புதன், 27 மார்ச், 2019

நீடுஅமை நிவந்த நிழல்படு சிலம்பின்

நீடுஅமை நிவந்த நிழல்படு சிலம்பின்
-----------------------------------------------------------------------------------ருத்ரா இ பரமசிவன்.


சங்கத்தமிழின் ஒப்பற்ற பெரும்புலவன் நக்கீரன் எழுதிய பாடலில்
(அக நானூறு ..பாடல் எண்  205) மூங்கில் காடுகள் செறிந்த மலை முகடு பற்றிய மிக மிக அழகான வரி ஒன்று வருகிறது.

"நீடு அமை நிவந்த நிழல்படு சிலம்பில்" என்பதே அந்த வரி.

நக்கீரர் தீட்டிய அந்த கவின் மிக்க நுண் அழகு மிக்க வரியில் ஒன்றிப்போய்
நான் இந்த சங்கநடைசெய்யுளை மேலே கண்ட தலைப்பில் எழுதியிருக்கிறேன்.




நீடுஅமை நிவந்த நிழல்படு சிலம்பின்
-------------------------------------------------------------------------------ருத்ரா இ பரமசிவன்.

நீடுஅமை நிவந்த நிழல்படு சிலம்பின்
வரியிடை ஏய்க்கும் நின் கார் ஒலிக்கூந்தல்
சிக்கிய யானோர் செருக்களத்துப் பட்டேன்.
நின் அம்புவிழியில் என் அகலம் சிதைய‌
நின் கூர்நகையும் மற்றோர் அம்புசெத்து
நெடுமலை அன்ன என் உயரம் ஒடுக்கும்.
சொல்பெயர் தேஅத்து கொடுஞ்சுரம் நண்ணி
கல்பிறங்கு ஆரிடை ஆறுகள் கடக்கும்
நன்றே இன்றே நின் நவில் ஊறு நறுஞ்சொல்
இறைநெகிழ் வளையென ஊர்பு இழிதரும்.
அச்சொல் ஆங்கு என்னை இயக்கும்
இடர்தரு நீடு ஊழ் நூறிய காண்
நின் புல்லிய பொலம் வரி நுண் நகை
ஈண்டு யாவும் வெல்லும் ஊழி பெயர்த்தாங்கே.




அதன் பொழிப்புரை
----------------------------------

தலைவன் தலைவியின் நெற்றிக்கூந்தல் அத்தகைய ஒரு மூங்கில் காட்டின்
வரி வரியான ஒளி நிழல் விளையாட்டை அவனுக்கு காண்பிப்பதாய் அவள் அழகை  வியந்து அந்த க்கூந்தல் சிக்கல் அவனுக்கு ஒரு போர்க்களமானது
என்று கூறுகிறான். மேலும் அவன் "உன் அம்பு விழி என் மார்பை சிதைக்கிறது .உன் கூரிய மென்னகை இன்னொரு அம்பு போல் பாய்ந்து உயர்ந்த என்னை கீழே வீழ்த்தும்" என்றும் கூறுகின்றான். ஆனால் அவன் மேலும் கூறுகையில் "நீ நவிலும் நறுஞ்சொல் ஒன்று போதும். அது என்னை ஊக்கப்படுத்தி நான் பொருள் தேட அந்த கொடிய காட்டுவழியையும் கடக்க வைத்து விடும்.மொழி புரியாத அந்த காட்டுமக்களின் தேசத்துள்ளும்
("சொல் பெயர் தேஅத்து") கரடு முரடான அந்த கற்பாதையை கடந்து பல வழிகளையும் தாண்டி நான் செல்வேன் " என்கிறான்."உன் சொல் இன்றே நன்றாய் என்னை காடு  ஏகவைக்கும். உன் அழகிய முன் கை  வழியே அந்த வளைகள்  கழன்று விழும் அளவுக்கு நீ மேனி வாடுகின்றாய்.அந்த வளையல் கீழே விழுவது போல் உனது சொல் உதிரக்கண்டு நானும் விரைவாக புறப்படுவேன்.இடைப்படும் நெடுந்துன்பங்கள் அழிந்து போகும் பார்.உன் மெல்லிய பொன் கீற்று போன்ற புன்னகை இந்த எல்லாத்துயரங்களையும்
வென்று புதிய பொற்காலம் ஒன்றை நிகழ்த்திவிடும்" என்கிறான் தலைவன்.

--------------------------------------------------------ருத்ரா இ பரமசிவன்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக