வியாழன், 29 மார்ச், 2018

ஒரு நாள் போதுமா?

ஒரு நாள் போதுமா?
===========================================ருத்ரா

"இன்றொரு நாள் போதுமா?"
இது டி.எஸ்.பாலையா பாடும் பாட்டல்ல.
நம் தமிழ்நாடு படும் பாடு.
காவிரி பூம்பட்டினம் நம்மிடம் இருக்கிறது.
கரிகாலனின் கல்லணையும்
காவேரியின் சாட்சியாக‌
ஈராயிரம் ஆண்டுகளாக‌
நம் தமிழின் உயிரின்
ஆவணமாக இருக்கிறது.
சிலம்பு ஒலிக்கிறது.
அதன் அக்கினி வரிகளில்
நம் காவிரி எனும் உண்மை
எழுத்தெல்லாம் தகிக்கிறது.
ஆனால்
காவிரி மட்டும் நமக்கு இல்லை
என்று சொல்லாமல் சொல்ல‌
அல்லது
"வெறும் கையை முழம் போடுவது போல்"
மேலாண்மை வாரியத்தின் மேல்
இன்னொரு மேல் பூச்சு பூசப்பட‌
பொம்மை வாரியம் இருக்கப்போகிறது
என்று
அறிவிக்கை செய்யப்போகும்
டில்லி மட்டுமே இங்கு இருக்கிறது..
காவேரி இங்கு இல்லை!
ஒரு நாள்
ஒரு நாள் ...என்று
சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.
அந்த விநாடிமுட்கள் குத்திக்கிழிக்கும்
காலச் சக்கரத்தின் அடியில்
காவேரியும் நாமும்
கூழாகிக்கொண்டிருக்கிறோம்.
மத்திய சர்க்காருக்கு
தீர்ப்பின்  சம்மட்டி அடி விழுந்த போதும்
ஏதோ
ஒரு தேர்தலின்
சாணக்கியத்திற்காக
சில தந்திர வார்த்தைகள் கொண்டு
அவர்கள்
நம் நெஞ்சின் மீதே "ரோடு ரோலர்களாய் "
சொக்கட்டான்கள் உருட்டுகிறார்கள்.
ஆனால்...
இங்கே
அவருக்கு நூற்றாண்டு விழா
இவருக்கு பிறந்த நாள் விழா
என்று
"அட்டை செட்டிங்கில்"
ஆண்டுகொண்டிருப்பவர்கள்
கொஞ்சமும் கவலையின்றி
இன்னும் கொஞ்ச நாளில்
விழா எடுப்பார்கள்!
சிலை எடுப்பார்கள்!
ஆம்
வெறும் சிலையாக எஞ்சி விடப்போகும்
நம் காவிரி அன்னைக்கு
சிலை மட்டுமே எடுப்பார்கள்.
காவிரி இனி
நம் கண்களில் மட்டுமே
இத்தனை டி  எம் சி கண்ணீர்
அத்தனை டி எம் சி கண்ணீர்
என்று
புள்ளி விவரம்
சொல்லிக்கொண்டிருக்கும்.

=============================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக