வியாழன், 28 பிப்ரவரி, 2019

தாஜ்மஹால்





தாஜ்மஹால்
====================================ருத்ரா

பூமிக்கு அடியில்
புழுக்கள் தின்றுவிட்ட பிறகும்
அக்கினியின்
எங்கள் பளிங்குக்கனவு
உங்களுக்கு உள்ளேயும்
ஒரு இளஞ்சூடு அல்லவா
ஏற்றிக்கொண்டு இருக்கிறது.
அந்தப்புரத்தில்
கணக்கற்ற மனைவிகள் இருந்தும்
இந்த ஒற்றை அமுத நீரூற்றுக்கு மட்டும்
இத்தனை ஆர்ப்பாட்டமா? கட்டிடமா?
வரலாற்று நியாய அநியாயங்களுக்கு
நாம்
எத்தனை எத்தனை சமாதிகள்
கட்டவேண்டியிருக்கிறது?
அதுவும்
அழகிய சித்திர வேலைப்பாடுகளுடன்!
அந்தக் கலைஞர்களின்
கைவிரல்கள் கூட இப்படி
இன்னொரு சலவைக்கட்டிடத்தை
கட்டி விடக்கூடாது
வெட்டப்பட்டனவாமே!
ஒரு பேனாவை உருட்டி கவிதை
எழுதும் கைகள் எல்லாம்
காதலுக்கு "பிள்ளையார் சுழி"
போட வென்றாலும் கூட‌
இந்த மாளிகைக்குள் உலவும்
அந்த காதல் ஆவிகளைத்தான்
எழுதித்தீர்க்கின்றன.
இந்த யமுனையின் சத்தம்
அழுகையா? மகிழ்ச்சியா?
எங்கள் காதலை
நினைத்து மகிழ்ச்சியும்
அதனால் ஓடிய ரத்த ஆற்றுக்கு
அழுகையுமாய்த் தான்
எங்களுக்கு கேட்கிறது.
என்றாவது முளைக்கும்
ஒரு சிவன் கோயில்
இதை விழுங்கிவிடலாம்.
வரலாற்று ஆசிரியர்களே!
எல்லாமே இறந்த காலம் ஆனபோது
பழியும் வெறியும் மட்டும்
ஏன்
புதிதாய் பிரசவித்துக்கொண்டேயிருக்கிறது?
மனித ஜனனம்
"மனித"த்தின் மரணம் ஆகிவிடலாமா?
எப்படியோ!
காதலுக்கு மட்டும்
ஜனனமும் மரணமும்
ஒரே சமன்பாட்டைத்தான் எழுதுகிறது.

=================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக