திங்கள், 15 ஆகஸ்ட், 2016

மூன்றாவது சாளரம் (1) (நா.முத்துக்குமாரின் வானம் இது)


  புகைப்படம் :நன்றி."ஒரு ஊழியனின் குரல்"  திரு.எஸ்.ராமன் வேலூர்


மூன்றாவது சாளரம் (1)
===============================================ருத்ரா
(நா.முத்துக்குமாரின் வானம் இது)


கவி வேந்தனே!
வாழ்க்கையின் துருப்பிடித்த கம்பிகளில்
சன்னல் வார்த்துக்கொண்டோம்.
மனம்
பணம்
இந்த இரண்டு சன்னல்களில் தான்
உலகத்தின் முகங்கள் எல்லாம்
நசுங்கிக்கொண்டும்
பின்னமடைந்தும் தெரிகின்றன.

மனம் உள்ளவனே மனிதன்.
இவன் இலேசானவன்.
மனம் மூலம் வாழ்க்கையின்
இடைவெளிகளில் பிதுங்கிய மனிதம்
சமயங்களில்
ஆவியாய் காணாமல் போய் விடுவதுண்டு.

பணம் உள்ள மனிதன் கனமானவன்.
வாழ்க்கை ஆழத்தில்
இந்த கனமான நங்கூரத்தைப்
போட்டுத்தான்
மகிழ்ச்சிக்கப்பலில்
தன்னையும் குடும்பத்தையும்
நிலை நிறுத்தி நிறுத்தி
நகர்த்துகிறான்.

இதயங்கள் சிலிர்க்கும்
கவிஞனே!
உன் மூன்றாவது சாளரமான‌
அந்த கவிதைகளை
அகலத்திறந்து வைத்துக்கொண்டு
எங்கோ ஏதோ
ஒரு நட்சத்திரத்தின்
இதயக்காம்பில் உன் மனப்பூவை
செருகி வைப்பாய்.

இந்த மூன்றாவது சன்னலின்
திட்டில் அமர்ந்து
உன் உள்ளக்குழம்பை
உருக்கி வார்த்து
மின்னலின் நெளிவு சுழிகள் ஆக்கி
கவிதை விளாறுகளால்
வானத்தின் மீது வரிகள்
படர்த்துகின்றாய்.

கிரீடம் என்ற படத்தில்
வரும் பாடலின்
"அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்"
என்ற ஒற்றைவரியே
காதலின் வைரதூண்டில்.
இதன் "கதிரியக்கம்" தாங்காமல்
காதலின் மீன்கள் துடிக்கிற துடிப்பு
ஓவ்வொரு சொல்லிலும் எழுத்திலும்
தெரிகிறது.

பெண் என்பவள்
வெறும் அழகின் ஜியாமெட்ரி அல்ல.
அவள் உள்ளத்து ஆலையில்
கொதிக்கும்
ஒவ்வொரு நுண் சிறு குமிழிகளிலும்
கொத்துக் கொத்தாய்
பட்டாம்பூச்சிகள்.
அவை கூட அவளை
கொஞ்சம் கொஞ்சமாக தின்றுவிட்டு
உணர்ச்சிப்பிழம்பை மட்டுமே
மிச்சம் வைக்கும்!
அந்தக்காதல் ரசமே இவ்வரிகள்

"உன் தீண்டலில் என் தேகத்தில்
புது ஜன்னல்கள் திறப்பதை தெரிந்துகொண்டேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே"

நா.முத்துக்குமார் எனும்
கவிதை ஊற்றே !
பெண் எனும் தொட்டனைத்து ஊறும்
இன்பக்கேணியை
ஆழம் காணா கடலுள்
சுநாமியாக்கி சுருட்டிவைத்து
உன் பேனா வழியாய்
பொங்கிப் பிறளயம் ஆகின்றாய்.

(தொடரும்)









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக