புதன், 15 ஆகஸ்ட், 2018

சுதந்திரம்

சுதந்திரம்
============================================ருத்ரா

இந்த சொல்
அதன் அர்த்தத்தை விட்டு
வெகு தூரம் சென்றுவிட்டது.
72000 ஆயிரம் மைல்கள் இருக்கும்.
ரத்தத்தின் சத்தம்
தியாகத்தின் முத்தம்
எல்லாம் எங்கோ
வெகு தொலைவில் தேய்ந்து
கரைந்து விட்டது.
உயிர்ளைக் கொடுத்து
வாங்கியதன்
"விலைச்சீட்டு"
நம் ஒவ்வொருவரின் கழுத்திலும்
தொங்குகிறது
பாறாங்கல் கனத்தில்.
ஆம்
உலகச்சந்தையின் கெடுபிடியுடன்.
அந்த திட்டம்
இந்த திட்டம்
என்று
உச்சரிக்கப்படும் சாக்கில்
நாடெங்கும்
இந்திச்சொற்கள் இடம் பிடித்துக்கொண்டன.
பன்முகம் கொண்ட இந்தியா
ஆசிட் வீசி முகம் அழிந்து போனதுபோல்
ஒரே மதம் ஒரே தேசம் என்று
சாதி மத நெருப்பு வீசப்படுகிறது.
ஜனநாயகத்தின்
பலகோடி இதழ்கள் கொண்ட‌
தாமரை போன்ற
அழகிய முகம் பூத்த‌
நம் இந்திய அன்னைக்கு
ஒரு இரும்பு முகமூடி மாட்ட‌
சாணக்கியம் செய்யும்
கும்பல்களின் கும்பமேளாக்கள்
ஆரவாரம் செய்கின்றன.
மக்கள் ஜனநாயகம்
மங்கியே போனது.
லஞ்சம் ஊழல் எல்லாம்
ஒழிக்கப்படும் ஒரே வழி
லஞ்சம் ஊழல் என்று
வேத மந்திரங்கள் போல் இங்கு
கன பாட்டம்
செய்து கொண்டிருப்பது தான்.
இராமாயணம் படித்துக்கொண்டே
பெருமாள் கோயில் இடிப்பது போல்
பாபர் மசூதியையும் இடித்து
பரபரப்பு ஊட்டும் அரசியலை வைத்து
பலூன் ஊதும் தந்திரங்கள் நிறைந்த‌
பூமியா நம் பாரத பூமி?
ஓட்டுப்போட்டு
ஆட்சி செய்யும் ஒரே பெரிய நாடு
நாங்கள் தான்
என்று நமக்கு மட்டும் அல்ல‌
மற்ற நாடுகளுக்கும்
ஒரு பெரிய நாமம்
போட்டுக்கொண்டு இருக்கிறோம்.
வரிசையாய் நின்று
வரிசையில் நின்று
எழுபத்தி இரண்டு ஆண்டுகளாக‌
தோற்றுக்கொண்டு இருக்கிறோம்.
ஆம்
தோற்றுக்கொண்டு தான்  இருக்கிறோம்!

===================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக