திங்கள், 11 மார்ச், 2019

"கூத்தணி"


"கூத்தணி"
==============================================ருத்ரா

ஒரு வழியாய்
ஆரிய கூத்துகள் எல்லாம்
ஆடிய பின்
கூட்டணி என்னும் கூத்து
முடிந்து விட்டது.
நாக்கைத்துறுத்தி பேசுவார்.
முட்டியை குத்து விடுவது போல்
உயர்த்தி சீற்றம் காட்டுவார்.
சினிமாவில் எப்போதோ
பூசிய அரிதாரத்தில்
இன்னும் அவதாரமாய்
இவர் தெரிவதால்
ஏழைப்பூச்சிகள் ஆயிரம் ஆயிரமாய்
வாக்குகள் குவிக்கும் என்று
ஊடகங்களும் உடுக்கை அடித்ததால்
கூட்டணி ஒப்பந்தம் ஆனது.
அம்மையார் காட்டிய இடத்தில்
இவரும் கையெழுத்து போட்டுவிட்டார்.
அம்மாவையே எதிர்த்தவர் என்று
முகமூடி போட்டுக்கொண்டு
அம்மாக்கட்சியிலேயே
கூட்டணி வைத்துவிட்டார்.
அம்மாவும் இல்லை...அவர்
ஆன்மாவும் இல்லை
என்று இந்த மேடையில்
அரங்கேற்றம் நடந்து முடிந்து விட்டது.
தேசியக் கட்சி அல்லவா
சொல்லிவிட்டுப்போயிருக்கிறது.
மோடியா? லேடியா?
விடுங்கள்
மந்திரம் புளித்துப்போய் விட்டது.
மோடியே டாடி என்று ஆகிவிட்டது.
ராமதாஸிலிருந்து விஜயகாந்த் வரைக்கும்
இடுப்புக்கயிறு கட்டியாகி விட்டது.
"வாடா ராமா
ஆடுறா ராமா
மாமியா செத்துப்போய்விட்டாள்
தண்ணீர் கொண்டு வா ராமா"
................

ராமர் கோயில் கட்ட‌
செங்கல் சுமக்க வேண்டியிருக்கும்.
வேதாந்தா சொல்லிவிட்டால்
ஸ்டெர்லைட் ஆலையை
திறக்கவேண்டியிருக்கும்.
அதற்கும் உள்ளே போய்
புல் பிடுங்கி
சுத்தம் செய்யவேண்டியிருக்கும்.
சேது சமுத்திரத்தில்
மீண்டும் கல் சுமந்து அதில் போட்டு
கடலில் ஒரு ராமர் கோயில் கூட‌
கட்டவேண்டிருக்கும்.
கூட்டணி எனும் கூத்தணிக்குள்
ஆட வந்த "ராமா"க்களே
கயிற்று அசைவுக்கு ஏற்றாற்போல்
அபிந‌யம் செய்து ஆடத்தயார் ஆகுங்கள்.
இந்த தடவை "ஏழு காண்டங்களில்"
தேர்தல் ராமாயணம் நடக்கபோகிறது.
சொல்லுங்க சத்தமாக...
ராமா..ராமா..ராமா............


அந்தோ!
நம் ஜனநாயகம்
முழுப்பவுர்ணமியை எட்டும்வரை
இந்த "மூன்றாம் பிறைகளே"
நம் முன்னே முகம் காட்டி ஆடும்!

=======================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக