புதன், 3 அக்டோபர், 2018

ஒரு தென்னை மரம்.

ஒரு தென்னை மரம்.
======================================ருத்ரா


அந்த தீவில்
ஒரு தென்னை மரம்.
ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளாய்
தென்னங்கீற்றுகளுக்கு
தலை வாரும் மென் காற்று
கிசு கிசுக்கிறது.
ஒண்ணு மண்ணாய் இருந்தவனின்
ரத்தம் கொண்டு நீர்பாய்ச்சியா
வளர்ந்திருக்கிறாய்.
அது தான்
உன் ஓலையில் ஒரு காக்காய் கூட
உட்கார வில்லை.
கீதமிசைக்கும் குயில்களைக்கூட
உன் கீற்று வாளால் வெட்டி வீழ்த்துகிறாயே.
இந்த வானத்தின் சுவாசம்
ஒவ்வொரு விடிவிலும்
ஒரு கேள்வியாய் தான்
பிளந்து வருகிறது.
அந்த தென்னை மரம்
மனிதர்களின் குரல்களை
அடையாளப்படுத்திக்கொண்டு
வானத்தின் மூளிப்படலத்தில்
சிராய்த்துக்கொண்டு
அசைகின்றது.

"ஆமாம்
தென்னை நன்கு வளர
என்ன செய்ய வேண்டும்?"
"நாயை அடித்து உரமாகப்போடு.
காய்கள் பீய்ச்சித்தள்ளும்."

அங்கு
நாய்களை விட மனிதர்களே
மலிவு.
அதிலும் தமிழ் பேசும் மனிதர்கள்
கொள்ளை மலிவு.

அந்த மனிதர்கள்
அடியில் கிடக்கிறார்கள்
இளநீர்க்காய்களுக்குள்
கண்ணீர் விட்டுக்கொண்டு.

===============================================






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக