மூன்றாவது உலகப்போரா?
மூன்றாவது உலகத்துக்குப் போரா?
எதற்கு கைகளை முறுக்கிக்
கொள்ள வேண்டும்?
கைகோத்துக்கொள்ளுவோம்.
முரண்பாடுகள்
நமக்குள் வந்தன.
நாமே ஏற்படுத்திக்கொண்டவை
ஆயின.
ரொட்டிகளும்
பங்கு வர்த்தக போட்டிகளும்
ஏன்
நம் கடவுள்களும் கூட
நமது "ஏற்பாடுகள்" தானே!
நமது ஏ கே 47 களும்
நமது புதிய புதிய ஏவுகணைகளும்
லட்சக்கணக்காய்
நம் உயிர்களை
குடிக்க
பலி கேட்கும்
அந்த
ரககசிய தருணங்களின்
அல்காரிதங்களை
அன்பு கசிந்த ரோஜாக்களாய்
மாற்றி விடும்
ஏ ஐக் கள் இன்னுமா
நம் குவாண்டம் சிப்புகளில்
முளை விடவில்லை?
மனித உயிர்களைக் கொத்து கொத்தாய்
தின்று தீர்த்துக்கொள்ளும்
கணித சமன்பாடுகளுக்கு
உடனே
சமாதி கட்டுங்கள்.
நம் விஞ்ஞான வெளிச்சங்களில்
தெரிகின்ற விடியல் பூக்கள்
இன்னுமா
நம் சமூகநேய மகரந்தங்களை
தெறிக்க விடவில்லை?
கை குலுக்கிக்கொள்ள
கை களை நீட்டிக்கொண்டே
இருக்கும்
டிவி பெட்டிக் காட்சிகளின் பேட்டிகளில்
எப்போதுமே சிரித்துக்கொண்டிருக்கும்
முகமூடிகளின் முக நரம்புகளில்
இனியாவது
உயிரோட்டமான புன்னகைகளை
பதியம் இடுங்களேன்.!
அமைதிப்
புறாக்களின் சிறகுப்படபடப்புகளை
புன்னகைத்தூறல்களாய்
தூவி விட முனையுங்களேன்!
அந்த மூன்றாவது உலகத்துக்கான
மனித நேயக்குவளைகளின்
மலர்க்கொத்துகளை
செருகி வையுங்களேன்!
வேண்டாம் இந்த வெடிமுழக்கமும்
புகை மூட்டங்களும்.
நம் இதயங்களின் நகரக்கட்டிடங்களின்
நொறுங்கிய குப்பைகளை
குவித்துக்கொண்டே
மனித உயிர்களை வெறும் கூளங்களாய்
சிதறடிக்கும்
கொடூரங்கள்
இனியும்
இனியும்
வேண்டாமே!
மூன்றாவது உலகப்போர் வேண்டாமே.
இரண்டு என முரண்டு பிடிக்கும்
போட்டி உலகங்களும் வேண்டாமே.
தொலைந்து போன மனித நேய
ஒளியே பூக்கட்டும்.
மற்ற இருட்டுத்துயரங்கள் எல்லாம்
மடிந்தே போகட்டும்.
________________________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக