சனி, 27 பிப்ரவரி, 2016

தூரிகைமரங்கள்






தூரிகைமரங்கள்
========================================ருத்ரா இ.பரமசிவன்
அந்தி கவிகின்ற நேரம்.
பகல் பொழுத்து
கொறித்து விட்டு போட்ட
சுண்டல் பொட்டலங்களின்
காகித கசங்கல்களாய் மனிதர்கள்.
டாலர்கள் ஆனாலும்
ரூபாய்கள் ஆனாலும்
அவற்றின் வியர்வை வழியல்களும்
ரத்த சதை நரம்போட்டங்களும்
ஒரே நீரோட்டமாய் தான்
கரன்சிகளில் ஓடுகின்றன.
கலிபோர்னியாவில் ஒரு பூங்கா.
குழந்தைகள்
உற்சாக சிறகு முளைத்து
பறந்து பறந்து
விளையாடிக்கொண்டிருந்தனர்.
சோடிய விளக்கின் முண்டைக்கண்கள்
வெளிச்சத்தை  சுகமாய்க்கசிந்தன.
தூரத்து தூரிகை மரங்களாய்
பாம் ட்ரீஸ் மிக அழகு.
அவை அந்த நீலப்படுதா எனும்
கேன்வாஸில்
எதையோ வரைந்து கொண்டே இருப்பதாய்
எனக்கு ஒரு பிரம்மை.




எங்கே அது?




எங்கே அது?
==================================ருத்ரா இ.பரமசிவன்


அச்சு எந்திரம் பெற்றுப்போட்டதில்
காப்பி தான் வந்தது!
மூலப்பிரதி இன்னும் வரவில்லை.
அதை "ஆத்மா" என்றார்கள்!
மன சாட்சி என்றார்கள்.
ப்ரம்மம் என்றார்கள்.
இதயமும் கல்லீரலும் நுரையீரலுமாய்
ஏதோ தேங்காய் நாரும் பஞ்சும் அடைத்த‌
மரப்பாச்சிகளாய்
உலா வருகின்றேன்.
எங்கே அது?
என்ன அது?
எதற்கு அது?
புரியவில்லை!
இருப்பினும் அந்த‌
மூலப்பிரதி இன்னும் வரவில்லை.
பெரிய பெரிய பெரிய‌
மனிதர்கள் அது பற்றிய‌
தேடுதல் வேட்டையில்
ஞானத்தை கூர் தீட்டுகிறார்கள்.
பாவம் என்கிறது அது!
மூளையை கசக்குவது இருக்கட்டும்.
மூளை நரம்பின் ந்யூரான் ஜங்ஷன்களில்
பொன்னம்பலங்களிலும்
வெள்ளியம்பலங்களிலும்
உள்ள‌
ஊர்த்துவ தாண்டவங்களில்
புல்லரிப்பதை விட்டு கொஞ்சம்
அறிவியற்புரிதலில் மூழ்கிப்பாருங்கள்
என்கிறதோ அந்த ஞானம்!
இந்த உயிரின் "நுரைச்சங்கிலி"யின்
ஒரு முனை இங்கே
இன்னொரு முனை எங்கே?
"அதான்யா இது"...
வாழைப்பழ ஜோக்காய்
வேதாந்தங்கள் சிரிக்க வைக்கின்றன.
"சார் என்ன பண்ணுகிறீர்கள்?
ஒரே சிந்தனைமயம் தானா?
அஹ் ஹா ஹா ஹா..."
அட்டகாசமாய் சிரித்துக்கொண்டே வந்து
உட்கார்ந்தார் எதிர்வீட்டு நண்பர்.

