செவ்வாய், 27 அக்டோபர், 2020

நல்ல காலம் வருகுது

 நல்ல காலம் வருகுது 

__________________________________ருத்ரா


அந்த குடுகுடுப்பைக்காரன்

நல்ல காலம் வருகுது 

நல்ல காலம் வருகுது

என்று குரல் பிஞ்சுகளை

உதிர்த்துக்கொண்டே வந்தான்.

சாதிகள் தொலையுது 

சண்டைகள் தொலையுது

என்று உதறி உதறி ஒலித்துண்டுகளை

இறைத்துக்கொண்டே வந்தான்.

அந்த தெருவெல்லாம் 

அந்த நம்பிக்கையால் 

கழுவி கழுவிச் சுத்தம் செய்யப்பட்டது.

அவனது குடுகுடுப்பை ஒலி

அந்த ஊரின் கடைக்கோடிக்கும் அப்பால்

ஒரு விளிம்புக்கு வந்தது.

இங்கே உள்ளவர்களுக்கு 

அது சுடுகாடு.

ஆனால் அதை ஒட்டியே

அவனைப்போன்றவர்களின்

இருப்பிடங்கள் 

சினிமாத்தட்டிகளிலும் சில்லறைத்தகரங்களிலும்

வேய்ந்த "மாளிகைகளாய்"

இறைந்து கிடந்தன.

அப்படி ஒரு 

"வசந்த மாளிகையின்" 

சிவாஜிகணேசனும் வாணிஸ்ரீயும்

தலைகீழாய் கவிழ்த்து வைக்கப்பட்ட‌

உறைவிடங்களாய் 

அந்த திரைப்பட போஸ்டரில் 

நம் சமூகப்பொருளாதாரத்தை

திரைப்படம் காட்டின.

அவனைப்போன்றவர்கள்

தங்கள் 

ஜனனங்களையும் மரணங்களையும் கூட‌

முதுகில் தூளி கட்டி 

சுமந்து சென்று கொண்டிருப்பார்கள்.

அடர்ந்து கிடந்த இருட்டில் 

விரிசல்கள் விழ ஆரம்பித்து விட்டன.

ஓ!விடிந்து விட்டது.

நாய்கள் குரைக்க ஆரம்பித்து விட்டன.

ஒன்றோடொன்று பாய்ந்து பிராண்டின.

"நல்ல காலம்" எல்லாம் 

அங்கே நார் நாராய் கிழிந்து கிடந்தன.

___________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக