கண்ணாடி வீடு
___________________________ருத்ரா
இதன் அருகே
கல்லெறி விளையாட்டு
நடத்துபவன் தான்
கவிஞன்.
எங்கோ தெரியும்
வானவில் பார்த்து
கற்பனை முக்கி
அவன் அம்பெய்தான்.
சில்லு சில்லாய்
சீனாக்களிமண் பொம்மையாக
சிதறிப்போனான்.
வில்லும் அம்பும் இருந்தால்
போதுமா?
குறி பார்த்து எய்யும்
கூர்மை வேண்டாமா?
அவன் சொற்கள் எல்லாம்
கடலில் வரைந்த நீர்க்கோலம்.
அவ்வளவு பெரிய கடலை
அவன் அருகே
குப்பைக்கூடையாய் வைத்தது யார்?
கானல் நீர் மான் பார்த்து
குறி வைத்தான்.
நீரும் மறைந்தது.
மானும் மறைந்தது.
வில்லை முறித்து தூர எறிந்தான்.
அதையும் அவன் செய்வதற்குள்.
இற்று வீழ்ந்தான்.
தரையில் விழாமல் தாங்கி நின்றன
அவன் மீதே எய்த
அத்தனை ஆயிரம் அம்புகளும்.
_________________________________________

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக