குகள்

Cupid Clip Art - Clipart library
காதல் கணக்குகள்
==================================================ருத்ரா

குழந்தைகள் உருவில்
இறக்கைகளுடன்
காதலின் தேவதைகள்
வானத்தில்
என் தலைக்கு மேல்
பறந்து கொண்டிருந்தன.

"உங்களுக்கு
என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இந்த ஆண்டாவது
எனக்கு ஒரு காதலி
கிடைப்பாளா?"
நான் சொன்னேன்.

அவை கூறின.
"நீ காதலிக்க வேண்டாமா
காதலிக்க வேண்டுமா
என்று நினைத்தது
35899
காதலிக்க நினைத்தது
65998
காதலிக்க முனைந்தது
76999
காதலித்தது
0000000
அடுத்த ஆண்டு பார்க்கலாம்"

அவை மறைந்தே போயின!
அடுத்த ஆண்டுக்கு
காத்துக்கொண்டிருக்கிறேன்

==================================================




"நான்யார் ?"

"நான்யார் ?"
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍================================================ருத்ரா

திருவண்ணாமலை
பாறையிடுக்குகளில்
பள்ளி கொண்ட முனிவர்
ரமணர்.
மனத்தின் படர்ந்த வெளியில்
மேய்ந்தவர்.
ஒரு தூசு கூட‌
இந்த மேனியில்
கோடிக்கணக்கான
டன் எடையுள்ள பாறை தான்
அவருக்கு!
அந்த உறுத்தலில்
அவருள் முளைவிட்ட கேள்வி தான்
"நான் யார்?"
அவர் நினைத்தார்
இந்த பிரபஞ்சத்தையே கூட‌
மூடி மறைக்க
ஒரு கோவணம் போதும் என்று?
அது தான்
அந்த "நான் யார்?" என்ற கேள்வி.
ஒரு சமணத்துற்விக்கு
அதுவும் தேவையில்லை.
கேள்வியே கேட்கவேண்டாம்.
வெட்கம் எதற்கு?
ஆசை எதற்கு?
வேதனை எதற்கு?
பிரபஞ்சம் தன்னையே
மூளியாய்
உற்றுப்பார்த்துக்கொண்டிருப்பதே
பிரம்ம நிர்வாணம்.
ஆன்மீகம்
என்பதும்
இப்படி கண்ணாடியை
சில்லு சில்லாய் நொறுக்கி
ஒவ்வொன்றிலும்
தன் பிம்பதையே
பார்த்துக்கொண்டிருப்பது தான்.
இந்த இதயத்துள்
வெண்டிரிக்கிள் ஆரிக்கிள்
அறைகள் மட்டுமே
உண்டு
அதனுள் ரத்தம் ஆடும்
நர்த்தனமே ஆன்மீகம்.
அது தான்
இந்த உலகமே  உறையும் இடம்.
அதில்
சூலங்கள் இல்லை.
சிலுவைகள் இல்லை.
பிறைகளும் இல்லை.
மலைகளை
கற்பாளங்களாக‌
வெட்டி வெட்டித்
தின்னும் ஆசைகள் இல்லை.
ஆற்றைச்சுரண்டி
மணலும் நீரும்
கொளையடிக்கப்படவேண்டும்
என்ற பணவெறி இல்லை.
என் மதம் உன் மதம்
என்ற கொலைகள் இல்லை.
மனித வர்ணங்கள் இல்லை.
இந்தப்பூவை
கோடரி கொண்டா பறிப்பது?
ஆன்மீகம்
மானிடப்பூ என்றால்
அரசியல் எனும்
கோடரிக்கு
அங்கு வேலையே இல்லை.
அப்படியென்றால்
ஆன்மீக அரசியல் என்பது
யாரோ
யாரையோ
ஏமாற்றுவது தான்.
அந்த "நான் யார்?"
அதற்கு எதிரே உட்கார்ந்திருக்கும்
அந்த "நீ யார்?"

ஓட்டு வைத்திருப்பவனே.
நன்றாய் உணர்ந்து கொள்
அந்த இரண்டுமே
அந்த கணினிப்பொறியின்
"பட்டன்" தான்!

====================================================



விஜயசேதுபதிக்குள் எத்தனை கோணங்கள்?

விஜயசேதுபதிக்குள் எத்தனை கோணங்கள்?
===========================================================ருத்ரா

ஆனந்தவிகடனில்
போட்டோக்களில் அத்தனை அபிநயம்.
கட்டுரையில்
அத்தனையும் அற்புத கோணங்கள்!

"விக்ரம் வேதா"வும்
"கவண்" படமும் தான்
அவருக்குள் அவரை
அவர் இன்னமும்
அசை போட்டுக்கொண்டிருக்க
வைக்கிறதாம்.
ஆம்
2017ல் அவர் அடுக்கி அடுக்கி
எட்டு படங்களை அல்லவா
கொடுத்திருக்கிறார்.
கதையும் நடிப்பும்
ஒன்றுக்குள் ஒன்றாய்
சுடர்ந்து புடம் போட்டிருக்கின்றன.

அவரது
வைரமே அந்த‌
"நடுவில் கொஞ்சம் பக்கத்தைக்காணோம்"
என்பது தான்.
அவர் அதில்
பட்டை தீட்ட ஆரம்பித்த‌
பளீர் கோணம்
ஒவ்வொன்றுமே
இன்று வரை
கதிர் வீசிக்கொண்டிருக்கிறது.

விஜய சேதுபதி என்ற மனிதன்.
அவன் தாங்கும் பாத்திரங்கள்.
நடிப்பு எனும்
அதிசய ரசாயனக்கலவையால்
பூசப்படும் வினோத வியப்புகள்
இந்த மொத்தம் தான்
இவரது அரிய மணிமகுடம்.

நடிப்பு என்றால்
உண்மையில்
நடிப்பே
அங்கு துளியும் இருக்கக்கூடாது.
ஆனால்
ஒரு யதார்த்தம் இழையோடும்
மனிதனின்
பச்சை நரம்புகளும்
பற்றி எரியும் உணர்வுகளும் மட்டுமே
அங்கு வேர் விடும்.
அதுவே அடர்ந்த உணர்ச்சியின்
விருட்சம் ஆகி விடும்.
இப்படி
ஒரு புதிய இலக்கணத்தை
கையோடு கொண்டு வந்தது போல்
வந்து
திரைப்படங்களை
ஆட்சி செய்து கொண்டிருப்பவர் விஜயசேதுபதி!

"சூது கவ்வும்"...
இந்தப்படத்தில்
அந்த இருள் திகிலை
எப்போதும்
பரபரப்பு கவ்விக்கொண்டேதான்
இருக்கும்.
யார் யாரை கடத்தவேண்டும்?
மகாபாரதத்தின்
சூழ்ச்சிச் சோழிகள்
அங்கங்கே
குலுக்கிப்போடப்படுவது போல்
ஒரு மவுன பயங்கரத்தின்
சிதறு ஒலிகளை
நம்மை கேட்கவைத்து
அவர் பார்வைகள் சுழற்றுவது
மறக்கப்படவே முடியாது.

நரைத்துப்போன‌
வாழ்க்கையின் விளிம்பில்
சிறுபிள்ளைத்தனமான‌
மழலை இனிப்பை
குறும்பின் சிகரத்தில் நின்று
நமக்கு
சப்புகொட்டுவதற்காக‌
நீட்டினாரே
அந்த "ஆரஞ்சு மிட்டாயை"
அற்புதத்திலும் அற்புதமான‌
கோணம் அது.

இப்படி
அவர் படம் ஒவ்வொன்றிலும்
அவர் இன்னும்
மிக மிக எட்டாத உயரத்தை நோக்கி
செதுக்கிக்கொண்டிருக்கிறார்
என்பதை
நாம் ரசிக்கும்போது
நமக்கே ஒரு பெருமிதத்தை
சிறகுகள் ஆக்கி
விலாவில் ஒட்ட வைத்து விடுகிறார்.

ஜூங்கா
சீதக்காதி
சூபர் டீலக்ஸ்
ஒரு நல்லநாள் பார்த்து சொல்றேன்

இந்தப்படங்களையெல்லம்
அவர் நமக்குத்தரப்போகிற‌
அந்த ஆர்வ மினுமினுப்பு !
இலக்கியத்தரம் வாய்ந்த
எழுத்துக்களை
காகிதத்தில் அள்ளித்தரும்
ஒரு நாவல் ஆசிரியனின்
மின்னல் கொடி கனவுகள்!
எல்லாமாய்
ஒரு வர்ணகலக்கலாய்
நமக்கு இனிய மேகமூட்டங்களை
கற்பனை செய்ய வைத்து
நமைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கின்றன
"எப்போது அந்த படங்களை
பார்த்துத்தொலைவோம்" என்று!
காத்திருக்கும் பொறுமையின்மையின்
படபடப்பு இது!

வரும் ஆண்டுகள்
மகுடத்தின் மேல் மகுடங்களை
அவருக்கு
சூட்டி அழகு பார்க்க‌
வாழ்த்துகிறேன்! வாழ்த்துகிறேன்!

===================================================






வியாழன், 4 ஜனவரி, 2018

கமலின் சாசனம் (4)

கமலின் சாசனம் (4)
============================================ருத்ரா

ஆர்.கே நகர் வாக்குகள்
பணப்புயல் சுநாமிகளால்
படையெடுக்கப்பட்ட போது
இளையராஜா அவர்களின்
சுநாதங்களில் சுருண்டு கிடந்து
சுந்தரக்கனவுகளில்
அமிழ்ந்து கிடந்ததில்
இங்கு யாருக்கும்
ஆட்சேபணை இல்லை.
எரிந்து முடிந்த சாம்பலுக்குள்
என்னத்தை உற்றுப்பார்த்தீர்கள்?
அவிந்து போன ஜனநாயகத்தின்
ஏதாவது ஒரு ஃ பீனிக்ஸ் பறவையின்
முட்டை கிடைக்குமா என்று
அந்த ஆனந்தவிகடன் பத்திகளில்
பதிப்பு செய்தீர்களா?
ஓட்டுக்கு
நாம் பிச்சையெடுக்கும்போது
பார்த்துக்கொள்ளலாம் என்று
"எல்லாரும் இந்நாட்டு மன்னர்"
என்பதாக
பவனி வருபவர்களிடம்
இப்போது
சில்லறை குலுங்கும் ஒரு
நசுங்கிய அலுமினிய டப்பாவை
கையில் கொடுத்து
அழகு பார்த்தீர்க்களா ?
இதுவும் அழகாக நம் எல்லோரையும்
அவமானப்படுத்திக்கொள்வது தான்.
தியேட்டர்களில்
நம் ரசிகர்களே ஒன்றுக்கு பத்து மடங்கு
விலை கொடுத்து
டிக்கட் வாங்கும் அவலங்கள்
நமக்கு தெரியாமல் போய்விடுகிறது.
"ஓட்டர்ஸ் சைக்காலஜி"
எனும் "பேண்டோரா பாக்ஸ்"
நம் நாட்டில்
என்றோ திறக்கப்பட்டு விட்டது.
கூர் தீட்டிய உங்கள் பேனாக்கள்
எதை வேண்டுமானாலும்
எழுதிக்கொள்ளட்டும்
என்று "அரசியல்" மரத்துப்போன
இந்த கற்பு நெறி பற்றி
கவலைப்படுவார் யாருமில்லை.
அன்று
தேர்தல் எனும்
அந்த குருட்சேத்திரத்தில்
உங்களோடு ஒத்து நிற்கும்
சினிமாவின் சக பாண்டவர்களோடு
ஒரு வியூகம் வகுத்திருக்கலாமே.
அபிமன்யூ மாதிரி ஒரு சின்ன பையன்
அந்த "வேட்பு மனு" கொடுக்கும்  போது
நடந்த அந்த  அசிங்க வியூகத்தை உடைத்து
நீங்கள் எல்லாம் அம்பு மழை பெய்து
அந்த பண மழையை
ரவை ரவையாய் உடைத்து
ஒன்றுமில்லாமல் செய்து
உண்மை ஜனநாயக முகத்தை
எல்லோருக்கும் காட்டியிருக்கலாமே.
இன்று இந்த
பிச்சைக்காரர்கள்  பட்டமளிப்பு விழா
தேவை தானா?
உலகநாயகன் அவர்களே
உங்களிடன் ஒரு ஆற்றல் சுரங்கம்
இருப்பதாகத்தான்
இன்னும் நாங்கள்
நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
இந்த "வசனங்கள்" எல்லாம்
உங்கள் வருங்கால "தேர்தல்"சினிமாக்களை
ஓட்டுக்களின்  "பாக்ஸ் ஆஃ பீஸ்  ஹிட்டுகளாக "
மாற்றுமா என்பது
சந்தேகத்துக்குரியது மட்டும் அல்ல
கவலைக்கு உரியதும்  ஆகும்!

===============================================