அவர் சிரிப்பில் அந்த "அச்சு எந்திரத்தின்"
கட கடப்பு இல்லை.
மூலப்பிரதியை எல்லாம் கசக்கிப்போட்டு
வீசி எறிந்து கொண்டிருந்தது
அவர் சிரிப்பு.
அந்த மனிதர் சிரித்துக்கொண்டிருப்பதை
நாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
நம் மனக்குகையுள் தொங்கிக்கிடக்கும்
வௌவ்வால்கள் எல்லாம்
சட சடத்து வெளியேறிவிடும்.
ஆனாலும் அந்த மனிதர்
சிரித்துக்கொண்டே இருப்பார்.
"விட்டுத்தள்ளுங்கள் சவத்தை" என்று
கட கட வென்று சிரிப்பார்.
அவர் மனைவிக்கு கேன்சர்.
அவர் மூளையில் கட்டியாம்.
பிள்ளைகள் எல்லாம்
கல்யாணம் ஆகியும்
மணமுறிவு வியாதியில்
மூலைக்கொரு பக்கமாய்
சிதறிக்கிடக்கின்றனர்.
"மாங்கல்யம் தந்துநானே
மம ஜீவன ஹேதுநாம்"களெல்லாம்
கோர்ட் படிகளில் நைந்து கிடக்கின்றன.
இதற்கெல்லாம் அவர் பயந்து போய்
எள் முடிச்சு தீபம் நவகிரகச்சுற்றல்கள்
அர்ச்சனை சீட்டுகள் ஹோமங்கள் என்று
சுருண்டு கிடக்கவில்லை.
ஆனால் இந்த சிரிப்பை மட்டும்
அவர் எல்லோரிடமும்
ஊடுருவ விடுகிறார் ஒரு
"நியூட்ரினோவைப்போல!".
அவரால் எப்படி
வெள்ளையாய் கள்ளமின்றி
பளிச்சென்று இப்படி சிரிக்க முடிகிறது?

அவரோடு நானும்
"அஹ்ஹா ஹா ஹா ஹா..."
என்றேன்.
எனக்கு புரியாதது
அவருக்கு புரிந்திருக்கிறது.
மூலப்பிரதி
எங்கோ அன்னத்தூவியிலும் அன்னத்தூவியாய்
அதோ "அடி முடி" காட்டாமல்
பறந்து போய்க்கொண்டிருக்கிறது.

============================================================










வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

முள்ளில் ரோஜா



முள்ளில் ரோஜா 
========================================================
ருத்ரா இ.பரமசிவன் 

யாராவது ஓடிவாருங்களேன் 
மாட்டிக்கொண்ட 
என் கை கால் களை அவிழ்த்து விடுங்கள் 
பதஞ்சலி முனிவர் சொன்னார்  என்று 
 செய்து பார்த்தேன்.
வஜ்ர சூசிகா ஆசனமாம் 
கொண்டை ஊசியை சொருகுவது போல 
குண்டிலினியில் 
ஊடுருவி 
அப்படியே சஹஸ்ராரமாய் 
மேலே போய் 
அந்த ஆகாயப்பிரம்மத்தை 
நக்கிப்பார்த்துவிட ஆசை !
இந்த முள்ளுடம்பு பூராவும் ரோஜாக்காளாய் 
மாறிவிடுமாமே!
பாருங்கள்!
என் மனது எங்கே?
என் உடம்பு எங்கே?
என் "முள்"எலும்புகள் எங்கே ?
ஒன்றுமே தெரியவில்லை.
வாருங்கள் 
வந்து காப்பாற்றுங்கள்.
அந்த பாலைவனத்தில் 
அதன் குரலைக் கேட்பார் 
யாருமில்லை!
காற்றின் ஊளையொலி மட்டுமே கேட்டது!
அந்த ஒலிக்குள் 
பிளந்து கிடப்பது 
கேள்வியா ?
பதிலா ?

====================================================================

வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

வெகு அழகு








வெகு அழகு
============================================ருத்ரா

வட்டமாய் வட்டமாய்
இதழ் அடுக்கி
வண்ணம் உயிர்ப்பித்து
இழைக்கிற்றுகள் வழியே
சுண்ணாம்பு விரலிடை விழுதுகளாய்
அருவி பாய்ந்து
கோலம் வெகு வெகு அழகு!
அப்போது தான் முடிந்த கோலத்தில்
விழுந்த இலைச்சருகுகள்
வெகு வெகு வெகு அழகு!

=============================================

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

இன்னொரு அம்மாவாக!






இன்னொரு அம்மாவாக!
============================================ருத்ரா இ.பரமசிவன்

என்னடா...
இந்த வாழ்க்கை?
இது ஏதோ
ஒரு சினிமாப் பாட்டு இல்லை.
இருட்டின் புழுக்கூட்டிலிருந்து
மின்னல் ஒழுக‌
பிய்த்து வந்தோம்.
இந்த உலகமே
சுகமான துணிவிரிப்பு தான்.
அன்னையின் கன்னிக்குடம் உடைத்து
அந்த அன்புப்பிழம்பில்
அவளுக்கு ஒரு
மறக்க முடியாத வலியை அல்லவா
கொடுத்துவிட்டு வந்தோம்?
அந்த வலியைப்பற்றி
அம்மாவிடம் கேட்டேன்.
"போடா! கிறுக்கா!
வலியா?
அமுத சாளரம்!
அதன் வழியே
என்னென்ன விஸ்வரூபம் எல்லாம்
பார்க்கிறேன் தெரியுமா?
உன் பச்சை நரம்புகளில்
நான் உயிர் பாய்ச்சிக்கொண்டிருப்பேனே
முலைப்பாலாய்
அப்போதும்
அந்த "ஆகாயகங்கையின்"
பால் வெளியில் தான் மிதக்கிறேன்.
"காஸ்மோனாட்டுகள்" கூட‌
கண்ணாடிக்குமிழிகளில் இருந்து
புன்சிரிப்பை வீசுவார்கள்.
செல்லமே!
உன் உதடுகள் கவ்விய உயிர்ப்பின்
பூவாசத்தில்
எந்த பிருந்தாவனங்களும்
வெறும் தூசிமேடுகளே!
ஓ! அம்மா எப்படி இப்படி!
சாஹித்ய அகாடெமிக்காரர்காரர்களுக்கே
தண்ணி காட்டும்
இலக்கியம் அல்லவா
உன் தாய்மை!
அம்மா
இப்போது
எந்த சன்னல் வழியாய் என்னை
எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கிறாய்?

"போதும் சோஃபாவிலேயே தூக்கமா?"
மணி பன்னிரெண்டு!"
மனைவி எழுப்பி தூங்கவைத்தாள்
இன்னொரு அம்மாவாக!

================================================





காதலர் தினம் (2)






மூன்றில் ஒன்று 
========================================================================
ருத்ரா இ.பரமசிவன் 

பார்த்தால் ஒரு முகம் தெரியும் 
இன்னும் பார்த்தால் 
மூன்று முகம் தெரியும் .
மொத்தமாய் பார்த்தால் ஒரு இதயம் 
உற்றுப் பார்த்தால் 
மூன்று இதயங்கள் கொத்தாய் தெரியும்.
மனிதன் இதயம் ஒரு கூடு 
அதில் 
சிறகடிப்பதோ 
பாசம் நேசம் காதல் 
எனும் 
மூன்று  பறவைகள் 
முத்தம் கொடுத்து மகிழ்ந்திருக்கும்.

==================================================================

இது அமெரிக்காவின் அரிசோனா நகர் கலைக்கண்காட்சியின் சிற்பம் 




சனி, 6 பிப்ரவரி, 2016

அச்சடித்தது இது.







அச்சடித்தது இது
 ==================================================\
ருத்ரா




எங்கோ
பழைய புதிய 
ஏற்பாடுகளின் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளின்
நெடுந்தொலைவிற்குப் பின்னே
ஒரு ஈடன் தோட்டத்தில்
அச்சடித்தது இது.
அடர்ந்த இலைகளின் ஊடே
அந்த பழத்தை நக்கிப்பார்க்க
தன் பிளவு பட்ட கூரான இரு நாக்குகளால்
தீண்டிப்பார்க்க ஆசை!
அதுவே
ஜிகினா கோர்த்த
வண்ண வண்ண அட்டைகளாய்
பிப்ரவரி மாதப் பெருமரத்தின்
வசந்த காலமாயும் இலையுதிர்காலமாயும்
ரோஜாக்களின் 
குவியல்களாய் சருகுகளாய் 
இனிய சுவாசத்தில் மூச்சு முட்டுகின்றன.
இதயங்களின் வேர்த்தூவிகளினூடே
துடிப்பின் மின்னல்களில்
கிராஃபிக்ஸ்  காட்டுவது
சிவனின் உடுக்கை ஒலிகளா ?
கிரேக்கத்தேவை "வீனஸின்"
கிளர்ச்சிக்கோடுகளா/?
எது வானாலும்
எப்படியானாலும்
காதல் வாழ்க வாழ்கவே!