வெள்ளி, 3 செப்டம்பர், 2021

அம்பத்து மூணாவது திருமண நாள்.



இன்று எங்கள்

அம்பத்து மூணாவது திருமண நாள்.

ஒரு அவனுக்கு அவளும்

ஒரு அவளுக்கு அவனும்

கிடைத்த 

பொன் வசந்தம்

இன்றும் மகரந்தங்களை

பொழியும் நாள்!

அப்போ சொன்ன 

"மாங்கல்யம் தந்து நாநே"யில்

ஒன்றும் புரியவில்லை.

இப்போதும் அந்த 

மந்திரம் மாங்காய்ச்செடியை

தந்து விட்டதா

என்று கேட்கிறீர்களா?

மாங்காய்ப்பாலுண்டு

மலைமேல் இருப்போர்க்கு என்று

சித்தர்களின் தமிழ் நுட்பம்

அந்த குண்டலினியைத்தான்

நமக்கு குளிப்பாட்ட‌

அருவியை கொட்டுகிறது.

என்ன கேட்டீர்கள்?

மாங்காய்செடியா?

சமஸ்கிருதம் 

தமிழ்மீது விளையாடும்

பச்சைக்குதிரை விளையாட்டின்

அரசியல்

அந்த திருமணவேள்வியில்

துல்லியமாய்த்தெரிந்தும்

அதைத் துடைத்தெறியும் வீரம்

எப்போது நமக்குள்

புறநானூறு பாடப்போகிறதோ

என்ற கேள்வி தான்

என் அகநானூற்றுக்குள்ளும்

முட்கூடு கட்டியிருந்தது.

அதனுள்ளும் பூத்த‌

என் ரோஜாக்களின் நந்தவனம்

பசிபிக் பெருங்கடலையும் தாண்டி

அலைத்திவலைகளை

அள்ளி வீசிக்கொண்டிருக்கிறது.

நாங்கள் பெற்ற செல்வங்களும்

அவர்கள் பெற்ற செல்வங்களும்

எங்களின் தனித்த தேசமாய்

எங்களுக்காக அந்த அருமை செறிந்த‌

அன்பு எனும்

தேசியக்கொடியை ஏற்றிக்

களிக்கிறார்கள்!

களிப்பூட்டுகிறார்கள்.

வர்ணங்கள் அற்ற

அன்பின் அந்த தூய வானத்தை

எங்களுக்கு

பொன்னாடை போர்த்துகிறார்கள்.

அன்பின் ஊற்றான நண்பர் குழாமும்

தங்கள் வாழ்த்துக்களை

எங்கள் மீது தூவுவதால்

இப்போது எங்களுக்குத்

தெரிவது

புதிய வானம்! 

புதிய பூமி!

புதிய சூரியன்!

________________________________

அன்புடன்

ப கஸ்தூரி‍ _இ பரமசிவன்.

04.09.2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக