அந்த முற்றுப்புள்ளி
பத்துக்கு மேல்
ஆயிரத்து இருபத்திரண்டு பூஜ்யங்களை
வரிசையாகப்போட்டு
பாருங்கள்!
அத்தனை ஆண்டுகளுக்கு
முன்னதாகவே
விழுந்து விடுமாம்.
அந்த ராட்சசப்பறவையின்
எச்சத்துள்
நாம் நசுங்கி காணாமல் போவதற்குள்
நம்
கல்யாணங்களையெல்லாம்
முடித்துக்கொள்வோம்.
நம்
கருமாதிகளுக்கு எல்லாம்
மந்திரங்கள்
தயார் செய்து கொள்வோம்.
அதெல்லாம் விடுங்கள்...
காதல் மின்சாரம்..
அந்த துடிப்புகளின்
பட்டாம்பூச்சிச்சிறகுகளை
பில்லியன்கள் கணக்கில்
நம் மனங்களின் பூந்தோட்டத்தில்
மேய விடுவோம்.
பத்துவயது வானத்துள்
விரியும் மத்தாப்புக்கூடுகளில்
ஒளிப்ப்பிஞ்சுகளின்
மின்னட்டாம்பூச்சிகளுக்கு
முத்தம் இடுவோம்.
எங்கள் ஊர்
அந்த பளிங்கு நீர்த்
தாமிரபரணியின்
நுரை மெத்தையில்
நீச்சலடிப்போம்..
அறிவின் கூட்டுப்புழுக்கள்
திடீரென்று
செயற்கை மூளையின்
ராட்சசச்சிறகுகள்
பட படக்க
குவாண்டம் எனும்
பொன்மணற்குவியலில்
எண்ணிறந்த பிரபஞ்சங்கள்
புதைந்து கிடப்பதை அறிந்து
புல்லரித்து புல்லரித்து
புலன்கள் வியர்த்துக்கொள்வோம்!
என்ன இந்த தட்டாமாலைகள்?
இவை பயமுறுத்தல்களா?
பரவசங்களா?
நம் மடியில் உட்கார்ந்திருக்கும்
இந்த
ஏ ஐ யும்
இன்னும் அந்த
விண்வெளி விஞ்ஞானங்கள் எல்லாமும்
என்ன
"அப்ஸ்ட்ராக்ட் அல்ஜீப்ரா"க்களையெல்லாம்
வாந்தியெடுக்கின்றனவோ
அவற்றை
போற்றி போற்றி
வணங்குவோம்.
வழிபடுவோம்.
ஆனந்தக்கூத்தாடுவோம்.
__________________________________________________
சொற்கீரன்
Updated Prognosis: The Universe May End 10¹⁰²² Years Sooner Than We Thought
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக